மகத்தான பணி!

பல்லுயிர், பண்பாட்டியல் துறை வல்லுநர்கள் தமிழ்தாசன், ரவீந்திரன், விஸ்வநாத், பத்ரி நாராயணன், கார்த்திகேயன், அறிவுசெல்வம் உள்ளிட்டோரால் 2013 ஆம் ஆண்டில் "மதுரை பண்பாட்டுச் சூழலியல் பேரவை' தொடங்கப்பட்டது
மகத்தான பணி!


பல்லுயிர், பண்பாட்டியல் துறை வல்லுநர்கள் தமிழ்தாசன், ரவீந்திரன், விஸ்வநாத், பத்ரி நாராயணன், கார்த்திகேயன், அறிவுசெல்வம் உள்ளிட்டோரால் 2013 ஆம் ஆண்டில் "மதுரை பண்பாட்டுச் சூழலியல் பேரவை' தொடங்கப்பட்டது. இவர்கள் "பண்பாட்டுச் சூழல் நடை' என்ற சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வந்தனர். கரோனா உள்ளிட்ட சில சூழ்நிலைகள் காரணமாகவும் நிறுத்தப்பட்டிருந்த சுற்றுப்பயணம் அண்மையில் மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்தாண்டு 5 மாதங்களில் 400க்கும் மேற்பட்டோரை மஞ்சமலை, மறவப்பட்டி, விராதனூர். சிலம்பாடு, அழகர் கோவில் போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அந்த வகையில் மே 14இல் 6ஆவது பயணம் திருவாதவூரில் இருந்து புறப்பட்டு, இடையப்பட்டி காடு, அங்குள்ள வெள்ளிமலை முருகன் கோயிலுக்குச் சென்றடைந்தது.
இந்தப் பயணம் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் சிற்ப சாஸ்திர பயிற்சியாளரும், கல்வெட்டு சிற்பக் கலை ஆய்வாளருமான ப.அறிவுதேவி செல்வம் கூறியதாவது:
""பல்லுயிர்கள், பண்பாட்டு இடங்களைப் பற்றியும் வ்ழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், சூழலியல் சுற்றுப்பயணம் விடுமுறை நாள்களில் நடைபெறுகிறது. பயணம் மேற்கொள்ளும் இடங்கள், அதன் சிறப்புகள், தகவல்களை சமூக ஊடகத்தில் முன்கூட்டியே பகிர்ந்து விடுவதால், பலரும் பயணத்தில் இணைகின்றனர்.
கோயில்கள், கிராமங்களில் உள்ள கல்வெட்டுகளை சுருக்கமாக எடுத்துச் சொல்லுவது எனது பணி. அதிகமாக திருவாதவூரில் 56 கல்வெட்டுகளையும் அழகர்கோவிலில் உள்ள 126 கல்வெட்டுகளைக் கூறியிருக்கிறேன்.
அப்பன் திருப்பதி கிராமத்தின் சாலை இடது ஓரத்தில் சிறு பீடத்தின் மீது வெட்ட வெளியில் அப்பன் திருப்பதி என்று சொல்லப்படுகிற ஆஞ்சநேயர் என்ற நடுகல் ஒன்றை கண்டறிந்தேன். அது மூன்று அடி உயரமும். இரண்டரை அடி நீளமும், மேற்புறம் கூம்பு வடிவ அமைப்பிலான பலகை கல்லில் இந்த நடுக்கல் வீரனின் சிற்பம் காட்டப்பட்டிருந்தது. வலது பக்க இயக்க நிலையிலும், இடது கையானது இடுப்பில் அரை ஆடையுடன் கட்டப்பட்டுள்ள நீண்ட வாளினை பிடித்தபடியும், வலது கையில் ஓங்கிய வாளினை மேல் நோக்கி பிடித்தபடியும், பூசலுக்கு செல்வதை தெரிவிக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்தது. முகப்பகுதி லேசாக சிதைந்திருந்நது. நடுகல்லின் பின்புறம் மூன்று அடி உயரம் கொண்ட செவ்வக வடிவ பலகைக் கல்லில் ஆஞ்சநேயர் என தொடங்கும் தமிழ் எழுத்துகளுடன் கூடிய கல்வெட்டு ஒன்றும் காணப்பட்டது.
இந்த நடுகல்லின் இடுப்பில் கட்டப்பட்டிருந்த நீண்ட வாளானது விலங்கு வால் போன்ற தோற்றத்தை காட்டுவதுடன் இச்சிற்பம் இயக்க நிலையில் உள்ளதால் ஆஞ்சநேயர் வடிவத்துக்கு ஏற்ற நிலையில் காணப்பட்டது. இது போல திருமோகூர் சதிகல், மூன்று மாவடி நடுகல் போன்ற எண்ணற்ற கள ஆய்வுகளை; இச்சுற்றுப் பயணத்தின் ஊடாக தான் கண்டறிந்தேன்.
மதுரை திருமோகூரிலிருந்து திருவாதவூர் செல்லும் வழியில் உள்ளது இடையப்பட்டி வனப்பகுதியில், "கடம்பமரம்' பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது. பறவைகள், விலங்குகள் என பல்லுயிர்கள் வாழுகின்றன இந்த வனப்பகுதியில் சாம்பல் நிற தேவாங்குகள், அரியவகை தென் மாநில முள்ளெலிகள் இருக்கின்றன.
13ஆம் நூற்றாண்டில் ஆமூர் பகுதியில் இருந்த கல்வெட்டு இடையப்பட்டியில் இருந்தது.
இந்தப் பண்பாட்டுச் சூழலியல் பேரவை அமைப்போடு நானும் இணைந்து இதுவரைக்கும் சுமாராக 500க்கும் மேற்பட்ட ஊர்வனங்கள். பறவை, தாவரங்கள் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தியுள்ளோம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com