ஆதரவற்றோருக்கு ஆதரவாக..!

ஆதரவற்றோர், வசதி வாய்ப்பற்றோரின் உடல்களை அடக்கம் செய்வதையே லட்சியம்''  என்கிறார் ஆற்காட்டைச் சேர்ந்த சமூக சேவகர் எஸ்.ஆர்.பி.பென்ஸ் பாண்டியன்.
ஆதரவற்றோருக்கு ஆதரவாக..!


"ஆதரவற்றோர், வசதி வாய்ப்பற்றோரின் உடல்களை அடக்கம் செய்வதையே லட்சியம்''  என்கிறார் ஆற்காட்டைச் சேர்ந்த சமூக சேவகர் எஸ்.ஆர்.பி.பென்ஸ் பாண்டியன்.  கடந்த 15 ஆண்டுகளில்  275 பேரின் உடல்களை தனது சொந்தச் செலவிலேயே  அடக்கம் செய்துள்ளார்.

1996-ஆம் ஆண்டு முதல் 2006 வரையில் ஆற்காடு நகர்மன்றத்தின் உறுப்பினராக இருந்தார். இவரது மனைவி தேவி பென்ஸ் பாண்டியன் நகர்மன்றத் தலைவராக உள்ளார்.

பென்ஸ் பாண்டியனிடம் பேசினோம்.

இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

1998-ஆம் ஆண்டில் நகர்மன்ற உறுப்பினராக இருந்தேன்.  அப்போது,  காவல் துறையின் தனிப்பிரிவில் பணியாற்றிய காளிமுத்து என்பவர் என்னிடம், " அடையாளம் தெரியாதவர்களின் சடலங்கள் அரசு மருத்துவமனைகளில் கேட்பாரற்று கிடக்கின்றன. இவற்றை அடக்கம் செய்தால் மிகப் பெரிய புண்ணியம் கிடைக்கும்' என்று சொன்னார். அவர் கூறியதை வேத வாக்காக ஏற்றுகொண்டேன்.  இன்று வரையில் தொடர்ந்துகொண்டிருக்கிறேன்.

அன்று முதல் தற்போது வரையில் 271 பேரின் சடலங்களை மயானத்தில் அவர்கள் சார்ந்த மத வழிபாட்டு முறைப்படியே அடக்கம் செய்துவருகிறேன்.  

அடையாளம் தெரியாமல் இறந்து கிடப்போர், விபத்துகளில் இறந்தோர் சடலங்களை காவல் துறை, வருவாய்த் துறையின் முறைப்படி  அனுமதி பெற்று,  இந்தப் பணியை மேற்கொள்கிறேன். பலர் வசதி வாய்ப்பில்லாத சூழ்நிலையில் இறந்த தங்களது உறவினர்களை அடக்கம் செய்யுமாறும் என்னிடம் வருவார்கள். இதுபோன்றவர்களின் சடலங்களையும் முறைப்படி அனுமதி பெற்று அடக்கம் செய்கிறேன். 

நெஞ்சை வருடிய நிகழ்வுகள் ஏதேனும் உள்ளதா?

ஆற்காடு அருகேயுள்ள ரத்தினகிரி மேம்பாலம் அருகே ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் இரவு நேர விபத்து ஒன்றில், ஒருவர் இறந்தார். அந்த உடல் மீது நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஏறியதால்,  அந்த உடல் சிதைவுற்றது.   விபத்தின்போது, தலையின் மேல் கவசம் கழன்றதால்,  "கிராப்' முடியைப் பார்த்து அவர் ஆண் என்று முடிவு செய்தோம். அவர் குறித்த வேறு எந்தத் தகவலும் தெரியவில்லை. வாகனப் போக்குவரத்தைச் சிறிதுநேரம் நிறுத்தி,  தார்ச்சாலையில் உடல் சிதைவுகளைச் சுரண்டி சுரண்டி எடுத்து 18 கிலோ எடையில் உடல் சதைப்பகுதிகளைக் கொண்டு சென்று அடக்கம் செய்தது எனது வாழ்க்கையில் மறக்க முடியாதச் சம்பவம்தான்.

இதுபோன்று,  மனநலம் பாதிக்கப்பட்டோரின் வீட்டில் அவர்களது உறவினர்கள் இறந்த நிலையில், சடலங்களை அடக்கம் செய்வதும் நெஞ்சில் நிறைந்திருக்கும்.

உங்கள் இதர சேவைப் பணிகள் என்ன?

நகர்மன்ற முன்னாள் உறுப்பினராக,  ஆற்காடு நகரின் வளர்ச்சிக்காக எப்போதும் பாடுபட்டு கொண்டிருக்கிறேன்.  இதுதவிர, பல்வேறு அறக்கட்டளைகள் மூலமும், முதியோர் இல்லம் போன்றவற்றிலும் எனது சேவைப் பணிகள் தொடர்கின்றன.

அனைவரும் தங்களது ஓய்வு நேரத்தில், பொதுநலத்தோடு பிறருக்கு உதவும் மனப்பான்மையை ஏற்க வேண்டும்.   அதேபோல், ஆங்காங்கே அரசு மருத்துவமனைகளில் கேட்பாரற்று கிடக்கும் சடலங்களை அடக்கம் செய்வது மிகவும் பெரிய புண்ணியத்தைத் தரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com