சொல்ல முடியாதவற்றுக்குக் குரல் கொடுப்பவர்!

நார்வே நாட்டைச் சேர்ந்த அறுபத்து நான்கு வயதான ஜான்ஓலாவ்ஃபோஸுக்கு இலக்கியத்துக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது.
சொல்ல முடியாதவற்றுக்குக் குரல் கொடுப்பவர்!

நார்வே நாட்டைச் சேர்ந்த அறுபத்து நான்கு வயதான ஜான்ஓலாவ்ஃபோஸுக்கு இலக்கியத்துக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்,  நாடக ஆசிரியர் உள்பட பல்வேறு தனித்திறன்களைக் கொண்டவர்.  நார்வே நாட்டிலிருந்து நோபல் பரிசு பெறும் நான்காவது நபர். சொல்ல முடியாதவற்றுக்காகக் குரல் கொடுக்கும்  அவருடைய புதுமையான நாடகங்கள்- உரைநடைகள்தான்  நோபல் பரிசுக்குத் தேர்வானதாகத் தேர்வுக் குழுவினர் அறிவித்துள்ளனர். 
''அற்புதமான எழுத்தாளரான அவரது எழுத்துகளைப் படிக்கும்போது,   மனதை மிகவும் ஆழமாகத் தொடுகிறார்.  ஆழ்மன உணர்வுகள், கவலைகள், பாதுகாப்பில்லாத வாழ்க்கையின் சூழல்கள், வாழ்க்கை,  இறப்பு குறித்து மனித மனங்களில் எழும் கேள்விகள் என பல்வேறு விஷயங்களையும் அவர் தன் எழுத்தின் மூலமாகத் தொட்டுச் செல்கிறார். அவருடைய  நாடகம், கவிதை, உரைநடை என எழுத்தின் எந்த வடிவத்திலும் மனிதநேயம் அடிநாதமாக விளங்குகிறது' என்கிறார் இலக்கியத்துக்கான நோபல் பரிசு குழுத் தலைவர்  ஆண்டர்ஸ் ஓல்சன். 
செய்திகள் ஊடகங்களிலும் வெளியானதைத் தொடர்ந்து, சில மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்கள் வந்து குவிந்துவிட்டன.  அவற்றைப் பார்த்து,  'மக்கள் என் எழுத்தின் மீது இத்தனை மதிப்பு வைத்திருக்கிறார்களா? எனது எழுத்து இவர்களது வாழ்க்கையில் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா?' என்று மனம் மகிழ்ந்தார்.
குறிப்பாக,  ஒரு கிரேக்கப் பெண்மணி எழுதிய கடிதத்தில், ''ஃபோஸ் எழுதிய 'மரண மாறுபாடுகள்'  என்ற நாடகத்தைப் படித்ததன் காரணமாகத்தான் நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். இல்லையெனில் எப்போதோ மரணத்தைத் தழுவி இருப்பேன்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். 
ஏழு வயதில் ஏற்பட்ட ஒரு பயங்கரமான விபத்தில்  ஜான்ஓலாவ்ஃபோஸ்  உயிர்ப் பிழைத்ததே  அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம்தான். அந்த விபத்துக்குப் பிறகு, அவருக்குள்ளே இருந்த கலைத்திறமையை வெளிப்பட்டது.  கிடார் இசைக்கக் கற்றுக் கொண்டு,  இசைக்கலைஞராக விரும்பினார். இருபத்து நான்கு வயதில் இவர் எழுதிய முதல் நாவலின் தலைப்பு சிவப்பு-கறுப்பு.  1994-இல் இவரது முதல் நாடகம் மேடை ஏறியது.  மிக அதிக எண்ணிக்கையில் நாடகங்கள் மேடையேறிய நார்வேஜிய நாடக ஆசிரியர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. 
நார்வேயையும்,  ஆஸ்திரியாவையும் வசிப்பிடங்களாகக் கொண்டிருக்கும் ஜான்ஃபோஸ்,  நார்வேஜிய மொழியில்தான் எழுதுகிறார்.  குறிப்பாக,  நார்வே நாட்டு மக்கள் பேசும் நார்வேஜிய மொழியின் இரண்டு வடிவங்களில் ஒன்றான  நீநொர்ஸ்க் என்ற மொழியில்தான் எழுதுகிறார். இவரது எழுத்து நடை எளிமையான, குறைவான, ஆழமான உரையாடல்கள் கொண்டது என வகைப்படுத்தப்படுகிறது.  இவர், நாடகங்கள், நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், குழந்தை இலக்கியம் என பல்வேறு இலக்கியத் தளங்களிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறார். இதுவரை இவர் எழுதி இருக்கும் நாடகங்கள் மட்டுமே நாற்பதுக்கும் அதிகம். இவரது எழுத்துகள் பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும், ஆங்கிலத்திலுமாக மொத்தம் ஐம்பது மொழிகளில்  மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. 
பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருமுறை ஜான்ஓலாவ்ஃபோஸின்  பெயர் நோபல் பரிசுக்குப் பரிசீலனையில் இருந்தது. ஆனால் பரிசு கிடைக்கவில்லை. அப்போது ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது ஃபோஸ் கூறுகையில், ''பரிசு பெற ஆசைதான். பரிசு கிடைக்கவில்லை என்று அறிந்தபோதும் எனக்கு மகிழ்ச்சிதான்!  காரணம், இந்தப் பரிசு மிகவும் வயதான எழுத்தாளர்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது. அதில் ஒரு நியாயமும் உள்ளது. அப்போதுதான் அவர்கள் எழுத்தை இந்த விருது பாதிக்காது'' என்றார்.
அவர் இளம் எழுத்தாளர்களுக்குக் கூறும்போது, ''நீங்கள் உங்கள் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். உங்களின் உள்ளே இருந்து  எழும் குரலை கவனிக்க வேண்டும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள். எனது முதல் நூல் வெளியானபோதும், முதல் நாடகம் மேடை ஏறியபோதும், மிக மோசமான விமர்சனங்கள் வந்தன. நான் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் புறக்கணித்துவிட்டு,  என் மனதின் குரலைக் கேட்டேன். அதுதான் எனக்கு நல்ல எழுத்து எது என்பதை புரியவைத்தது'' என்கிறார்.
நார்வேஜிய மொழியின் வேர்களையும், நார்வேயின் கலாசார, பாரம்பரியப்  பின்னணியையும் ஆழமாகப் புரிந்துகொண்டு, கலைநுட்பத்துடன் நவீன கருத்துகளையும் தனது எழுத்தில் கொண்டுவருவது இவரது பலம் என்று ஐரோப்பிய இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள்.  ஒருவகையில் இதுவே அவரது பலவீனமும் கூட.  
அமெரிக்காவிலும்,  பிரிட்டனிலும் இவரது எழுத்துக்கு கணிசமான அளவில் வாசகர்கள் இல்லை.
ஸ்டாகோம் நகரில் வரும் டிச. 10-இல் நடைபெற உள்ள வண்ணமிகு விழாவில்,   ஜான் ஃபோசுக்கு நோபல் பரிசும், ரூ.8.30 கோடியும் (இந்திய மதிப்பில்) ரொக்கமும் அளிக்கப்பட உள்ளது.
ஜான்ஓலாவ்ஃபோஸின் படைப்புகள் ஓர் பார்வை    தனது எண்ணங்களையோ, கருத்துகளையோ எழுத்தின் மூலமாக வாசகர்கள் மீது திணிப்பது இவருக்குப் பிடிக்காது. 'எழுதும்போது, நான் என்னிலிருந்து விடுபட்டு, ஓர் புதிய உலகத்துக்குள் பயணிக்கிறேன்.  அது நான் பார்க்கிற இந்த உலகத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது.  அங்கே எனக்கு இருக்கும் மனோநிலையும் வேறுபட்டதுதான். எழுதும்போது, எனக்கு மகிழ்ச்சி ஏற்படுகிறது.  என்னால் நன்றாக எழுத முடிகிறது.  எழுத்தில் நான் மூழ்கிவிட்டால், எனக்கு நேரம் போவதே தெரியாது' என்பார்  ஃபோஸ்.
'அவசியமில்லாத ஒரு வார்த்தையைக் கூடப் பயன்படுத்தக் கூடாது'  என்பது இவரது தீவிரமான கொள்கை. இவரது வார்த்தை சிக்கனத்தை இலக்கிய வட்டாரத்தில் 'ஃபோஸ் மினிமலிசம்' என்றே குறிப்பிடுகிறார்கள். 
இவர் எழுதிய முதல் நாவல்  சிவப்பு-கறுப்பு தற்கொலையைப் பற்றி விவாதித்தது. ஆரம்பக் காலத்தில் இவர்  எழுதிய  'படகு வீடு'  என்ற நாவல் இவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது.   ஒரு வீட்டில் தனிமையில் வசிக்கும் முப்பது வயது மனிதனைப் பற்றிய கதை அது. 'பெயர்' என்ற நாடகம்  தன் கணவனது வருகைக்காகத் தனது தாய் வீட்டில் காத்துக் கொண்டிருக்கும் ஒரு கர்ப்பிணியைப் பற்றிய கதை. 'இரவுப் பாடல்' என்ற நாடகம், வேறு ஒரு ஆணுக்காக, தன் கணவனை விட்டுப் பிரிய நினைக்கும் ஒரு பெண், அது குறித்த முடிவெடுக்கத் திணறுவதை  படம் பிடிக்கிறது. 
1999-இல் பிரெஞ்சு  நாடக இயக்குநர் ஃபோஸின் 'யாரோ வரப்போகிறார்கள்' என்ற நாடகத்தை பாரிசில் அரங்கேற்றியது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  அவரது 'மரணமாறுபாடுகள்' என்ற  ஓரங்க  நாடகமும் தற்கொலையைப் பற்றியதுதான்.  தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கும் ஒரு பெண், தன் முடிவினை கேள்விக்குள்ளாக்கும் கதை.  
'நான் காற்று' என்ற நாடகம்  கடலில் ஒரு மீன்பிடி படகில் தனித்துவிடப்பட்ட இரண்டு பேருடைய வாழ்க்கைப் போராட்டம் பற்றியது.  2007 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் இவர் 'விழிப்பு', 'ஒலவின் கனவுகள்', 'சோர்வு' என்று மூன்று நாவல்களை எழுதினார். மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாகத் தொடரும் ஒரே கதை.  அது  அஸ்லே, அலிடா  என்ற தம்பதியில் தொடங்கி, அடுத்தடுத்த தலைமுறையினரது கதையாகத் தொடர்ந்தது.  இதற்காக, ஃபோசுக்கு நார்டிக் கவுன்சில் இலக்கிய விருது கிடைத்தது. 
ஃபோஸின் படைப்பு என புகழப்படுவது அவர்  எழு தொகுதிகளாக எழுதிய  'செப்டாலஜி' ஆகும். 2012-இல் ஃபோஸ் நாடகங்கள் எழுதுவதையும்,  மது அருந்துவதையும் நிறுத்திவிட்டு,  இந்தப் பணியைத் துவக்கினார். 
மற்றொரு பெயர்,  நான் வேறு மனிதன்,  ஒரு புதிய பெயர் என்ற தலைப்புகளில் வெளியான இவற்றை எழுதுவதற்கு ஃபோஸ் சுமார் ஒன்பதாண்டுகள் எடுத்துக் கொண்டார். அஸ்லே என்று ஒரு ஓவியர். தன் மனைவியின் மரணத் துயரத்தில் வாடுகிறார். இன்னொரு ஓவியர். அவர் பெயரும் அஸ்லேதான். அவர்,  மதுவுக்கு அடிமையாகி மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.  இருவரது வாழ்க்கை முரண்பாடுகள், போராட்டங்களை நுணுக்கமாக விவரிக்கிறார் ஆசிரியர். முற்றுப் புள்ளியைத் தவிர்த்து எழுதப்பட்டது என்ற சிறப்பும் இந்த நாவலுக்கு உண்டு.   தன் படைப்புகளுக்காக 1992-இல் நீநொர்ஸ்க் இலக்கிய விருது  தொடங்கி 2023-இல் இலக்கிய நோபல் பரிசு வரை 23 விருதுகள் பெற்றிருக்கிறார்.       

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com