பெய்யென பெய்யும் மழை

மழைக்காலம் வந்துவிட்டாலே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தின் மீது பெரும்பாலானோருக்குத் தனி ஈர்ப்பு வந்துவிடும்.
பெய்யென பெய்யும் மழை


மழைக்காலம் வந்துவிட்டாலே, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தின் மீது பெரும்பாலானோருக்குத் தனி ஈர்ப்பு வந்துவிடும். வானிலை மைய இயக்குநரும் தினமும் புயல், மழை நிலவரம் குறித்த தகவல்களை ஊடகங்களுக்குத் தெரிவிப்பார். ஆனால், அண்மையில் பல தனியார் வானிலை ஆர்வலர்கள் சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.

இன்றைக்கு தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான். கன்னியாகுமரியை பூர்விகமாகக் கொண்ட பொறியாளரான இவர், சென்னையில், ஒரு அரசு சார் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.
அவருடன் ஓர் சந்திப்பு:

உங்களுக்கு வானிலை விஷயத்தில் எப்போது, எப்படி ஆர்வம் ஏற்பட்டது?

சிறு வயதில் இருந்தே எனக்கு மழை என்றால் ரொம்பப் பிடிக்கும். சென்னையில் 1994-ஆம் ஆண்டு அக்டோபர் 30 இல் ஒரு புயல் அடித்தது.

அப்போதெல்லாம் புயல்களுக்குப் பெயர் கிடையாது. மிகக் கடுமையான மழை.

அப்போது எங்கள் வீட்டு ஜன்னல் வழியாகத் தொடர்ந்து மழை பெய்வதையே வேடிக்கை பார்த்துகொண்டிருந்தேன். என்னுடைய பள்ளி நாள்களில் வானிலை குறித்த செயற்கைக்கோள், காற்றழுத்த வரைபடங்களையும் ஆர்வத்துடன் கவனிப்பேன். அவற்றுக்கான செய்திகளையும் படித்து, என் ஆர்வத்தை வளர்த்துகொண்டேன்.

நாட்டில் எங்கே மழை பெய்தாலும், அதுதொடர்பான செய்திகளைக் கவனத்துடன் அறிவேன். புயல் எச்சரிக்கைகள் குறித்து சொல்லப்படும் விஷயங்களையும், செய்திகளையும் ஒப்பிட்டுப்பார்ப்பேன்.

பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது, இணையதளத் தொழில்நுட்பம் அறிமுகமாகியது.

அதன் மூலமாக காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்றால் என்ன?, அது எப்படி புயலாக மாறுகிறது? , புயலை ஆங்கிலத்தில் பல பெயர்களால் குறிப்பிடுகிறார்களே, அவை ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம்? , அவற்றின் வித்தியாசம்? அவற்றின் தாக்கம் எப்படி மாறுபடும்? என்றெல்லாம் தெரிந்துகொள்ள முடிந்தது.

வானிலை ஆராய்ச்சியாளராக மாறியது எப்படி?

எம்.பி.ஏ. முடித்த நேரத்தில், சென்னையைச் சேர்ந்த ராகேஷ் என்பவர், "இந்தியன் வெதர்மேன்" என்ற வலைப்பதிவின் மூலமாக வானிலை குறித்த கருத்துகளைப் பதிவு செய்தார்.

"கியா வெதர்' என்ற வலைப்பதிவிலும் தகவல்கள் வெளியாகும். மும்பையில் ராஜேஷ் கபாடியாவும் வானிலை தொடர்பாக சிறப்பாகச் செயல்பட்டு வந்தார். இவர்களின் எழுத்துகளைப் படித்து, நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டேன். அதிக மழை பெறும் இடங்கள் மீது பெரும் ஆர்வம் ஏற்பட்டு, ஏராளமான தகவல்களை சேகரித்தேன். 2010இல், நானும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்தேன். அதன் பெயர்: "தமிழ்நாடு வெதர்மேன்" .

அதற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

மழை, புயல் பற்றிய தகவல்களை, "தமிழ்நாடு வெதர்மேன்' வலைப்பதிவில் பகிர்ந்துகொண்டேன். பெரிதாக மக்கள் கவனத்தை ஈர்க்கவில்லை என்றபோதும், நான் மனம் தளரவில்லை.

இன்று நிறைய பேர் வாசிக்கின்றனர். முகநூலில் 8.80 லட்சம் பேர், டுவிட்டரில் 4.79 லட்சம் பேரும் என்னை பின் தொடர்கிறார்கள். தினமும் வானிலை தொடர்பான தகவல்களை பதிவு செய்வது இல்லை. மழைக் காலத்தில் மட்டுமே என் செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்கும்.

இது எப்படி சாத்தியமானது?

மழை, புயல் நிலவரங்கள் குறித்து கிடைக்கும் தகவல்களை அலசி ஆராய்ந்து அடுத்து என்ன நிகழக் கூடும் என கணித்து, அந்தத் தகவல்களை நான் பகிர்ந்துகொள்கிறேன்.

அதே போல நிகழும்போது, என்னுடைய எழுத்துக்கு நம்பகத்தன்மை அதிகரிக்கிறது. ஒவ்வொரு மழைக் காலத்திலும் என்னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.

மறக்க முடியாத அனுபவங்கள்?

2015இல் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. கொட்டும் மழையிலும், மழை குறித்த தகவல்களை தொடர்ந்து அளித்து வந்தேன். ஒரு கட்டத்தில் "வீட்டை விட்டு வெளியில் வராதீர்கள். அலுவலகங்களில் இருப்பவர்கள், வீட்டுக்குப் புறப்பட்டு விடுங்கள்" என எச்சரித்தேன். நானும் கொட்டும் மழையிலும், போக்குவரத்து நெரிசலிலும் சிக்கித் தவித்து, வீடு வந்து சேர்ந்தேன். இரவு முழுக்க நான் தூங்காமல், பதிவிட்டுகொண்டே இருந்தேன். அதிகாலையில், "சென்னை மழை ஓய்ந்துவிட்டது! இனி மழை பெய்யாது!" என்று தகவல் பதிவிட்டுதான் தூங்கப் போனேன். எனது பதிவுகளைத் தொடர்ந்து படித்தவர்கள் பலரும் எனது சரியான பதிவுகளைப் பாராட்டினர்.

2016இல் வார்தா புயல் மறக்கவே முடியாத ஒரு அனுபவத்தைக் கொடுத்தது. அப்போது மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் காற்று அடிக்கும் என்று சொன்னேன். வீட்டில் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு கவனித்தபோது, மணிக்கு 70, 80, 90, 100 கி.மீ. என்று வேகம் அதிகரித்துக் கொண்டே போனது. அந்தக் காற்று ஊளையிடுவது போன்ற சப்தத்தில் இருந்தது. நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது இதே போல அதிவேகத்தில் புயல் காற்று வீசியதும், என்அப்பா எச்சரித்து, ஜன்னலை மூடியதும் நினைவுக்கு வந்தது.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6இல் சென்னையில் திடீர் மழை வர வாய்ப்பு உள்ளது. மழை கால் மணி நேரத்துக்கு மட்டுமே நீடிக்கும் என்று சொல்லி, அன்றைய வானிலை சூழ்நிலையையும் விளக்கி இருந்தேன். அவ்வாறே பல்வேறு இடங்களில் 20 நிமிடங்கள் வரையே மழை பெய்தது.

மறுநாள் காலை சென்னையில் ஒரு மாரத்தான் ஓட்டம் நடக்கவிருந்த சூழ்நிலையில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பயந்தார்கள். ஆனால், நான், "மழை பெய்து முடித்துவிட்டது. நீங்கள் திட்டமிட்டபடி, காலையில் மாரத்தான் ஓட்டத்தை நடத்தலாம்" என்றேன். அதுபோலவே மாரத்தான் ஓட்டமும் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது.

வானிலை அறிவிப்பை கிண்டல் செய்து பத்திரிகைகளில் வரும் ஜோக்குகளைப் பற்றி...

பல நேரங்களில் படித்துவிட்டு, சிரித்துவிட்டோ, சிரிக்காமலேயோ கடந்து போய்விடுவேன். சில சமயங்களில், தவறான புரிதலோடு கிண்டல் செய்து எழுதி இருக்கிறார்களே? என்று இவர்களுக்கு உண்மை என்ன என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியது அவசியம் என நினைத்துக் கொள்வேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com