உலகின் முதல்  மிதக்கும்  செயற்கை நகரம்

உலகின் முதல் மிதக்கும் செயற்கை நகரம் மாலத் தீவுகளில் உருவாகிவருகிறது.
உலகின் முதல்  மிதக்கும்  செயற்கை நகரம்


உலகின் முதல் மிதக்கும் செயற்கை நகரம் மாலத் தீவுகளில் உருவாகிவருகிறது.

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் வெப்பநிலையால், புவியின் வடக்கு, தெற்கு துருவங்களில் இருக்கும் பனிமலைகள் உருகுகின்றன. இதனால் ஏற்படும் நீர் கடலில் கலந்து, புவியைச் சூழ்ந்திருக்கும் கடலின் நீர் மட்டம் உயருகிறது.

உயரும் கடல்நீர் மட்டம், புவியின் நிலப்பரப்பை நோக்கி விரிவடைந்து நிலத்தை விழுங்கி வருகிறது. இதனால், நிலப்பரப்பு நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. அதனால், உலகில் இருக்கும் தீவுகள் மெல்ல, மெல்ல கடலில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல தீவுகள் கடலுக்குள் மறைந்தும்விட்டன. இந்தவகை அபாயத்துக்கு உள்ளாகியிருப்பவைதான் மாலத் தீவுகள்.

இந்தியப் பெருங்கடலில், திருவனந்தபுரத்துக்குக் கீழே சுமார் 720 கி.மீ. தூரத்தில், சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற மாலத் தீவுகள் அமைந்திருக்கின்றன. புவியில் நிலவும் காலநிலை மாற்றத்தால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் இயற்கை அழகு கொண்ட மாலத் தீவுகள், பிரமாண்ட பவளப் பாறைகளின் மீது உருவானவை.

இந்தத் தீவுகளின் நிலப்பரப்பு கடல் மட்டத்தைவிட கொஞ்சம் தாழ்ந்து இருப்பதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் இந்தத் தீவுகளின் பெரும்பகுதி
கடலுக்குள் மூழ்கும் என்று அபாயச் சங்கு ஊதப்பட்டுவிட்டது.

2004ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின் போது ராட்சத கடல் அலைகளால் மாலத்தீவுகள் பலத்த சேதங்களுக்கு உள்ளானது.

சுமார் 1,200 பவளத் தீவுகளைக் கொண்ட மாலத் தீவுகளில் 187 தீவுகளில் மட்டுமே மக்கள் வாழுகின்றனர். கடல் மட்டம் உயர்வதை யாராலும் தடுக்க முடியாத சூழ்நிலையில், இன்றைய மாலத் தீவு வாழ் மக்களின் சந்ததிகள் தொடர்ந்து அந்தந்த தீவுகளில் வாழ மிதக்கும் நகரங்களை செயற்கையாக உருவாக்குவதுதான் தீர்வு என்று மாலத் தீவுகள் அரசு முடிவு செய்துள்ளது.

"சொர்க்கத்தின் ஒரு பகுதி' என அழைக்கப்படும் மாலத் தீவுகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரம் சுற்றுலாவை மட்டுமே சார்ந்துள்ளது. இதன் தலைநகரான "மாலே'யில் அதிக மக்கள் நெருக்கடியாக வாழ்கின்றனர்.

"மாலே'யிலிருந்து சற்று தள்ளி முதல் கட்டமாக சுமார் 20 ஆயிரம் குடியிருப்பு வீடுகளை கடலில் உருவாக்கும் திட்டத்தை மாலத் தீவு அரசு, நெதர்லாந்து கட்டுமான நிறுவனமான "வாட்டர் ஸ்டுடியோ' உடன் இணைந்து நிர்மாணப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

வரும் ஆண்டு (2024) இந்த மிதக்கும் நகரம், மக்களின் பயன்பாட்டுக்குவரும். "வாட்டர் ஸ்டுடியோ' நூற்றுக்கணக்கான மிதக்கும் குடியிருப்புகள், அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை வடிவமைத்து உருவாக்குவதில் அனுபவம் உள்ள நிறுவனம் ஆகும்.

துபையில் "பாம் ஜூமைரா' என்ற பெயரில் ஆயிரக்கணக்கான "வில்லா'க்களைக் கடலில் கட்டியுள்ளனர். ஆனால் அவை மிதக்கும் "வில்லா'க்கள் அல்ல. உலகின் மிதக்கும் நகரம் என்று சொல்லப்படும் வெனிஸ் நகரில் படகில்தான் பயணிக்க வேண்டும்.

சில தீவுகளை, சதுப்பு நிலத்தை இணைத்து வெனிஸ் நகரம் உருவாக்கப்பட்டது. நிலத்தில் அங்கு அபரிமிதமாகக் கிடைக்கும் அல்டர் மரங்களை நிலத்துக்குள் காங்கிரீட் தூண்கள் போல அடித்து இறக்கி அதன்மேல் வலுவான பரண் அமைத்து கட்டடங்களை எழுப்பியுள்ளனர். கடல் நீர் இந்த மரங்களை இன்னும் உறுதிப்படுத்துமாம்.

ஆனால், மாலத் தீவில் எப்படி மிதக்கும் கட்டடங்கள் கட்டப்படப் போகின்றன என்பது குறித்து இதுவரை தகவல்கள் இல்லை. மாலத்தீவின் மிதக்கும் நகரத்தில் 2 சதுர கி.மீ பரப்பில் வீடுகள், உணவகங்கள், கடைகள், பள்ளிகள் மற்றும் உணவு, தங்கும் விடுதிகள் ஹோட்டல்கள் உள்ளிட்ட சுமார் 20 ஆயிரம் கட்டடங்கள் அமையும். உலகின் முதல் மிதக்கும் செயற்கை நகரமும் ஒரு சுற்றுலாத் தலமாக மாறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com