போற்றப்படும் சுடுமண் கலை

தமிழக வரலாற்றில் சுடுமண் கலையானது சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. சுடுமண் கலைநுட்பத்தில் பண்டைய தமிழர்கள் தேர்ச்சி பெற்று விளங்கியிருக்கின்றனர்.
போற்றப்படும் சுடுமண் கலை

தமிழக வரலாற்றில் சுடுமண் கலையானது சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. 
சுடுமண் கலைநுட்பத்தில் பண்டைய தமிழர்கள் தேர்ச்சி பெற்று விளங்கியிருக்கின்றனர். அவர்கள் பயன்படுத்திய மட்கலங்கள், பானைகள், கூரை ஓடுகள், செங்கற்கள், சுடுமண் பொம்மைகள், விலங்கு உருவங்கள் அகல் விளக்குகள் போன்றவை சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. 
பண்டைய தமிழர்கள் சுடுமண் கலையில் பொம்மைகள்,  மனித வடிவங்கள், விலங்கு உருவங்கள் உருவாக்குவதில் சிறந்து விளங்கியிருப்பதை இலக்கியம், அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. 
சுடுமண் பாவைகளைச் செய்தது பற்றி சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இந்த வடிவங்களை செய்பவர்கள் "மண்ணீட்டாளர்" என அழைக்கப்பட்டனர்.  களிமண்ணால் பொம்மைகளைச் செய்து தீயிலிட்டுச் சுடப்பட்டதாகும். எனவேதான் சுடுமண் பொம்மைகள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
பண்டைய நாளில் இளம்பெண்கள் ஆறு, கடற்கரைப் பகுதிகளில் மண் பொம்மைகளை செய்து விளையாடினர் என சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
"திணி மணல் செய்வுறு பாவை" எனப் புறநானூற்றுப்பாடல் குறிப்பிடுகிறது. "தருமணற் கிடந்த பாவை" என அகநானூற்றுப்பாடல் குறிப்பிடுகிறது. இவை வண்டல் மண்ணால் செய்யப்பட்டன என்பதை 
மகளிர் வார் மணல் இழைத்த வண்டற்பாவை" என நற்றிணை குறிப்பிடுகிறது.
சுடுமண் பொம்மைகள் புதிய கற்காலப் பண்பாட்டிலிருந்தே நமக்கு கிடைக்கின்றன. திருப்பத்தூர் அருகே பையம்பள்ளி, தருமபுரி அருகே மோதூர் உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் பல சுடுமண் பொம்மைகள் கிடைத்துள்ளன. 
பின்னர் 2,800 ஆண்டுகளுக்கு முன்னர், தொன்மைச் சிறப்புமிக்க பெருங்கற்கால ஈமச்சின்னங்களிலிருந்தும், தொடர்ச்சியாக வரலாற்றுக் காலத்திலும் பல இடங்களில் மேற்பரப்பு ஆய்விலும், அகழ்வாரய்ச்சிகளிலும், சுடுமண் பொம்மைகள் கிடைந்துள்ளன. 
நீலகிரி, தருமபுரி மாவட்டம் கடத்தூர், ஆதிச்சநல்லூர், கொடுமணல், பொருந்தல், கரூர் போன்ற வரலாற்று சிறப்பு மிக்க இடங்களிலும் சுடுமண் பொம்மைகள் கிடைந்துள்ளன. கோவை மாவட்டத்தில் போளுவாம்பட்டி ஆகிய இடங்களிலும்,  தருமபுரி மாவட்டத்தில் இண்டூர், மாட்லாம்பட்டி, பனையகுளம் ஆகிய இடங்களிலும், திருக்காம்புலியூர், கருவூர், காஞ்சிபுரம், உறையூர், மாங்குடி, அரிக்கமேடு, பாலூர், சேந்தமங்கலம், ஆண்டிப்பட்டி, மாமல்லபுரம் (சாளுவன்குப்பம்), திருக்கோயிலூர் போன்ற ஊர்களிலும் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்துள்ளன. இவைகளில் சிலவற்றில் குழந்தையை ஏந்திய பெண் உருவங்களும் கிடைத்துள்ளன.
காவிரிப்பூம்பட்டினம், கீழடி, திருக்கோவிலூர் ஆகிய ஊர்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த சுடுமண் பொருள்களில் பானைமீது உருவங்களை ஒட்டி அழகுப்படுத்தி பயன்படுத்தி வந்துள்ளதையும் காண முடிகிறது. மேலும் சுடுமண் பொம்மைகளை உருவாக்குவதற்கு வேண்டிய அச்சும், கீழடி, பட்டரைப்பெரும்புதூர் போன்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. கோவை அருகே போளுவாம்பட்டி ஊரில் கள ஆய்வில் கிடைத்த சுடுமண் பொம்மைகளின் தலை அலங்காரம், புத்தர் திருமேனியின் வடிவமைப்புடன் காணப்படுவது சிறப்பானது.
புதிய கற்காலத்திலிருந்து தொடர்ச்சியாக கிடைத்துவரும் சுடுமண் பொம்மைகள் பண்டைய மக்களின் தாய்தெய்வ வழிபாடு, இறை நம்பிக்கை போன்றவை எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளன. 
இன்றும் கிராமத்துக் கோயில்களில் வழிபடப் பெறும் சுடுமண் அய்யனார், குதிரை, மற்றும் அம்மன் கோயில்களில் காணிக்கையாக அளிக்கப் பெறும் உருவாரங்களுக்கும் பண்டைய சுடுமண் பொம்மைகள் முன்னோடியாக விளங்குகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com