தைரியமாக எடுக்கலாம் - வெற்றி பெறும்!

சென்னையின் வரலாற்றுப் பாரம்பரியப் பெருமைகளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் "சென்னை வாரம்'  கொண்டாடப்படுகிறது.
தைரியமாக எடுக்கலாம் - வெற்றி பெறும்!


சென்னையின் வரலாற்றுப் பாரம்பரியப் பெருமைகளை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் "சென்னை வாரம்' கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆக. 21 முதல் 27 -ஆம் தேதி வரை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் "காதலிக்க நேரமில்லை' .

அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, "காதலிக்க நேரமில்லை' படத்தில் நடித்த குமாரி சச்சு, ராஜஸ்ரீ, வசனகர்த்தா சித்ராலயா கோபு ஆகியோருடன் இயக்குநர் ஸ்ரீதர் மனைவி தேவசேனா ஸ்ரீதரும் பங்கேற்றார். நிகழ்ச்சியை நடிகர் மோகன்ராமன் நெறிப்படுத்தி நடத்தினார்.

விழாவில் பேசியோர் தெரிவித்த ருசிகரத் தகவல்கள் ரசிகர்களைக் கவர்ந்தன.
நடிகர் மோகன் ராமன்: ஸ்ரீதர் இயக்கத்தில், ஒரு படத்தை எம்.எஸ்.விஸ்வநாதன் தயாரிக்க விரும்பினார். அவரிடம் ஸ்ரீதர் இரண்டு கதைகளைச் சொன்னார். ஒன்று ஒரு வீணை வித்வானின் கதை. இன்னொன்று ஒரு நகைச்சுவைக் கதை. மெல்லிசை மன்னர், வீணை வித்வானின் கதையைத் தேர்ந்தெடுத்தார். அதுதான் "கலைக்கோவில்'. இன்னொன்றுதான் "காதலிக்க நேரமில்லை'.

"கலைக்கோவில்' அற்புதமான படம் என்றாலும், வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால், 1963-இல் துவக்கப்பட்ட "காதலிக்க நேரமில்லை' படம் 1964-இல் வெளியாகி, சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று மாநகரங்களிலும் 25 வாரங்கள் ஓடி சாதனை புரிந்தன.

"பிரேமின் சிசூடு' என தெலுங்கிலும், "பியார்கியேஜா' என்று ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டன. கன்னடத்திலும் வெளியானது. 20 ஆண்டுகள் கழித்து, மராத்தியிலும் எடுத்தனர்.

பாடல்களுக்கு நவீனமான நடன அசைவுகள் வேண்டும் என ஸ்ரீதர் விரும்பினார். சித்ராலயா கோபுவும் டான்ஸ் மாஸ்டர் ஒருவரை அனுப்பி வைப்பதாகக் கூற, ஸ்ரீதர் நேரம் ஒதுக்கி காத்திருந்தார். குறிப்பிட்ட நேரத்தில் ஒருவர் வர, அவரது நடன அசைவுகளால் வியந்த ஸ்ரீதர், தங்கப்பன் என்ற அந்த நபரை ஒப்பந்தம் செய்தார்.

இந்த நேரத்தில் வேறொருவர் காத்திருப்பதாகக் கூற, அவர்தான் சித்ராலயா கோபு அனுப்பிய நடன மாஸ்டர் எனஅறிந்தபோது, இன்ப அதிர்ச்சி! நடந்த குழப்பத்தை விளக்கி, படத்துக்கு டான்ஸ் மாஸ்டரை முடிவு செய்து விட்டேன் என்று சொல்லி, வருத்தம் தெரிவித்தார் ஸ்ரீதர்.

எம்.ஜி.ஆர்., , சிவாஜி என்று ஜாம்பவான்கள் கோலோச்சிய காலத்தில், புதுமையான முறைகளால் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஸ்ரீதர்.என்றுகூறினார்.

சித்ராலயா கோபு: ஒருநாள் நானும் ஸ்ரீதரும் மெரீனா பீச்சில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். "நீங்கள் ஒரு முழு நீள நகைச்சுவைப் படம் ஒன்றை இயக்கினால் என்ன?' என்று கேட்டேன். அவரோ, "கல்யாணப் பரிசு, எதிர்பாராதது, விடிவெள்ளி, நெஞ்சில் ஓர் ஆலயம்... என சீரியஸ் படங்களை எடுத்துவிட்டு, நகைச்சுவை படம் எடுத்தால் ரசிகர்கள் ஏற்பார்களா?' என்று கேட்டார். "தைரியமாக எடுக்கலாம்! நிச்சயம் படம் வெற்றி பெறும்!' என்றேன். அப்படி உருவானதுதான் காதலிக்க நேரமில்லை.

ஒருமுறை சிவாஜி பிலிம்ஸிலிருந்து வந்த அழைப்பின்பேரில், நானும், ஸ்ரீதரும் அங்கு சென்றோம். அங்கிருந்த ஒருவர், பயங்கரமான கதையை சொல்லிக் கொண்டிருந்தார். அந்தச் சூழ்நிலை ஸ்ரீதருக்கு மிகவும் பிடித்தது. அந்த இன்ஸ்பிரேஷனில் உருவானதுதான் "காதலிக்க நேரமில்லை' படத்தில் வருகிற நாகேஷ், பாலையாவுக்கு கதை சொல்லும் காட்சி!

"காதலிக்க நேரமில்லை' படத்தில் எனது பங்களிப்பை டைட்டிலில், கதை, வசனம் "ஸ்ரீதர் -கோபு' என்று போட்டுஅங்கீகரித்தார் ஸ்ரீதர்.

தேவசேனா ஸ்ரீதர்: க்வீன் மேரீஸ் கல்லூரியில் நான் இரண்டாம் ஆண்டு படித்தபோது, ஸ்ரீதருடன் திருமணம் நடைபெற்றது. மெரீனா பீச்சில் "காதலிக்க நேரமில்லை' படப்பிடிப்பு நடைபெற்றபோது, கல்லூரியிலிருந்து நானும், என் சிநேகிதிகளும் படப்பிடிப்பைப் பார்க்க வந்தோம். அப்போது, எனது சிநேகிதிகள் கேலி செய்தது நினைவுக்கு வருகிறது!

பிரபல இயக்குநர் குடும்பத்தில் பொறுப்புகள்அதிகம் என்பதால், திருமணத்துக்குப் பின்னர் மூன்று மாதங்கள் வரை கல்லூரிக்குச் சென்று நின்றுவிட்டேன்.

ராஜ் கபூர், திலீப் குமார், ராஜேஷ் கன்னா, சிவாஜி உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் எங்கள் வீட்டுக்கு விருந்தினர்களாக வந்திருக்கிறார்கள்.

ராஜஸ்ரீ: திடீரென்று ஒருநாள் மாலை எனக்கு சித்ராலயாவிலிருந்து வந்த தொலைபேசி அழைப்பில், "நாளைக்கு ஷூட்டிங்! காலையில் கார்அனுப்புகிறோம்! வந்து விடுங்கள்!' என்றனர். எனக்கு ஒரே குழப்பம்! மறுநாள் காலை கார் வந்து, அழைத்துச் சென்றனர். "ஈஸ்ட்மேன் கலர் படம்' என்று கூறி லைட் மேக்-அப் போட்டனர்.

அடுத்து ஒரு நைட்டியை கொடுத்து அணிய கூறினர். இயக்குநர் ஸ்ரீதரே நடனஅசைவுகளைச் சொல்லிக் கொடுத்தார். எடுத்தவுடனே ஒரு பாடல் காட்சியை படம் பிடித்தனர். உணவு இடைவேளையின்போது, காலையில் எடுத்தது ஸ்க்ரீன் டெஸ்டுக்காக என்று! நான் "காதலிக்க நேரமில்லை' படத்தில் நடிப்பதை உறுதிப்படுத்தினர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் எடுத்தபோது மற்ற ரோல்களில் வெவ்வேறு நடிகர்கள் நடித்தாலும், மூன்றிலும் ஒரே ரோலில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

சச்சு: ஹீரோயினாக வலம் வந்தபோது, "காதலிக்க நேரமில்லை' படத்தில் நகைச்சுவை ரோலில் நடிக்கஅழைத்தனர். என்னுடைய பாட்டிதான் கதை கேட்டு, படங்களை முடிவு செய்வார். சித்ராலயா கோபுவும் எனது பாட்டியிடம் "சச்சுவுக்கு நகைச்சுவை பாத்திரம்' என்றதும், எனது பாட்டி மறுத்துவிட்டார்.

மீண்டும் ஒருநாள் சித்ராலயா கோபு வந்து என் பாட்டியிடம், "படமே முழு நகைச்சுவைப் படம். படத்தில் மூன்று ஹீரோக்கள். மூன்று ஹீரோயின்கள்' என்று சாமர்த்தியமாகப் பேசி, பாட்டியின் சம்மதத்தைப் பெற்றுவிட்டார்.

படப்பிடிப்புக்காக, ஆழியாறு அணைக்கட்டுக்குப் போனது மறக்க முடியாத அனுபவம். எனது திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்ததுதான் "காதலிக்க நேரமில்லை'. அதனால்தான் 500 படங்களில் நடிக்க முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com