ஒடிஸாவில் தமிழரின் எழுச்சி!

தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கார்த்திகேயன் பாண்டியன் ஒடிஸாவில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளத்தில் கடந்த நவ. 27-இல் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.
ஒடிஸாவில் தமிழரின் எழுச்சி!
Updated on
3 min read

தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கார்த்திகேயன் பாண்டியன் ஒடிஸாவில் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளத்தில் கடந்த நவ. 27-இல் இணைந்தது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகி உள்ளது.

கடந்த அக்.20-ஆம் தேதி விருப்ப ஓய்வுக்கு அவர் விண்ணப்பித்தபோது உடனடியாக ஏற்கப்பட்டது. வழக்கமான நோட்டீஸ் காலகட்டம்கூட விலக்கு அளிக்கப்பட்டு, அமைச்சர் அந்தஸ்தில் "நவீன ஒடிஸா மற்றும் 5 டி (வெளிப்படைத்தன்மை, தொழில்நுட்பம், குழுவாகப் பணி செய்தல், காலக்கெடு, மாற்றம்) முன்னெடுப்புத் திட்டத்தின்' தலைவராக அக்.23-ஆம் தேதியே நியமிக்கப்பட்டார். இதில் இருந்தே அவர் மீது  முதல்வர் நவீன் பட்நாயக் எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளார் என்பதை அறிய முடியும்.

கட்சியில் பாண்டியன் இணைந்தபோது,  நாடாளுமன்றக் குழுத் தலைவர் பினாகி மிஸ்ரா, அமைச்சர்கள் பிக்ரம் கேசரி அருகா, உஷா தேவி, ரானேந்திர பிரதாப் ஸ்வெயின் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் உடனிருந்தனர். 

பாராட்டு பெற்ற நடவடிக்கைகள்: நாற்பத்தொன்பது வயதான கார்த்திகேயன் பாண்டியன் 2000-ஆம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியாவார். முதலில் பஞ்சாபில் பணியாற்றிய இவர், ஐ.ஏ.எஸ். அதிகாரியான மனைவி சுஜாதா ஒடிஸாவைச் சேர்ந்தவர் என்பதால் பணியிட மாறுதல் பெற்று ஒடிஸாவுக்கு 2002-இல் வந்தார்.

தொடக்கத்தில் காலாஹாண்டி மாவட்டம், தர்மகர் பகுதியில் துணை ஆட்சியராகவும், பின்னர் மயூர்பஞ்ச், கஞ்ஜம் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராகவும் பணியாற்றினார். துணை ஆட்சியராகப் பணியாற்றியபோது, ரூர்கேலாவில் ஆக்கிரமிப்புக் கட்டடங்களை புல்டோசர் வைத்து தகர்த்து அகற்றியதும், ஆட்சியராக இருந்தபோது மாற்றுத் திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிமையாக ஆக்கியதும் பரவலாகப் பாராட்டைப் பெற்றன.

முதல்வரின் தனிச் செயலராக...: 2011-இல் முதல்வரின் தனிச் செயலராக நியமிக்கப்பட்டார்.   நவீன் பட்நாயக்கின் ஆலோசகராக இருந்த பியாரி மோஹன் மொஹபத்ரா 2012 மே 29-இல் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டபோது, அதை முறியடித்ததில் பாண்டியனின் செயல்பாடுகள் முதல்வரைக் கவர்ந்தன. 

கட்சியினரைவிட அதிகாரிகளையே அதிகம் நம்பும் நவீன் பட்நாயக்குக்கு ஆலோசகராக இருந்த பியாரி மோஹன் மொஹபாத்ராவின் இடத்தை பாண்டியன் பூர்த்தி செய்தார்.

பாண்டியனின் அரசியல் அறிவு, மக்கள் நலத் திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்துவதில் உள்ள அபாரமான திறமை போன்றவை அவரை முதல்வருக்கு நெருக்கமாக்கின. திருமணம் செய்துகொள்ளாத, 77 வயதான நவீன் பட்நாயக்குக்கு அண்மைக்காலமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுவருகிறது. இதில் பாண்டியனின் தனிப்பட்ட முறையிலான அக்கறையும் முதல்வரைக் கவர்ந்தது.

நலத் திட்டங்களில் பாண்டியனின் முத்திரை: எதெல்லாம் பிஜு ஜனதா தள அரசின் சாதனைகள் என்று கூறப்படுகின்றனவோ, அதில் எல்லாம் பாண்டியன் முத்திரை பதித்தார். பள்ளிகளின் கட்டமைப்பில் பெரும் மாற்றம், கோயில்கள் புனரமைப்பு, மாநிலத்தை விளையாட்டு மையமாக ஆக்குதல் போன்றவற்றுடன் எந்தத் திட்டமாக இருந்தாலும் குறித்த காலத்துக்குள் நிறைவேற்றுதலுக்கு முக்கியத்துவம் அளித்தார். 

பொழுது புலர்வதற்கு முன்பே, திட்டப் பணிகளுக்கான இடத்தில் சக அதிகாரிகளுடன் ஆய்வு செய்து பணிகளை விரைவுபடுத்துவது என்பதைப் பணிக் கலாசாரமாகவே ஆக்கினார். புரி நகரத்தை உலகத் தரம் வாய்ந்த பாரம்பரிய நகரமாக்கும் முயற்சி, புவனேசுவரம் மெட்ரோ ரயில் திட்டம் போன்றவற்றை விரைவுபடுத்தி வருகிறார்.

ஆசிய தட களப் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை வெறும் 90 நாள்களில் மேற்கொண்டது, இரண்டு முறை ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியது போன்றவை மாநிலத்துக்குப் பெயர் பெற்றுத் தந்தன. 

கட்டக்கில் உள்ள எஸ்.சி.பி. மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி எய்ம்ஸ் மருத்துவமனை அளவுக்குத் தரம் உயர்த்தப்பட்டதுடன், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேளாண் திட்டங்களை விரைவுபடுத்தியது, மாநிலம் முழுவதும் சுற்றுலா, ஆன்மிகத் தலங்களை மேம்படுத்தியது போன்றவை முதல்வர் நவீன் பட்நாயக்கிடம் பாண்டியனின் செல்வாக்கை உயர்த்தின. பாண்டியன் நினைத்தால்தான் நவீன் பட்நாயக்கையே சந்திக்க முடியும் என்ற சூழ்நிலையும் உருவானது.

சூறாவளி சுற்றுப்பயணம் - "நிழல்' முதல்வர்: கடந்த ஜூன் 2-ஆவது வாரத்தில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் அவர் ஹெலிகாப்டரில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டது பெரும் விமர்சனங்களை எதிர்கொண்டது. 

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சுற்றுப்பயணத்துக்கு ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது மிகவும் அரிதாகும். பொதுவாகவே குறைவாகப் பேசும் இயல்பு கொண்ட முதல்வர் நவீன் பட்நாயக், இதை நியாயப்படுத்தி பேரவையில் நீண்ட விளக்கம் அளித்தார்.

"நிழல் முதல்வர்' என்று கூறும் வகையில் இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் குறைதீர் கூட்டங்களை நடத்தினார். பிஜு ஜனதா தள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தினார். மக்கள் மத்தியிலும், கட்சியினர் மத்தியிலும் அவரை ஏற்றுக் கொள்வது குறித்து அறியவே இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டதால், அவர் விரைவில் கட்சியில் இணைவார் என்று அப்போதே ஊகங்கள் எழுந்தன.

பாண்டியனுக்கான சவால்கள்:  கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடிஸாவில் இருந்தாலும், பாண்டியன் மண்ணின் மைந்தர் அல்ல. மதுரை மேலூரைச் சேர்ந்தவர். மேலும், பிஜு ஜனதா தளமும் பிராந்திய வாதத்தை முன்னிலைப்படுத்தி தொடங்கப்பட்ட கட்சியாகும்.

அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல், மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களில் வேட்பாளர் தேர்வு, பிரசாரம் ஆகியவை பாண்டியனுக்கு பரிசோதனைக் களங்கள் ஆகும். அத்துடன், தனி பிராந்தியமாக ஒடிஸா உருவானதன் நூற்றாண்டு விழா 2036-ஆம் ஆண்டில் கொண்டாடப்பட உள்ளது. அப்போது ஒடிஸாவின் முன்னேற்றம் குறித்த திட்டமும், களப் பணியும் பாண்டியனிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளது.

இவற்றில் வெற்றி பெற்றாலும், அவர் தேர்தலில் போட்டியிடுவது, நவீன் பட்நாயக் காலத்துக்குப் பின்னர், மக்களும் கட்சியினரும் அவரை ஏற்றுக்கொள்வது போன்றவை குறித்து காலம்தான் பதில் சொல்லும்.
ஒடிஸா மாநிலத்தைச் சேராதவரான பாண்டியனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்துக்கு பாஜகவின் தேசிய துணைத் தலைவரான பைஜயந்த் பாண்டா, காங்கிரஸின் மூத்த தலைவர் பிஜய் பட்நாயக் போன்றவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எனினும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒடிஸா மக்களோடு மக்களாக கலந்துவிட்ட பாண்டியன் தனது திறமையால் எல்லா எதிர்ப்புகளையும் கடந்து வெற்றி வாகை சூடுவார் என எதிர்பார்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com