தமிழ்நாட்டில் உள்ள தீவுகள்..!
By -கோட்டாறு ஆ.கோலப்பன் | Published On : 04th June 2023 12:00 AM | Last Updated : 04th June 2023 12:00 AM | அ+அ அ- |

நான்கு திசைகளிலும் நீரால் சூழப்பட்டவைதான் தீவுகள். கடல், ஆறுகளால் சூழப்பட்ட தீவுகள் தமிழ்நாட்டில் பல உள்ளன. அவை:
ஆதாம் பாலம் ராமேசுவரத்துக்கும் இலங்கையிலுள்ள மன்னார் தீவுகளுக்கும் இடையே சுண்ணாம்புக் கற்களாலான ஒழுங்கற்ற மேடுகளே 'ஆதாம் பாலம்'. இது 'ராமர் பாலம்' என்றும் அழைக்கப்படுகிறது. 30 கி.மீ. நீளம் கொண்ட இந்தப் பாலமே மன்னார் வளைகுடாவையும் பாக் ஜல சந்தியையும் பிரிக்கின்றது.
குருசடைத்தீவு
மன்னார் வளைகுடாவில், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தின் அருகே அமைந்துள்ள இந்தத் தீவு சுற்றுச்சூழல் சொர்க்கம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு பவழப் பாறைகளும் டால்பின்கள் உள்பட அரிய வகை கடல் உயிரினங்களும் வாழ்கின்றன.
ஹரோ தீவு
தூத்துக்குடி துறைமுகத்துக்கு அருகே இந்தத் தீவு உள்ளது. உள்ளூர் மக்களின் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
நல்ல தண்ணி தீவு
மன்னார் வளைகுடாவில் அமைந்துள்ள மக்கள் வசிக்கும் மூன்று தீவுகளில் ஒன்று. குருசடை, முசல் தீவு மற்ற இரு தீவுகளாகும். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தின் ஒரு பகுதியாக நல்ல தண்ணி தீவு விளங்குகிறது.
பாம்பன் தீவு
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் ஜல சந்தியில் அமைந்துள்ளது. இது ராமேசுவரம் தீவு எனவும் அழைக்கப்படுகிறது. இது ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் உள்ளது.
ஸ்ரீரங்கம் தீவு
காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே அமைந்துள்ள ஆற்றுத்தீவாகும். இது திருச்சி நகருக்குள் அமைந்துள்ளது. இந்தத் தீவின் மையத்தில் புகழ்ப் பெற்ற ஸ்ரீரங்கநாதர் கோயில் அமைந்துள்ளது.
குவிபில் தீவு
சென்னை அடையாறு, மயிலாப்பூர் பகுதிகளுக்கு இடையே அமைந்துள்ள தீவு. இது அடையாறு நதியால் உருவாக்கப்பட்டுள்ளது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...