

{இன்றைய இளைஞர்களை சூழ்ந்திருக்கும் ஒரு அபாயம் குறித்து தான் இந்த படத்தில் பேசி இருக்கிறேன். வாழ்க்கையில் சில பாடங்கள் உண்டு. அதை எல்லோரும் உணரும் கட்டம் வரும். சிலருக்கு வந்து போகும். பலருக்கு ஆறாத ரணங்கள் தரும். இங்கேயும் ஒரு சாதாரணமான மனிதனை சூழல் மாற்றி மாற்றி வைக்கிறது. நாம் ஒன்று நினைத்தால் வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேருகிற இடம் வேறு ஒன்றாக இருக்கிறது. எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம், சிக்கல்களிலிருந்து விடுபட தவிக்கிறோம். இத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் போல இங்கேயுள்ள வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே... அது எனக்கு ரொம்ப ஆச்சரியம். சிரிக்க மட்டும் வைக்காமல், இப்படி சிந்திக்க வைக்கவும் முடிகிற கதைதான் இது.'' - நம்பிக்கை கரம் நீட்டுகிறார் இயக்குநர் வேலுதாஸ். "துடிக்கும் கரங்கள்' படத்தின் மூலம் கோடம்பாக்கத்துக்கு அறிமுகமாகிறார்.
"துடிக்கும் கரங்கள்' தலைப்புக்கு பொருள் தருகிற விதம் எப்படி.... அரசியல் படமா...
அரசியலைவிட தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம் இது. நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படி ஒருவனை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது. துடிக்கும் கரங்கள் தலைப்பு வந்து சேர்ந்ததும் கதை இன்னும் பொருத்தமாக மாறிப் போனது. இங்கே கதைக்காகவோ களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை. ஒருவனை, அவன் வாழ்க்கையை ஆழமாகப் பார்த்தாலே கதை. அவனோடு ஊர் வரைக்கும் தேடிப் போனால் அது களம். அப்படி நான் சந்தித்த செய்திகள், தகவல்ள்தான் இதன் உத்வேகம். நிஜ வாழ்க்கையின் புனைவு, சினிமாவின் வியாபாரத்துக்கான சமரசங்கள் எல்லாமும் இந்த கதை. அதிகாரம் என்ற ஒன்று நம்மை எப்படி எல்லாம் துரத்துக்கு அடிக்கிறது... நாம் ஒவ்வொருவரும் இந்த அதிகாரத்துக்கு முன்பாக, ஒன்றும் செய்ய இயலாதவர்களாக வாழ்க்கை முழுக்க நமக்கே தெரியாமல் போராடித் தவிக்கிறோம். வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டால் எல்லாமே மாறும். அப்போது மனிதர்களைத் தெரிந்துக் கொள்கிற விந்தையும் நடக்கும். அப்போது நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்தக் கதை என்று ஒரு வரையறைக்குள் நாம் எல்லோரும் வரலாம்.
கதையின் பேசு பொருள் சொன்னால், கொஞ்சம் தெளிவு கிடைக்கும்...
உணவு அரசியலை பேசியிருக்கிறேன். ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும்போது சாக்லேட் சாப்பிடத் தோன்றியிருக்கிறதா? மன அழுத்தத்தில் இருக்கும்போது சாப்பாட்டை ஃபுல் கட்டுக் கட்டிய அனுபவம் இருக்கிறதா? "அது இயல்பானதுதான்... உணவுக்கும் மூளைக்குமான உறவு அப்படிப்பட்டது' என்கிறறது ஆய்வு. நம் உடலில் மூளையானது 24 மணி நேரம் ஓய்வின்றி இயங்கிக்கொண்டே இருக்கும். நம் எண்ணங்கள், அசைவுகள், சுவாசம், இதயத்துடிப்பு என எல்லாவற்றையும் மூளைதான் பார்த்துக்கொள்கிறது. நாம் தூங்கும்போதுகூட மூளை ஓய்வெடுப்பதில்லை. அப்படிப்பட்ட மூளை இயங்க, தொடர்ச்சியான ஆற்றல் சப்ளை செய்யப்பட வேண்டுமல்லவா? மூளைக்கான ஆற்றல் என்பது நாம் உண்ணும் உணவிலிருந்தே போகிறது. அது மட்டுமல்ல... நாம் சாப்பிடும் உணவுகளுக்கு நம் மனநிலையோடும் தொடர்புண்டு. ஆனால் கலப்பட உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு என எல்லாவற்றையும் சாப்பிட்டு வருகிறோம். அதுவும் சென்னை போன்ற மாநகரங்களில் 24 மணி நேரமும் கிடைக்கும் அசைவ உணவு வகைகள் எல்லாமே பதப்படுத்தப்பட்டதுதான். இதன் பின்னணிதான் கதை. அதோடு ஒரு எளிமையான காதல் எல்லாமும் கதை. இதைப் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் சட்டத்தின் மேல் இருக்கிற நம்பிக்கை போகும். இன்னும் எத்தனை காலம்தான் எதற்கும் ஆகாத இந்தச் சட்டங்களை வைத்துள்ளீர்கள் என கேள்வி கேட்கத் தோன்றும். அதை விட வாழ்க்கையின் மேல் நம்பிக்கை வரும். சக மனிதர்கள் மேல் இன்னும் அன்பு கூடும். அப்படி வாழ்க்கையில் நடக்கிறதை, நடந்ததைத்தான் எடுத்திருக்கிறேன். நேர்மை ஜெயிக்குமா என்று தெரியாது. ஆனால், நியாயம் கண்டிப்பாக உலகத்துக்குப் புரியும். நேர்மை நமக்கே புரிய கொஞ்ச நேரம் பிடிக்கும். அந்த நேரத்திற்குள் நடக்கிறதை ஒரு படமாக எடுத்திருக்கிறேன்.
மீண்டும் ஒரு அரசியல் விமர்சன படம்...
மனித வாழ்வுதான். எந்த ஒரு கதைக்கும் மனித வாழ்வுதான் அடிப்படை. நேர்மை, நியாயம், கோபம், அன்பு என மாறிக் கொண்டே இருக்கும் வாழ்வின் மாயங்களை கடந்த சினிமா எங்கேயும் இல்லை. அனுதினங்களின் எதார்த்தங்களில் இருந்து இந்தக் கதையைப் பிரிக்கவே முடியாது. ஒரு வாழ்வின் மணமும் குணமும் நிரம்பியிருந்தால், அது நல்ல சினிமா. இந்த இலக்கணத்தை கொண்டே இதை எழுதியிருக்கிறேன். மனிதர்களுக்கு சமூகத்தின் மேல் பொறுப்பு வேண்டும் என்கிற நேரத்தில், இந்தச் சமூகத்தின் மீது அவர்களுக்கு வெறுப்பு இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஒரு தேசம் அதன் எளிய மனிதர்களை அனுசரிக்க முடியாததுதான் இங்கே பிரச்னை. அதுவும் சிறுபான்மை என ஜாதிகளின் அடுக்குகளை கொண்ட இந்திய சமூகத்தில் இது பெரும் பிரச்னை. சுதந்திரத்துக்கும் கனவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் எளியவர்கள் எத்தனை பேர். ஒரு கட்டத்தில் நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் மலிந்து விட்ட இந்த சமூகத்தின் மேல் எளியவர்களுக்கு கோபம் வருவது இயல்புதான். மற்ற பிரச்னைகள் எல்லாவற்றையும் விட, கல்வியால், ஜாதியால் எழுகிற பாகுபாடுகள் இங்கே பெரிய பிரச்னை. ஒரு சினிமா இரண்டு மணி நேரம்தான். ஆனால், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் இங்கே 24 மணி நேரம். இங்கே சந்திக்கும் முகங்கள், சம்பவங்கள், தத்துவம், துயரம், சந்தோஷம் இப்படி எத்தனையோ இருக்கின்றன. வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா. கற்பிக்கப்பட்ட கல்வி, அதன் நியாய, தர்மங்கள் எல்லாமும்தான் இந்த வாழ்க்கை. ஏதேதோ யோசனைகளில் இருக்கும் போது, திடீரென்று ஒரு உணர்வு எழும். அதை மனசும் ஆமோதிக்கும். சில நேரங்களில் அந்த உணர்வு எந்த எல்லைக்கும் எடுத்து செல்லும். அப்படியான உணர்வுதான் இந்த சினிமா.
விமல் எப்படி பொருந்தி வந்திருக்கிறார்....
இந்தப் படம் துவங்கியதில் இருந்து நானும் விமலும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொள்வோம். பிறகு பாசமாக பேசிக் கொள்வோம். எல்லோரும் இந்த கதையில் விமலையா நடிக்க வைக்கிறீர்கள் என கேட்டார்கள். ஆனால் விமல் வழக்கமாக கிராமத்து கதைகளிலேயே நடித்து வருவதால், இந்த சிட்டி சப்ஜெக்ட்டில் ஒரு யூடியூபராக அவர் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என நினைத்தேன். அதே போல அவர் மொத்த படத்திலும் எந்த இடத்திலும் ஒரு குறுக்கீடும் செய்யாமல் நான் சொன்ன அத்தனை விஷயங்களையும் செய்திருக்கிறார். ஹரியான மாடல் நிஷா நரங்கு விமலுக்கு ஜோடி. சதீஷ், சுரேஷ் மேன், சங்கிலி முருகன், சௌந்தர்ராஜன், வழக்கு எண் முத்துராமன் என முக்கியமான இடங்களுக்கு நம்பிக்கையான நடிகர்கள். இசையமைப்பாளர் மணி சர்மாவின் சகோதரர் மகன் ராகவ் பிரசாத் தான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். கதையின் உண்மைத்தன்மைக்கு பக்கத்தில் இருப்பவர்களை மட்டுமே இந்தப் படத்தில் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். இந்த நேரத்தில் நமக்குக் கிடைக்கிற நண்பர்கள், நாம் தேடிக்கிற சந்தோஷம், நம்ம உலகம் எல்லாமே அழகாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.