வெற்றிக்குப் பின்னால்..!

தோல்விகளை வென்று உச்சத்தில் மு.ராமநாதன்!
வெற்றிக்குப் பின்னால்..!

தோல்விகள்தான் வெற்றிக்கு படிக்கட்டுகளாக அமையும். முயன்றால் முடியாதது இல்லை....'' - இப்படி எத்தனையோ தன்னம்பிக்கை வரிகள் எண்ணற்றோரின் வாழ்க்கைக்கு உந்துதலாக அமைந்திருக்கும். அதுபோன்ற வரிகளை வாழ்க்கையில் புகுத்தி வெற்றிக்கனியை எட்டிப் பிடித்துள்ளார் தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட கடையநல்லூர் அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முப்பது வயதான மு.ராமநாதன்.

இந்திய ரயில்வேயின் உற்பத்தி கேந்திரமான சென்னை பெரம்பூர் ரயில்வே இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் பணியாளர் நன்னல அலுவலராகப் பணியாற்றிவரும் அவரிடம் பேசியபோது:

''மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் (யு.பி.எஸ்.சி.) நடத்தப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவைகளுக்கு நிகராக நடத்தப்படும் (குரூப்-ஏ ஆர்கனைஸ்டு சர்வீஸ்-ஜூனியர் டைம் ஸ்கேல் கிரேடு ஆப் சென்ட்ரல் லேபர் சர்வீஸ்) தேர்வில்,தொழிலாளர் நலத் துறையின் உதவி தொழிலாளர் ஆணையராகத் தேர்வு பெற்றுள்ளேன். அகில இந்திய அளவில் நடைபெற்ற 29 பணியிடங்களுக்கான தேர்வில் தமிழகத்தில் இருந்து நான் மட்டுமே தேர்வு பெற்றுள்ளேன். இந்தச் சாதனைகளுக்குப் பின்னர் சோதனைகளும் இருக்கின்றன.

எனது தந்தை முருகையா பழைய காலி டின்களை விற்கும் தொழில் செய்து வருகிறார். அம்மா லெட்சுமி, செங்கல் சூளையில் பணியாற்றி வருகிறார். நான் எட்டாம் வகுப்பு வரை கிருஷ்ணாபுரம் சங்கரா நடுநிலைப் பள்ளியிலும், 12 ஆம் வகுப்பு வரை புளியங்குடி டி.என்.புதுக்குடி இந்து நாடார் உறவின்முறை மேல்நிலைப் பள்ளியிலும் படித்தேன்.

(பி.இ. மெக்கானிக்கல்) படிப்பை சென்னை மீனாட்சி பொறியியல் கல்லூரியிலும், தொழிலாளர் சட்ட பட்டய படிப்பை தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்திலும் படித்தேன்.

நான் பொறியியல் படிக்கும்பொழுது, பகுதி நேரமாக அங்குள்ள உணவகத்தில் பணியாற்றி கொண்டே படித்தேன். தமிழ்நாடு, கேரள மாநில அரசுகள் நடத்திய குரூப்-1 தேர்வுகளிலும், யு.பி.எஸ்,சி. தேர்விலும் கலந்து கொண்டு ஆரம்ப கட்ட தேர்வில் வெற்றி பெற்றும், பல முறை இறுதித் தேர்வை எட்ட முடியாமலும் போய்விட்டது.

எனக்கு குறைந்த கட்டணத்தில் ஒரு பயிற்சி நிறுவனம் பயிற்சி வழங்கியது. நான் பல முறை தேர்வில் தோல்வியைச் சந்தித்த பொழுதும் எனது பெற்றோர் என்னை குறை சொல்லவில்லை. மாறாக, எனக்கு ஊக்கமளித்து வந்தனர். எனது சகோதரரும் எனக்கு உறுதுணையாக இருந்தார். அதனால் என்னால் இந்த வெற்றியை பெற முடிந்தது'' என்கிறார் ராமநாதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com