பயணங்கள் தொடரும்...

விண்வெளி பயணத்தின் முன்னோடி ராகேஷ் ஷர்மாவின் நினைவுகளும் கனவுகளும்
பயணங்கள் தொடரும்...
Picasa

விண்வெளியில் பயணித்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா. இவர் 1984-ஆம் ஆண்டு ஏப்ரலில் விண்வெளியில் ரஷ்ய விண்கலமான 'சல்யூட் 7'-இல் ஏழு நாள்கள், 21 மணி, 40 நிமிடங்கள் பயணித்தார். இவர் பயணித்து 40 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

போர் விமானியாகப் பணிபுரிந்த ராகேஷ் ஷர்மா பஞ்சாபைச் சேர்ந்தவர். இவர் 'அசோகா சக்ரா' விருதும் பெற்றார். தற்போது எழுபத்து ஆறு வயதாகும் அவர் நீலகிரி மாவட்டத்துக்கு உள்பட்ட குன்னூரில் தனக்குச் சொந்தமான தோட்ட வீட்டில் வசித்து வருகிறார்.

அவருடன் பேசியபோது:

''இந்தியர்கள் விண்வெளிப் பயணம் தற்போது மேற்கொள்ளுவது நான் எதிர்பார்த்ததுதான். இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரையை எழுதி இஸ்ரோவுக்கு அனுப்பினேன். போர் விமானிகள்தான் விண்வெளிப் பயணத்துக்குப் பொருத்தமானவர்கள். அவர்களுக்கு விண்ணில் பறந்த அனுபவம் உள்ளது. கூடுதல் தகுதியாக அமைந்துள்ளது. விண்வெளியில் எப்படி புவி ஈர்ப்பு விசை எப்படி இருக்குமோ அந்த சூழலை செயற்கையாக உருவாக்கி பயிற்சி கொடுப்பதால் விண்வெளி வீரர்களின் திறமை பட்டை தீட்டப்படும்.

எனது மனைவி உட்புற வடிவமைப்பு வல்லுநர் என்பதால், சூரிய ஒளி வீட்டுக்குள் நுழையும் வகையில் இயற்கையோடு இணைந்த வகையில் வீடு கட்டியுள்ளேன். சூரிய ஒளி தகடுகளால் சுடுநீர் கிடைக்கும் வசதி, மழைநீர் சேகரிப்பு, பொழுதுபோக்க இசை என்று அமைதியான வாழ்க்கையை வாழ்கிறேன்.

ஓய்வு நேரங்களில் தோட்ட வேலை, உதகை ராணுவ வளாகத்தில் நடக்கும் கூட்டங்களில் பங்கேற்பு, குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருதல் என்று பொழுதைக் கழிக்கிறேன்.

2012-இல் 'இந்திய மனித விண்வெளிப் பயணம்' பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதி இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பினேன். சுமார் ஐந்து ஆண்டுகள் கழித்து, ஏற்கப்பட்டு இஸ்ரோ தனது ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தது.

2023-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில், இந்தியாவின் மனிதர்களை முதன் முதலாக ஏற்றிச் செல்லும் விண்வெளிப் பயணத் திட்டத்தை அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, 'ககன்யான்' திட்டத்தில் விண்வெளி செல்லும் வீரர்கள் பெயரை திருவனந்தபுரம் இஸ்ரோ அலுவலகத்தில் பிப். 27-இல் அறிவித்தார்.

பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர் தலைமையில், அங்கத் பிரதாப், அஜித் கிருஷ்ணன், சுபன்ஷு சுக்லா ‘ககன்யான்' திட்டத்தில் விண்வெளி வீரர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி பெற்றுவருகின்றனர். இவர்கள் புவியின் குறைந்த சுற்றுப் பாதையில் 400 கி.மீ தூரம் பயணித்து 3 நாள்கள் தங்கி ஆய்வு மேற்கொள்வர். ஆய்வுக்குப் பின்னர், வீரர்களை மீண்டும் பாதுகாப்பாக புவிக்கு கொண்டு வந்து சேர்ப்பதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தியர்கள் இந்திய விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லும்போது, ரஷியா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நான்காவது நாடாக மாறும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com