உலகம் அனைத்து உயிர்களுக்குமானது...

உலகம் அனைத்து உயிர்களுக்குமானது...

அறிவியல் வளர்ச்சி மனிதர்களை நவீன வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வைத்திருந்தாலும், இயற்கை அழகை பார்த்தால் நம்மை அறியாமலேயே மனம் லயிக்கும். அதிலும், அதிகாலையில் அழகிய வனச் சோலைகள், பாடும் பறவைகள், பறக்கும் பட்டாம் பூச்சிகள், ஓடும் உயிரினங்கள்... என ஒரு இயற்கை சார்ந்த இடங்களைக் கண்டால், 'அடடா எத்தனை அழகு..' என்றே வர்ணிக்கத் தோன்றும்.

அத்தகைய வர்ணனையை அவ்வப்போது தான் கண்டு ரசிப்பது மட்டுமல்லாது, பலரையும்அழைத்துச் சென்று ரசிக்க வைத்து வருகிறார் புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியை சங்கரதேவி.

முப்பத்து நான்கு வயதான இவர், கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மாதம்தோறும் பறவைகள் உற்றுநோக்குதல் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர், பட்டாம்பூச்சியின் உணவுத் தாவரங்கள் குறித்த ஆராய்ச்சியாளர் உள்பட பன்முகத் தன்மைகள் கொண்ட சங்கர தேவியிடம் பேசியபோது:

''நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவள். சிறுவயது முதலே வயல்வெளி, வனப் பகுதி, கடல் பகுதிகளை ரசித்து வந்தேன்.

பிளஸ் 2 முடித்து ஆசிரியைப் பயிற்சி பெற்று, தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியை ஏற்றேன். கணிதம், தாவரவியல் பாடங்களை முதுநிலை வரை படித்தேன். திருமணமாகி, கணவரும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

ஆசிரியர் பணி, ஆராய்ச்சிப் பணிகளுடன் பல்லுயிர் பாதுகாப்பு குறித்து குழந்தைகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திவருகிறேன். இதன் ஒருபகுதியாக பறவைகள் உற்றுநோக்குதல் நிகழ்ச்சியை நடத்துகிறேன்.

இதன்படி, புதுவை- தமிழக எல்லைப் பகுதியான ஊசுடு போன்ற பகுதிகளுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அழைத்துச் செல்கிறேன். அங்கு பைனாகுலர் உள்ளிட்ட சாதனங்களின் உதவியுடன் பல வகைப்பட்ட பறவைகளை அடையாளப்படுத்தப்படுத்துகிறேன். அவற்றின் குரல்களையும் பதிவு செய்கிறோம்.

புதுச்சேரி வனப் பகுதியில் உள்ள 500 வகை இனப் பறவைகளில், 'அன்றில் பறவை' வகை கொக்கு சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அடுத்ததாக, குயில்கள் அதிகமுள்ளன. ஊசுடு ஏரியில் நீர்காகம், நீலதாழை கோழி, தூங்கணாங்குருவிகள், சின்ன உள்ளி போன்ற கொக்கு வகைகள் நிறைய உள்ளன.

வீராம்பட்டினம் பகுதியில் கடல்புறாக்கள், மயில்கள் அதிகரித்துள்ளன. பச்சை பஞ்சுருட்டான் குருவியானது ஒவ்வொன்றும் விவசாயத்துக்கு கேடு விளைவிக்கும் சிறு பூச்சிகளை ஆயிரக்கணக்கில் நாள்தோறும் உண்ணும் திறன் பெற்றதால், 'விவசாயிகளின் நண்பன்' என்றே அழைக்கப்படுகிறது.

புதுச்சேரி கடல் பகுதியிலுள்ள பறவைகள் நீரில் கலக்கும் கழிவுகளை உண்டு சுத்தமாக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றன. தேன்சிட்டுப் பறவைகள் தாவர மகரந்தச் சேர்க்கையில் பங்காற்றி, விதைப் பரவல் பணிக்கும் முக்கியமானவையாக உள்ளன. இப்படி பறவைகளின் இயற்கை பாதுகாப்புக்கான பங்களிப்பை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

புதுவையில் இரண்டு ஆயிரம் தாவர இனங்கள் உள்ளன. அதில், சதுப்பு நிலங்களில் உள்ள அலையாத்திக் காடுகளில் 8 வகை தாவரங்கள் உள்ளன. அவை சுனாமி, புயல் காலங்களில் கடற்கரைப் பகுதி வாழ் மக்களைக் காக்கும் தெய்வங்களாகவே அமைந்துள்ளன. அவற்றில் சுரபுன்னை சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தாவர வகையாகும்.

தற்போது சுற்றுலா எனும் பெயரில் புதுச்சேரியில் சதுப்பு நிலக்காடுகள் அழிக்கப்பட்டுவருவதால் அதை நம்பி இருந்த 72 வகை மீன்களில் 30 வகை மீன்கள் அழிந்துவிட்டன.

ஆகவே, பல்லுயிர் பாதுகாப்பு விஷயத்தை முக்கியமானதாக எடுத்துக்கொள்வது அவசியமாகிறது.

புதுவையில் மட்டும் 110 வகை பட்டாம்பூச்சிகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த பட்டாம்பூச்சிகளுக்கான உணவுத் தாவரங்களாக 20 வகை தாவரங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, கொடிப்பாலை, வேல்பருத்தி, ஈஸ்வரமூலிகை, கிளுகிளுப்பை, அரளி, எலுமிச்சை, கறிவேப்பிலை, எருக்கஞ்செடி, அசோகமரம், அத்தி, மா ஆகியவை வண்ணத்துப் பூச்சிகளின் உணவுத் தாவரங்களில் முக்கியமானவையாக உள்ளன.

பல்வேறு மக்கள் நலத் திட்டப் பணிகள் எனக்கூறி வண்ணத்துப் பூச்சிகளின் உணவுத் தாவரங்கள் சிறிது, சிறிதாக அழிக்கப்பட்டு வருகின்றன. அதனால் வண்ணத்துப் பூச்சிகளின் இனங்களும் அழிவைச் சந்தித்து வருகின்றன. இளம் தலைமுறையினருக்கு பல்லுயிர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும், பறவைகள், பட்டாம் பூச்சிகள் வாழவேண்டிய அவசியத்தையும் எடுத்துரைப்பது காலத்தின் கட்டாயமாகும்.

இதன்படி நடத்தப்படும் பறவைகள் உற்றுநோக்கல் நிகழ்ச்சிகளில் லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பள்ளிக் குழந்தைகளை வனச்சூழல் மிக்க இடத்துக்கு அழைத்துச் சென்று, இயற்கையில் பறவைகள், பட்டாம் பூச்சிகள் போன்றவை வாழும் நிலையைக் காட்டுவதும் அவசியம்.

உலகம் மனிதர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. அவை அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து இருப்பதை அனைவரும் உணர வேண்டும்'' என்கிறார் சங்கரதேவி.

படங்கள்- கி.ரமேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com