பெண்களின் சட்டப் போராட்டம்

பெண்களின் சட்டப் போராட்டம்

இந்திய விமானப் படையில் நிலைத்திருந்த பாலின வேறுபாட்டை களைந்து, சமத்துவத்தை நிலைநாட்டியவர் வழக்குரைஞர் கரீமா சச்தேவா. பணி வாய்ப்பில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் சம வாய்ப்பு, சம உரிமை அளிக்கப்படுவதற்கு 12 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்திய அவர், தனது அனுபவம் குறித்து பேசியபோது:

''விமானப் படையில் எனது தந்தை பல்வேறு நிலைகளில் 40 ஆண்டுகள் பணியாற்றி, 2020-ஆம் ஆண்டில் ஏர்மார்ஷலாக இருந்து பணி ஓய்வு பெற்றார். அவர் நீலநிற சீருடையில் கம்பீரமாக மிடுக்காக நடந்து செல்லும் பாங்கை ரசிப்பேன். 1990-களில் முதல்முறையாக விமானப் படையில் குறுகிய காலமாக ஐந்து ஆண்டுகளுக்கு அதிகாரி பணிகளுக்கு பெண்களைச் சேர்த்துக்கொள்ள விண்ணப்பங்கள் கோரப்பட்டன.

காலிப் பணியிடங்களுக்குத் தகுதி இருந்தால், அதன்பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு நிலையான பணி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதை நம்பி, நாட்டுச் சேவையில் ஈடுபடும் தீராத ஆர்வத்தில் பெண்கள் பலர் விண்ணப்பித்து, வேலைவாய்ப்பும் பெற்றனர்.ஆனால், ஐந்து ஆண்டு பணிகாலத்துக்குப் பிறகு நிலையான அல்லது நிரந்தரப் பணிக்கு ஆண் அதிகாரிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பெண் அதிகாரிகளை விலக்கி வைத்தது அவர்களை வேதனை அடைய செய்தது.

குறுகிய கால பணித் திட்டத்தின்படி, பெண் அதிகாரிகளுக்கு அதிக பட்சமாக 14 ஆண்டுகள் வரை மட்டுமே பணி வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், நிரந்தரப்பணியில் சேரும் ஆண்கள் 30 முதல் 40 ஆண்டுகள் வரை பணியாற்ற வாய்ப்பு அளிக்கப்பட்டது.

1996-இல் விமானப் படையில் பெண் அதிகாரி, கார்கில் போரில் துணிந்து வியக்கத்தக்க அளவில் போரிட்டுள்ளார். ஆனால் அவருக்கும் 12 ஆண்டுகள்தான் பணி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அநீதியை எதிர்த்து 32 பெண் அதிகாரிகள் 2003-ஆம் ஆண்டில் பொதுநல மனுவை தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதன்விளைவாக, 2010-ஆம் ஆண்டு தில்லி நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 'ஐந்து ஆண்டுகால குறுகியப் பணிக்கு பிறகு காலிப்பணியிடங்கள், தகுதி இருந்தால், நிரந்தரப் பணிக்கு பெண்களைப் பணி நியமனம் செய்துகொள்ள வேண்டும்' என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவு அப்போது பணியில் இருப்போருக்கு பொருந்தும் என்றும் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு அல்ல என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. இதனால் வழக்கு தொடர்ந்தோருக்கு மீண்டும் நிரந்தரப் பணி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதை எதிர்த்து செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை 2011-ஆம் ஆண்டு செப்.27-இல் தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மனுதாக்கல் செய்திருந்த பெரும்பாலான பெண் அதிகாரிகள் 1993 முதல் 1998-ஆம் ஆண்டுகளில் பணியில் சேர்ந்தவர்களாக இருந்தனர். அதனால், 2006 முதல் 2009-ஆம் ஆண்டுகளில் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர். பெண் அதிகாரிகளின் நிரந்தரப் பணிக்கு வாய்ப்பு தந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், அது 32 பெண் அதிகாரிகளுக்கு அநீதியை இழைத்தது. ஓய்வூதியம் வழங்குவதையாவது நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என்று மன்றாடினர்.

பாலின பாகுபாட்டை களைய கிடைத்த வாய்ப்பாக கருதி, இந்த வழக்கில் தொடர்ந்து வாதாடினேன். அதன் விளைவாக, 2022-ஆம் ஆண்டு 32 பெண் அதிகாரிகள்

நிரந்தரப் பணியாளர்களாகக் கருதி, ஓய்வூதியம் வழங்க 2022-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 12 ஆண்டுகள் தொடர்ந்து நடத்திய சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவே இதை கருதுகிறேன்.

சமுதாயத்தில் எந்த உரிமையையும் போராடி பெறும் நிலைதான் பெண்களுக்கு உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்'' என்கிறார் கரீமா சச்தேவா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com