கின்னஸ் சாதனை படைத்த 123 அடி நீள தோசை

பெங்களூரில் 123 அடி நீள தோசை சாதனை
கின்னஸ் சாதனை படைத்த 123 அடி நீள தோசை

பெங்களூரில் உள்ள பிரபல உணவுப் பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான எம்.டி.ஆர். நூற்றாண்டு தொடக்கத்தைக் கொண்டாடும் வகையில், அந்தத் தொழிற்சாலை வளாகத்தில் 123 அடி தோசை அண்மையில் தயாரிக்கப்பட்டது. இதனால் 2014-ஆம் ஆண்டு கின்னஸ் சாதனையான 54 அடி நீள தோசை தயாரிப்பு முறியடிக்கப்பட்டது.

இந்தச் சாதனையை முன்னின்று நடத்திய எம்.டி.ஆர்.நிறுவன தலைமைச் செயல் அலுவலர் சுனே பாசினிடம் பேசியபோது:

""நூறு ஆண்டுகள் என்பது ஒரு நிறுவன வரலாற்றில் மைல் கல் என்பதால், அதனை சரித்திரத்தில் இடம் பெறும் வகையில் சாதனை நிகழ்ச்சியை நடத்தினோம்.எம்.டி.ஆர். நிறுவனமானது சமையல் கலை மையத்தை அமைத்து, ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் சார்பில் மார்ச் மாதத்தில்சாதனையை நடத்துவது என முடிவு செய்தவுடன், அதற்கு சுமார் ஆறு மாதங்கள் முன்பாகவே திட்டமிடத் தொடங்கிவிட்டோம். "லோர்மென் கிச்சன் எக்விப்மென்ட்ஸ்' என்ற நிறுவனத்துடன் பேசி 120 அடி தோசை தயாரிப்பதற்கு ஏற்ற வகையில் 126 அடி நீளத்துக்கு ஒரு தோசைக் கல்லுக்கு ஏற்பாடு செய்தோம். அத்தனை நீளமான தோசைக்கல் முழுவதிலும் ஒரே சீராக வெப்பம் இருக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதால், இன்டக்ஷன் அடுப்புடன் இணைந்த தோசைக்கல்லை உருவாக்கி, அதனைப் பயன்படுத்த முடிவு செய்தோம்.

அடுத்தது, 120 அடி நீள தோசை தயாரிக்க, செஃப் ரெஜி மேத்யூ தலைமையில் சமையல் கலைஞர்கள், தொழில்நுட்பப் பிரிவினர், கேட்டரிங் கல்லூரி மாணவர்கள் என 90 பேர் கொண்ட குழு தயாரானது'' என்றார்.

சமையல் நிபுணர் ரெஜி மேத்தியூயுடன் பேசியபோது:

""வெண்மை நிற அரிசிக்குப் பதிலாக, சிவப்பு நிற அரிசியை நாங்கள் பயன்படுத்துவது வழக்கம். இந்த முறை 90 சதவீதம் சிவப்பு நிற அரிசியுடன் 10 சதவீதம் எங்களுடைய பல தானிய தோசை மிக்ஸ் சேர்த்துப் பயன்படுத்தினோம். 90 பேர் கொண்ட குழுவுக்கு சுமார் இரண்டு மாத காலம் ஒத்திகை நடைபெற்றது. தினமும் நடைபெற்ற நீளமான தோசை தயாரிக்கும் பயிற்சியில், 90 பேரும் மிகுந்த கவனத்துடன், கவனம் சிதறாமல் ஒருங்கிணைந்து வேலை செய்தோம்.

உதாரணமாக கல்லில் தோசை நன்றாக வெந்த பிறகு, 120 அடி தோசையை ஒரே நேரத்தில் ஒருங்கிணைந்து மூன்று முறை சுருட்டி மடிக்க வேண்டும். அதில் சிறு பிசகு நேர்ந்தாலும், ஒட்டுமொத்த முயற்சியும் வீணாகிவிடும். எனவே நூறு முறைகளுக்கு மேல் ஒத்திகை செய்திருப்போம்.

சாதனை நிகழ்ச்சியன்று, இன்டக்ஷன் தோசைக் கல்லின் ஒரு பக்கம் 60 சமையல் கலைஞர்களும், எதிர்புறத்தில் 15 உதவியாளர்களும் நின்றுகொண்டனர். தோசைக்கல்லின் மீது ஸ்பிரே மூலமாக தண்ணீர் தெளித்து, அதன்பிறகு லேசாக எண்ணெய் தெளித்தனர். கீழ்ப் பகுதியில் சுமார் அரை அடி திறப்பு கொண்ட, மேற்பகுதி செவ்வக வடிவில் வாய் அகன்ற மாவு ஊற்றும் தொட்டி ஒன்றை தோசைக் கல்லின் ஒரு முனையில் பொருத்தி, அதனை சீரான வேகத்தில் தள்ளிக் கொண்டே வர, தோசைக்கல்லில் மாவு விழுந்துகொண்டே வரும். உடனே அந்த மாவு தானாகவே ஒன்றரை அடி அகலத்துக்குப் தோசையாகப் பரவுவதற்கும் வழி செய்யப்பட்டிருந்தது. 123 அடி நீள தோசைக்கு அன்றைய தினம் 35 கிலோ தோசை மாவு பயன்படுத்தப்பட்டது.

"தோசை வெந்தவுடன், முதல் தடவை தோசையை மடியுங்கள்' என்று உத்தரவு வந்ததும், அத்தனைபேரும் சுவிட்ச் போட்டாற்போல ஒரே நேரத்தில் தாங்கள் வைத்திருந்த சுமார் இரண்டடி அகல தோசை திருப்பியைப் பயன்படுத்தி, தோசையை ஒரு தடவை சுற்றி, மடித்தார்கள். அடுத்தடுத்து இரண்டாவது, மூன்றாவது தடவை மடிக்க, 120 அடியில் பொன் நிறத்தில் நீளமான தோசை தயார். இந்தத் தோசையைத் தயாரிக்க மொத்தம் 11 நிமிடங்கள் ஆனது.

சாதனை நிகழ்ச்சிக்கு குறித்து முன்னரே கின்னஸ் அமைப்புக்குத் தெரியப்படுத்தியதால், லண்டனில் இருந்து பிரதிநிதி வந்திருந்தார். அவர் முன்னிலையில்தான் சாதனை நிகழ்த்தப்படவே, எம்.டி.ஆர். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுனே பாசின், கின்னஸ் சான்றிதழைப் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற தொழிற்சாலையில் ஊழியர்கள், சுற்றுப்புறப் பகுதி மக்கள், பள்ளிக் குழந்தைகள் போன்றோருக்கு சட்னி, சாம்பாருடன் தோசையை பகிர்ந்து கொடுத்தோம். "எத்தனையோ தடவை தோசை சாப்பிட்டிருக்கிறோம். ஆனால் இன்றைக்கு சாப்பிட்டது ரொம்ப ஸ்பெஷல். இது கின்னஸ் சாதனை படைத்த தோசை அல்லவா?'' என்று ஒரு மாணவன் சொன்னது நெகிழச் செய்தது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com