மனப்புண்ணுக்கு மாமருந்து

டி.டி.கே.வின் மனப்புண் போக்கிய கண்ணதாசன் பாடல்கள்
மனப்புண்ணுக்கு மாமருந்து

மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நெருங்கிய நண்பரும் மத்திய நிதியமைச்சருமாகப் பதவி வகித்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி என்ற டி.டி.கே. ஒரு நல்ல இசை ரசிகர்.

நிதியமைச்சர் பதவியில் பல ஆண்டுகள் இருந்தவர். பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி இருந்தபோது, டி.டி.கே. பதவி விலகினார்.

நிதியமைச்சர் பதவியில் இருந்து விலகிய அவர், ஒருநாள் கவியரசர் கண்ணதாசனைப் பார்க்க விரும்பினார். இந்தச் செய்தியை அறிந்த கண்ணதாசன் திகைத்துப் போனார். "ஜவஹர்லால் நேரு, காமராஜர், இந்திரா காந்தி போன்ற பெரிய தலைவர்களுக்கெல்லாம் ஆலோசகராக விளங்கிய டி.டி.கே. எதற்காகத் தன்னைப் பார்க்க விரும்புகிறார்' என்பது கண்ணதாசனுக்குப் புரியவில்லை. குழப்பத்துடன் டி.டி.கே.வை அவருடைய வீட்டில் சந்தித்தார் கண்ணதாசன்.

கண்ணதாசனை டி.டி.கே. கண்டவுடன் எழுந்து வந்து கட்டி அணைத்துகொண்டார். கண்ணதாசனின் குழப்பம் மேலும் அதிகரித்தது. 'உங்களை (கண்ணதாசன்) எப்படி புகழ்வது என்றே தெரியவில்லை? என் கவலையைப் போக்கிய மாமருந்து நீங்கள்தான்'' என்று சொன்னபோது, கண்ணதாசன் புரியாமல் விழித்தார்.

அப்போது டி.டி.கே. தொடர்ந்து பேசியது:

'வீண் பழி என் மீது சுமத்தப்பட்டு நான் பதவி விலக நேர்ந்தபோது, என் இதயம் துடித்தது. யார், யாரோ எனக்கு ஆறுதல் கூறினார்கள். ஆனாலும் என் மனம் ஆறுதல் அடைய மறுத்தது. நெஞ்சம் நிறைந்த சுமையுடன் சென்னைக்கு வந்தேன். வீட்டில் நுழைந்தபோது, வாணொலியில் ஒரு பாடல் ஒலித்துகொண்டிருந்தது. என் மனப்புண்ணுக்கு மாமருந்தாய் அந்தப் பாடல் இருந்தது. ஆம். "போனால் போகட்டும் போடா' என்னும் அந்தப் பாட்டைக் கேட்டபோது என் மனம் மகிழ்ந்து ஆறுதல் அடைந்தது.'' என்று டி.டி.கே. கூறியபோது, அவரின் குரல் தழுதழுத்தது.

'எவ்வளவு பெரிய தத்துவவங்களை எல்லாம் உங்கள் பாடல்களில் அடக்கி வைத்துள்ளீர்கள். என்னைப் போல எத்தனையோ பேரின் மனப் புண்ணுக்கு உங்கள் பாடல்கள் இதமளித்து வருகின்றன'' என்று கண்ணதாசனை டி.டி.கே. மனதாரப் பாராட்டினார்.

ஆம். கண்ணதாசனின் பாடல்கள் இன்றும் ஏராளமானோரின் மனப்புண்களுக்கு மாமருந்துதானே..!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com