வேட்பாளர்களின் விலையற்ற செல்வம்!

வேட்பாளர்களின் அறிவுச் செல்வம்: நூல்களின் மதிப்பு
வேட்பாளர்களின் விலையற்ற செல்வம்!

நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில், சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களம் காணக் கூடும் என்கிற நிலையில், ஒற்றை வேட்பாளர் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். அவர் கேரள முன்னாள் நிதியமைச்சர் தாமஸ் ஐசக்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், பத்தினம்திட்டா மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்தபோது, சொத்து விவரப் பட்டியலில், "ரூ.9.6 லட்சம் மதிப்புள்ள 20 ஆயிரம் நூல்கள்தான் தன்னுடைய சொத்துகள். வீடுகள், நிலபுலன்கள் இல்லை' என்று குறிப்பிட்டிருந்தார்.

தேர்தல் உஷ்ணம் தினம் அதிகரித்து வரும் நிலையில், எல்லோரையும் கொஞ்சம் குளிர்ச்சியுற செய்வதைப் போலவும், எல்லோரையும் விழிப்படையச் செய்வதையும் போலவும் இந்தச் செய்தி வேகமாகப் பரவி வருகிறது. இந்த அறிவுச் செல்வம் விஷயத்தில் தமிழ்நாடும் சளைத்தது இல்லை.

கனிமொழியிடம் 10 ஆயிரம் நூல்கள்

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் நாடாளுமன்ற திமுக குழுத் துணைத் தலைவரும், கவிஞருமான கனிமொழி, ""நூல்களின் எண்ணிக்கையைக் கவனத்தில் கொள்வதில்லை. ஆனால், என்னுடைய சேகரிப்பில் எப்படியும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இருக்கின்றன. மனதுக்கு எப்போதும் நெருக்கமானது நூல்கள்தான். யார் எதைக் கேட்டாலும் கொடுத்துவிடுவோம். நூல்களைக் கேட்டால் மட்டும் கொடுக்க மனம் வராது. படிக்காவிட்டாலும்கூட, அதை உடன் வைத்திருப்போம். முன்பு நாவல்களை அதிகம் படிப்பேன். இப்போது அரசியல் நூல்களைப் படிக்கிறேன். என்னுடைய பயணங்கள், தங்கும் அறைகள் என எங்கும் நூல்கள் இல்லாமல் நாள்கள் கடப்பது இல்லை'' என்கிறார்.

தமிழிசையிடம் 30 ஆயிரம் நூல்கள்

தென் சென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் இந்த விஷயத்தில் கனிமொழியை அப்படியே பிரதிபலிக்கிறார். ""என்னுடைய நம்பிக்கையே நூல்கள்தான். சேலை வாங்குவது எனக்கு எப்படி விருப்பமானதோ, அதைவிட நூல்களை வாங்குவது மிகவும் விருப்பமானது. நாங்கள் உடன்பிறந்தோர் மொத்தம் 5 பேர். அதில், 4 பேர் பெண்கள். என்னுடைய அப்பாவிடம் (காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரிஅனந்தன்) பெண் பிள்ளைகளை வைத்துள்ளீர்கள். சொத்துகள் சேர்க்க வேண்டுமா என்று கேட்டால், அவர்களுக்காக நிறைய சொத்துகள் சேர்த்து வைத்துள்ளேன் என்று நூல்களைத்தான் காட்டுவார். அப்படி வந்ததுதான் நூல்கள் மீதான தாகம். என்னுடைய வீட்டில் 30 ஆயிரத்துக்கும் மேல் நூல்கள் இருக்கும். தெலங்கானாவில் 10 ஆயிரம் நூல்களும், புதுச்சேரியில் 10 ஆயிரம் நூல்களும் சேகரித்தேன். அப்படியே விட்டு வந்திருக்கிறேன்'' என்றார்.

நூல்களை தானம் செய்யும் ரவிக்குமார்

விழுப்புரம் மக்களவைத் தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளரும் எழுத்தாளருமான து. ரவிக்குமார் நூல்களைச் சேகரிப்பதோடு அதைப் பிறருக்கு அளிப்பவராகவும் உள்ளார். அவரிடம் பேசியபோது, ""நூல்களின் விலை மதிப்பிட முடியாத சொத்துகள். அதை வேட்புமனுவில் சொத்துகளாகக் குறிப்பிட முடியுமா எனத் தெரியவில்லை. என்னுடைய தொகுதி அலுவலகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் இப்போதும் உள்ளன. நூல்களைச் சேகரித்தாலும், அவற்றை யாருக்காவது அளித்துவிடுவேன். 3 அரசு பள்ளி நூலங்களுக்கு தலா 1,000 நூல்களையும், சிறைக்கு 500 நூல்களையும் கொடுத்துள்ளேன்.

வெங்கடேசனிடம் 25 ஆயிரம் நூல்கள்

மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் சார்பில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசன், எழுத்துக்காக சாகித்ய அகாதெமி விருது, இயல் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். அவரிடம் பேசியபோது, ""ஏழாம் வகுப்பில் இருந்து நூல்களைச் சேகரிக்கிறேன். என்னிடம் இருக்கும் ஒரே சொத்து நூல்கள்தான். 25 ஆயிரம் நூல்களுக்கு மேல் வைத்திருக்கிறேன். அவை விலைமதிப்பிட முடியாதவை'' என்றார்.

நூலகம் வைத்துள்ள திலகபாமா

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் அந்தக் கட்சியின் பொருளாளரும், கவிஞருமான திலகபாமாவும் நூல்கள் மீது பிரியம் கொண்டவர்தான். அவரிடம் பேசியபோது, ""அரசியல்வாதியாக இருந்தாலும் என்னை வேறு மாதிரியாக காட்டுவது நூல்கள்தான். சிவகாசியில் 5 ஆயிரம் நூல்கள் கொண்ட சிறிய நூலகம் வைத்துள்ளேன். என்னுடைய கணவர் மருத்துவர் என்பதால், அவர் தொடர்பான 2 ஆயிரம் நூல்களும் உள்ளன. பேராசிரியர் சி.கனகசபாபதியின் திறனாய்வு நூல்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன. நூல்களைச் சொத்தாகக் குறிப்பிட்ட கேரள வேட்பாளருக்கு என் வாழ்த்துகள்'' என்றார்.

இவர்கள் மட்டுமல்லாமல், ஏனைய கட்சிகளின் வேட்பாளர்களிடம் நூல்கள் இருக்கவே செய்யும்.முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி உள்பட தலைவர்களும் பொன்னாடை, பூமாலைகளுக்குப் பதில் நூல்களை ப் பெற்று நூலகங்களுக்கு அளிக்கின்றனர். அரசியல் களத்தில் எதிரும், புதிருமாக இருந்தாலும் தமிழகத்தில் நூல்களுக்கு எதிரானவர் எவரும் இல்லை.

-குல்சாரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com