இனிமை தரும் இன்பச் சுற்றுலாக்கள்..

கலாசாரம் கற்றுத்தரும் சுற்றுலாக்கள்
இனிமை தரும்  இன்பச் சுற்றுலாக்கள்..

சுற்றுலாக்களை மேற்கொள்ளும்போது பலதரப்பட்ட மக்களின் கலாசாரம், வாழ்வியல் குறித்து அறிய முடிவதோடு , உடலும் உள்ளமும் புத்துணர்வு பெறும்'' என்கிறார் சென்னையில் ஆன்மிக, இன்பச் சுற்றுலாக்களை நடத்திவரும் சேஷாத்ரி.

கோடை விடுமுறை நெருங்கும் நிலையில், சுற்றுலா செல்வோருக்கான வழிகாட்டுதல்கள் குறித்து அவரிடம் பேசியபோது:

'அன்றாட இயந்திரப் பணிகளில் இருந்து சற்றே விலகி, உடல், மனதைப் புதுப்பித்துகொள்ள அனைவருக்கும் சிறந்ததொரு தேர்வாக இருப்பது சுற்றுலாக்கள்தான். வரலாற்றில் பலரது வாழ்க்கையில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களுக்கு பயணங்களின்போது நடைபெற்ற நிகழ்வுகளும், அவர்கள் சந்தித்த மனிதர்களும்தான் காரணம். மகாத்மா காந்தி தனது மேலாடையைத் துறந்து , சாமானியராகத் தன்னை உணர காரணமாக அமைந்தது மதுரைக்கு அவர் மேற்கொண்ட பயணம்தான்.

கல்லூரியில் மின் பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்து படித்த நான் எனது பெரியப்பா நடத்தி வந்த சுற்றுலா பயண ஏற்பாடு செய்யும் நிறுவனத்தில் உதவியாக இருந்தேன். அங்கு சுற்றுலா மேலாண்மையையும், நுணுக்கங்களையும் அனுபவக் கல்வியாக கற்றேன்.

2006-ஆம் ஆண்டில் சென்னை அயனாவரத்தில் உள்ள எனது வீட்டின் ஒரு பகுதியில் முதன்முதலாக "ஸ்ரீனிவாசா டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ்' என்ற பெயரில் அலுவலகத்தைத் தொடங்கினேன். தற்போது தாம்பரம், திருச்சி, மதுரை, கோவை , சேலம், வேலூர், புதுவை ஆகிய 8 இடங்களில் கிளை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

நிறுவனம் ஆரம்பித்தவுடன் முதன்முதலாக 70 பேருடன் நேபாளத்துக்கு சுற்றுலா மேற்கொண்டபோது, அவர்களுடைய மகிழ்ச்சி என்னை மேலும் ஊக்கத்துடன் பணியாற்ற புது உத்வேகத்தையும் அளித்தது.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வரை, சுற்றுலாத் திட்டத்தில் பயணிகளில் ஒருவராகவே பயணித்தேன். அது அவர்களின் மனநிலையை அறிந்து கொள்ளவும் மேலும் சிறப்பான சேவைகளை வழங்கவும் பெரும் வாய்ப்பாக அமைந்தது. தற்போது நேரம் கிடைக்கும் போது மட்டுமே செல்கிறேன்.

ஒரு பயணத் திட்டத்தை உருவாக்குவதற்கு முன்பு பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு நானே நேரில் சென்று அங்குள்ள உணவு, உள்ளூர் கலாசாரம், பாதுகாப்பு, தங்கும் வசதிகளைப் பரிசோதித்து அறிந்து கொள்வேன். அப்போதுதான் பயண வழித்தடம், நேர மேலாண்மை, வாடிக்கையாளர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள், பயணத் திட்டத்துக்கு ஒரு நபருக்கு ஆகும் செலவுகளைத் தீர்மானிக்க முடியும்.

தற்போது நாட்டில் பல்வேறு நகரங்களுக்கு இணைப்புச் சுற்றுலா மேற்கொள்ளும் விதமாக 18 பயணத் திட்டங்களும், துபை, அபுதாபி, தாய்லாந்து, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் வகையில் 5 பயணத் திட்டங்களும் உள்ளன.

பயணம் மேற்கொள்பவர்களுக்கான ரயில், பேருந்து, உணவு, தங்கும் விடுதி அனைத்தும் சேர்த்தே ஒரு பயணிக்கான பயணக் கட்டணம் தீர்மானிக்கப்படுகிறது. விமானப் பயணத்துக்கு மட்டும் டிக்கெட் கட்டணம் தனி.

நடுத்தர வர்க்கத்தினரின் சிரமங்களைக் கவனத்தில் கொண்டு குறைந்த விலையில் பயணத்திட்டங்களை வகுத்து, நிறைவான திருப்தியளிக்கும் வகையில் செயல்படுத்தி வருகிறோம்.

பெரும்பாலானோரின் தேர்வு வாரணாசி, ஷீரடியாக உள்ளது. கோடை விடுமுறைக் காலங்களில் குடும்பத்தினர் அந்தமான், கோவா, வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல விரும்புகின்றனர்.

மூன்று மாதங்களுக்கு முன்னரே தாங்கள் விரும்பும் சுற்றுலாத் திட்டத்தைத் தேர்ந்தெடுத்து அதற்கான முன்பணத்தை செலுத்திவிட வேண்டும். ரயில்களில் மேற்கொள்ளும் அனைத்து சுற்றுலாத் திட்டங்களிலும் சிறப்புச் சலுகையாக 12 பேர் சுற்றுலா செல்ல பதிவு செய்தால், அதில் ஒருவர் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பதிவு செய்பவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தபின்பு எங்களது பணி ஆரம்பமாகிறது. அவர்களை அங்கிருந்து பயணம் ஆரம்பித்தது முதல் மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வந்து சேரும் வரை எங்களது நிறுவன உதவியாளர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு உறுதுணையாக இருப்பார். பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து கூடுதல் உதவியாளர்கள் உடன் செல்வர்.

வெளிநாடுகளுக்கு குறைந்தபட்சம் ஆறு பேர் வரையும், உள்நாட்டு பயணங்களுக்கு குறைந்தபட்சம் ஒன்பது பேர் இருந்தாலும் பயணம் மேற்கொள்கிறோம்.

ஒவ்வொரு பயணத்திலும் ஒரு சமையல் கலைஞர், இரு உதவியாளர்கள் உடன் செல்வர். சமைப்பதற்கு தேவையான பாத்திரங்கள், பொருள்களையும் ரயிலில் உடன் எடுத்துச் செல்வோம். சமைப்பதற்கென வழக்கமாக தனி மெனு உள்ளது. சைவ உணவுகளை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு சமைத்து வழங்குகிறோம்.

சுற்றுலாவின்போது, பயணிகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையுடன் தனிக்கவனம் செலுத்துகிறோம்.

ஆண்டுக்கு சுமார் 2 ஆயிரம் பேர் வரை உள்நாட்டு சுற்றுலாவையும், 150 பேர் சராசரியாக வெளிநாட்டு சுற்றுலாவை தேர்ந்தெடுத்து பயணிக்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை குடும்பம், குடும்பமாகப் பயணிப்பர். இப்போது நிலைமை மாறிவிட்டது.

வாடிக்கையாளர்கள் பலர், குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் சுற்றுலா செல்ல எங்கள் நிறுவனத்தை அணுகும் போது அது எங்களது சேவையின் மிகப்பெரிய அங்கீகார

மாக நான் கருதுகிறேன். வாடிக்கையாளர்களின் திருப்தியே எங்கள் நிறுவனத்துக்கும், பணியாளர்களின் உற்சாகத்துக்கும் மூலதனம்'' என்கிறார் சேஷாத்ரி.

-ம.பெரியமருது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com