சாலையில் நின்று பார்க்கும் சாமானியன்!

சினிமாவின் சுதந்திர குரல் - சாமானியனின் பார்வையில்
சாலையில் நின்று பார்க்கும் சாமானியன்!

நிறுவனங்கள் சாராத சுதந்திரமான சினிமா இது. சின்ன வயதில் கூட்டாஞ்சோறு ஆக்குகிற மாதிரி ஒரு சினிமா எடுப்பது... கதை சொல்லும் முறையில், மற்ற நுட்பங்களில் சர்வதேசத்தரம் இருக்கும். சமரசம் இருக்காது. வழக்கமான ஃபார்முலா இருக்காது.

ஆனால், சுவாரஸ்மான சினிமா. சுவாரஸ்யம் என்பது பாட்டு, சண்டை, குரூப் டான்ஸில் மட்டும் இல்லை; இயல்பாைன வாழ்க்கையிலும் இருக்கிறதென சொல்கிற சினிமா'' கைகள் பற்றிக் கொண்டு பேசத் தொடங்குகிறார் வெங்கடேஷ்வராஜ். குறும்பட உலகத்தில் இருந்து வரும் படைப்பாளி. இப்போது "சிறகன்' படத்தின் இயக்குநர்.

குறும்பட உலகத்தில் இருந்து வருகிறீர்கள்.... வாழ்த்துகள்....

நன்றி. மதுரை நகரத்தின் முக்கிய அங்கமாக திகழும் அய்யர் பங்களாதான் நமக்கு ஊர். அங்கிருந்து புறப்பட்டு இங்கே வந்து சேர்ந்தது பெரும் பயணம். சின்ன வயதில் இருந்தே சினிமாதான் எல்லாம். படிப்பும் அதைச் சார்ந்தே தேர்வு செய்தேன். எம். டெக். ஃபிலிம் எலக்ட்ரானிக் மீடியா படித்தேன்.

கேமிரா தொடங்கி எடிட்டிங் வரைக்கும் மனசு அலை பாய்கிற படிப்பு. படித்து விட்டு ஏதேதோ வேலைகள். சும்மா இருக்கிற நேரத்தில் கதைகள், புத்தகம், சினிமா என தனி உலகம் இருந்தது. அப்போதுதான் குறும்படங்களுக்கான உலகம் தமிழ் சினிமாவில் திறந்தது.

நாமும் படம் எடுத்து பார்ப்போமே என்று "அடங்கலான்' என்று ஒரு குறும்படம் எடுத்தேன். நல்ல வரவேற்பு. "செஞ்சாளியே', "கடல் அலையே', "வெல்வோம்' இப்படி பயணம் தொடர்ந்தது. அதன் பின் நடிகர் சிம்புவிடம் எடிட்டராக பணியாற்றினேன். அவருடைய ஆத்மன் விடியோவுக்கு நான்தான் எடிட்டர். இப்படித்தான் நம் பயணம்.

ஒரு நல்ல முழு நீள சினிமா எடுக்க வேண்டும் என்கிற நினைப்பு மனசுக்குள் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த நேரத்தில் சினிமா பற்றி நிறைய கற்றுக் கொண்டே இருந்தேன். அப்போது அந்த கற்றல்தான் "சிறகன்'. சினிமாவுக்கான ஸ்க்ரிப்ட்டுக்கு, எதையும் கொஞ்சம் மேலே இருந்து பார்க்க வேண்டும் என சொல்லுவார்கள். அந்தக் கதைக்காக வாழ்க்கையையும் மேலே இருந்து பார்த்தேன். இப்போது ஆல் இஸ் வெல்.

எப்படி வந்திருக்கிறது படம்...

முதல் படத்தில் எல்லோரையும் ஈர்த்து, கவனம் கலைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். நாம பார்த்த, ரசித்த விஷயங்களை எடுக்க வேண்டும் என்று ஆசை வந்தது. ஆனால், முதல் முத்திரை அழுத்தமாக பதிய வேண்டும் என்று நினைத்தேன். அதற்காக ஒரு விறுவிறுப்பான திரைக்கதை அமைத்தேன்.

எல்லோரும் எதாவது ஒரு நேரத்தில் சந்திக்கிற பிரச்னை இந்தக் கதையில் இருக்கும். பணக்காரனையோ, கோடீஸ்வரனையோ, பலம் பொருந்திய தாதாவையை எங்கேயாவது சந்திப்போம். அவர்கள் நமக்கு உதவுவார்கள், இல்லையெனில் நமக்கே எதிராக திரும்புவார்கள். அப்படி ஒரு சூழல்தான் கதை. வாழ்க்கையின் அசல் முகமாக இருக்கும். என் முதல் படத்தில் குறைகளோ, பிழைகளோ இருக்கலாம்.

எதைப் பற்றியும் விமர்சனம் செய்யவோ, குறைகளை சுட்டிக் காட்டவோ, நான் படம் எடுக்கவில்லை. நல்ல கமர்ஷியல் படம். எல்லோரும் பார்த்து கழிக்கும் ஒரு சாதாரண கதை. எனக்குள் இருக்கும் நல்ல சினிமா கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு அடித்தளம். அவ்வளவுதான். நானே தயாரிப்பாளர் என்பதால் கொஞ்சம் சுமை. அவ்வளவுதான்.

உள்ளடக்கம் எப்படி இருக்கும்....

போஸ்டர் பார்த்தாலே உங்களுக்குள் ஒரு கதை ஓடும். அதுதான் இந்த கதையின் ஸ்பெஷல். இதில் என்னடா ஸ்பெஷல் என்று உங்களுக்கு மனசு ஓரத்தில் தோன்றிருக்கும். ஆனால் ஆரம்பித்த ஐந்து நிமிடத்திலேயே படம் உங்களை உள்ளே இழுத்துப் போட்டு விடும்.

படத்தின் முழு நீளமே ஒரு நாள் இரவுதான் கதை. அதிகாரம் பொருந்திய எம்.எல்.ஏ. அவரின் மகன் காணாமல் போக, மகனை தேடி அலைகிறார் எம்.எல்.ஏ. அப்போது எதிர்பாராத விதமாக அவர் கொலை செய்யப்படுகிறார். அது ஏன்.. எதற்கு...என்பதுதான் கதை.

காதல், அன்பு, ஆக்ஷன் எல்லாமும் காட்சிகள். புதுப் புது காட்சிகளாக எடுத்து முடித்திருக்கிறேன். நிச்சயம் இது எல்லாருக்குமான சினிமாவாக இருக்கும்.பஞ்சன் சிறகன் எனும் வகையை சார்ந்த பட்டாம்பூச்சியின் இடது புறம் வெள்ளை மற்றும் கருப்பு நிறமும், வலது புறம் காக்கி நிறமும் இருக்கும் அதற்கும் இந்த படத்தின் திரைக்கதைக்கும் ஒரு முக்கியமான ஒற்றுமை இருப்பதாலும், இந்தவகை பட்டாம்பூச்சியின் வாழ்க்கை எப்படி ஒரே நாளில் துவங்கி ஒரே நாளில் முடிகிறதோ அதே போல் இந்த படத்தின் திரைக்கதையும் ஒரே இரவில் நடந்து முடிவதால் இந்த படத்திற்கு " சிறகன் " என்று பெயர்வைத்தோம்.

கதைக்கான தொடக்க புள்ளி எது....

அதிகாரம் என்பது சகல மட்டங்களிலும் நம்மை படுத்தி எடுக்கிறது. கோயில்களில், மருத்துவமனைகளில், பள்ளிகளில், சாமானியர்கள் அத்தனை பேரும் காத்திருக்க அதிகாரம் படைத்தவர்கள முதல் ஆளாக உள்ளே போய் வருகிறார்கள். அதிகாரம் படைத்தவர்களின் தூரத்து சொந்தங்களுக்கு கூட பயம் கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்த நாடு எப்போதும் அதிகாரம் உள்ளவர்களுக்கு ஒன்றாகவும், இல்லாதவர்களுக்கு வேறாகவும் இருக்கிறது. ஒரு நடிகைக்காக அடித்துக் கொள்கிற இரண்டு நடிகர்களை எந்த போலீஸூம் எதுவும் செய்ய முடியாது இந்த தேசத்தில். ஆனால், சென்ட்ரல் ஸ்டேஷன் வாசலில் பொரி கடலை விற்கும் கிழவனை கொண்டு போய் ராத்திரியெல்லாம் ஸ்டேஷனில் உட்காரவைத்து துன்புறுத்தும்.

நேற்று வரை ஒன்ரையணாவுக்கு பெறாதவர்கள், கவுன்சிலர் ஆனதில், எம்.எல்.ஏ. ஆனதில்.... கார், அடியாள்கள், செல்வாக்கு என பறக்கிறார்கள்... எல்லாவற்றையும் சாமனியான் சாலையில் நின்று பார்த்துக் கொண்டிருக்கிறான். இப்படித்தான் இந்தக் கதையின் உள்ளே போனேன். 32 நாள்களில் முழுப்படமும் முடிந்து விட்டது. கஜராஜ், ஜீவா ரவி, அனந்த் நாக்,

பௌசி ஹிதாயா இப்படி நடிகர்கள். புதுமுகம் ராம் கணேஷ் கே. இவர்தான் இசைக்கு பொறுப்பு. கேமிரா சிக்கந்தர். சூழ்நிலைக்கு ஏற்ற பாடல் வரிகளை வெங்கட் தந்துள்ளார். இப்படி தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்கு சம அளவில் கை கொடுத்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com