செல்லும் இடங்களெல்லாம் சிறப்பு!

கீழ்வேளூர் பேரூராட்சி தென் இந்தியாவில் முதலிடம்
செல்லும் இடங்களெல்லாம் சிறப்பு!

'ஸ்வச் சர்வேக்ஷன்' என்ற தலைப்பிலான 2023-ஆம் ஆண்டுக்கான தூய்மை நகருக்கான போட்டியில், 15 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட பிரிவில், நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு உள்பட்ட கீழ்வேளூர் பேரூராட்சி தென் இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்து விருது பெற்றுள்ளது.

இதற்கு முக்கிய பங்கு வகித்தவர் பேரூராட்சி செயல் அலுவலர் கே.குஹன். அவர் செயல் அலுவலராகப் பணியாற்றிய பேரூராட்சிகள், கடந்த 4 ஆண்டுகளாகத் தொடர்ந்து தூய்மை நகரங்களுக்கான போட்டியில் சிறப்பிடத்தைப் பிடித்துவருகின்றன.

திருவாரூரில் உள்ள மாங்குடி கிராமத்தை பூர்விகமாகக் கொண்ட இவரிடம் பேசியபோது:

'2000-இல் வேதாரண்யம் நகராட்சியில் வருவாய் உதவியாளராக அரசுப் பணியைத் தொடங்கினேன். பின்னர், திட்டச்சேரி, கீழ்வேளூர் பேரூராட்சிகளில் வரித் தண்டலராகப் பணியாற்றினேன். தொடர்ந்து, மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சியில் 2018-இல் செயல் அலுவலராகப் பதவி உயர்வு பெற்றேன். அப்போது, 'ஸ்வச் சர்வேக்ஷனில்' தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் மாநில அளவில் மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி முதலிடத்தைப் பெற்றது. 2020-ஆம் ஆண்டில், இந்தப் பேரூராட்சி தென் மாநிலங்கள் அளவில் 25- ஆவது தூய்மையான உள்ளாட்சி அமைப்பாக முன்னேறியது.

2020- இல் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி செயல் அலுவலராகப் பணியிடம் மாற்றப்பட்டேன். அந்தப் பேரூராட்சியும் 2021-இல் 25 ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகையுடன் உள்ள நகரத்தின் தூய்மையான உள்ளாட்சி அமைப்பு என்ற அந்தஸ்தை தென் இந்திய அளவில் சிறப்பிடம் பெற்றது.

2021-இல் தலைஞாயிறு, 2022-இல் கீழ்வேளூர் பேரூராட்சிகளுக்கு அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டேன். அங்கும் எனது வெற்றிப் பயணம் தொடர்ந்தது. 2023-ஆம் ஆண்டில் தென்இந்திய அளவில் கீழ்வேளூர் பேரூராட்சி முதலிடத்தை பிடித்தது. இதற்கு காரணம் எனது பணிகள்தான்.

தோட்டக்கலைத் துறையினருக்கு ஈரமான கழிவு உரம் விநியோகப்பதன் மூலம் திடக்கழிவு மேலாண்மை மேம்படுத்துதல், உலர் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாயைத் தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக வழங்கியது, தனிநபர் வீட்டுக் கழிப்பறைகளின் எண்ணிக்கையை உயர்த்தியது, பொதுக் கழிப்பறைகளைப் புதுப்பித்து சுத்தமாகப் பராமரித்தல், தெருவிளக்கு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களுக்கு குப்பைத் தொட்டிகள் விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டேன்.

இந்தக் காரணங்களுக்காகவே, கீழ்வேளூர் பேரூராட்சியின் பொது இடங்களில் குப்பை இல்லாமல் பராமரித்ததால் நட்சத்திர அந்தஸ்து பெற்று தென் இந்திய அளவில் முதலிடம் பெற்றது.

வெற்றிக்கு, சமூக ஈடுபாடு, பொது நலனில் அக்கறை, உறவுகளை மேம்படுத்துவது, பொதுத் தேவைகளின் கீழ் செயல்படுவதால் பொதுமக்களுக்கும் பேரூராட்சிக்கும் இடையே நல்ல சமநிலையை பேணுதல், தூய்மைப் பணியாளர்களை அங்கீகாரத்துடன் நடத்துதல், ஊழலற்ற சேவை ஆகியவையே காரணம். பணி செய்யும் இடங்களில் நான் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆதரவாக இருப்பது வெற்றிக்கான முக்கிய பங்காகும்.

பொதுமக்களிடம் இருந்து குப்பைகளைச் சேகரிப்பது தொடர்பாக பல்வேறு முரண்பாடுகள் இருந்தன. ஆனால் நானே வீட்டுக்கு வீடு சென்று, குப்பைத் தொட்டிகள், பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கியது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வேன். பின்னர், பொதுமக்களும், தூய்மைப் பணியாளர்களின் சவால்களை உணர்ந்து ஆதரவு அளிப்பார்கள்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com