உன்னை சரி செய்து கொள்... உலகம் சரியாகி விடும்!

அரசியல் சூழ்ச்சிகளின் பின்னணியில் ஒரு சினிமா பார்வை
உன்னை சரி செய்து கொள்... உலகம் சரியாகி விடும்!

எனது அன்பு, கோபம், மனிதம் இதை எல்லாம் முழுவதுமாக வெளிப்படுத்த முடியாமல் எந்த அரசியலாவது தடையாக இருந்தால், அது எனக்கு வேண்டாம்'' என்றார் வினோபா பாவே. உண்மை. தொடர்ந்து பணத்துக்கும் அதிகாரத்துக்கும் எதிரான மனநிலையில் இருப்பவர்கள் எவ்வளவு நிம்மதியாக இருப்பார்கள் என்பதை அறிந்தவர்கள் உணர்வார்கள். யாரைப் பிடிப்பது, யாரைக் கவிழ்ப்பது, யாரைக் கலாய்ப்பது, யாரை எங்கே வைப்பது, யாருக்கு என்ன செய்வது என ஏகப்பட்ட புதிர்ப் பாதைகள் கொண்டதுதான் இங்கே உள்ள அரசியல்.

அலுவலகம் தொடங்கி ஒவ்வொரு மட்டத்திலும் அரசியல் செய்ய தெரிந்தவர்கள் விரைவாக முன்னேறி, வசதி வாய்ப்புகளை அனுபவிப்பார்கள். செய்யத் தெரியாதவர்கள் அப்பாவிகளாக சிங்கியடிப்பார்கள் என்பதுதான் இங்கே உள்ள பெரிய சமூக சிக்கல். இப்படி பார்க்கப் போனால், இங்கே எவனுமே புத்தனில்லை. சூழ்ச்சியையும் தந்திரமாக பிழைப்பதையும் சமார்த்தியம் என நினைக்கிற எல்லா மனிதர்களின் வாழ்க்கையும்தான் இந்தப் படம். அமைதியாக கதையின் கருப்பொருளை பேசத் தொடங்குகிறார் விஜயசேகரன். பிரபுசாலமனின் உதவியாளர். இப்போது "எவனும் புத்தனில்லை' படத்தின் இயக்குநர்.

சமூகத்தை விமர்சிக்கிற நோக்கில் வந்திருக்குமா....

விமர்சனங்களும் இருக்கிறது. குறிப்பாக தனி மனித வாழ்வு தொடங்கி அரசியல் வரைக்குமான ஏக விமர்சனங்கள் இருக்கும். இங்கே அரசியல் என்பது மக்கள் புரட்சி, தேர்தல், ஆட்சி என்பது மட்டுமே அல்ல... வேலை, தனி மனித வளர்ச்சி, குடும்பம், உறவுகள் வரை அந்த வார்த்தை ஊடுருவிக் கிடக்கிறது. குருஷேத்திர யுத்தமும் அரசியல்தான். யூதாஸ் கொடுத்த முத்தமும் அரசியல்தான். நீங்கள் எதை தருகிறீர்கள்... எதை பெறுகிறீர்கள் என்பது அல்லவா முக்கியம்.

கொலம்பிய காட்டில் மரணத்துக்குப் பிறகும் அணையாத விண்மீனாகத் திறந்து கிடந்த சே-வின் விழிகளில், சிறுநீருக்கு பை வைத்துக் கொண்டு இறுதிக் கணங்களிலும் பேசிய பெரியாரின் சொற்களில், பன்னிரண்டாம் நாளிலும் திலீபனின் இதழில் உறைந்திருந்த புன்னகையில் இருப்பதற்கெல்லாம் பெயர் என்ன.. அற்பத்துக்கும் சொற்பதுத்துக்கும் அரசியல் என்ற பெயரை எதற்குப் பயன்படுத்துகிறோம். அவரவரது வளர்ச்சிக்கும் வாழ்க்கைக்கும் பெயர்தான் பாலிடிக்ஸ் என்றாகி விட்டது இந்த தேசத்தில். கொஞ்சம் உள் நோக்கி பார்த்தால், எல்லாவற்றுக்கும் நாமே காரணமாகி இருப்போம்.

அது தவறு.. இது தவறு... எனப் பேசிப் பேசியே நமக்குள் இருக்கும் தவறுகளை சரி செய்ய தவறி விடுகிறோம். எவ்வளவு திட்டமிடல்களோடு இருந்தாலும், அவனையறியாமல் அந்த நாள்களை இந்த சமூகமும், அரசியலும் மாற்றி எழுதி விடுகின்றன. உன்னை சரி செய்து கொள்... உலகம் சரியாகி விடும் என்பதுதான் இந்தக் கதையின் நீதி.

சமூக பொறுப்பின்மையை சுட்டிக் காட்டுகிற விதமா...

நாம் ஷங்கர் சார் படங்களில் பார்த்திருப்போம்.,.. என்னங்க நாடு இது.. எல்லா இடங்களிலும் லஞ்சம், பொய், ஊழல் என மிடில் கிளாஸ் மாதவன் ஒருவர் தவறாமல் கருத்துச் சொல்லுவார். ஆனால், பெரும்பான்மையான நடுத்தர வர்க்கம் நாம் நினைப்பது போல் இல்லை. பிளாக்கில் வாங்கி கேஸ் கனெக்ஷன் வைத்திருப்பது. ஆண்டு வருமானம் 40 ஆயிரம் என்று சொல்லி பொய் சான்றிதழ், சலுகைகளை அனுபவிக்கிறோம். இப்படி சூழ்ச்சியும் மாய மந்திரங்களும் நிரம்பி கிடக்கிற வாழ்க்கை இந்தச் சமூகத்துக்கு மட்டுமே உரித்தானது.

இப்படி பல சலுகைகள் தன்னகத்தே இருந்தாலும், இன்னும் பணம் வேண்டும் என்ற ஆசையில் கையில் இருக்கும் சுக, துக்கங்களை மறந்து விட்டு ஓடுவதுதான் இங்கே காமெடி. ஆனால், பயங்கர காமெடியன்களாக சமூகத்தால் பார்க்கப்படுகிற எல்லோரும் காமெடியன்கள் அல்ல. அவர்கள் எல்லாம் காரியவாதிகள்.

சமூகம்தான் அவர்களை தவறாக புரிந்து வைத்திருக்கிறது. சாண் வயிற்றுக்காக திருடுகிறவர்களை விட, மக்களின் சேவகராக தன்னை நிலை நிறுத்தி திருடுகிறவர்கள் இங்கே நிறைய. அப்படிப்பட்ட திருடுகிறவர்களின் உலகத்தை எட்டிப் பார்ப்பதுதான் இந்தப் படம்.

பரிச்சயமான முகங்கள் யாரும் இல்லையா...

நிறைய திட்டங்கள் இருந்தன. எல்லாவற்றையும் பட்ஜெட்டுக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம். அதே நேரத்தில் கதையின் தன்மையை புரிந்தவர்கள் துணைக்கு வந்தார்கள். நபிநந்தி, ஷரத் - இந்த இருவருமே புதுமுகங்கள்தான். ஆனால், பல வருடங்களாக சினிமாவில் சாதிக்கத் துடிக்கும் இதயங்கள்.

நல்ல அறிமுகத்துக்கு காத்திருந்தார்கள். தேடி வந்தார்கள். தகுதிகளும் இருந்தன. சேர்த்துக் கொண்டேன். நிகாரிகா, சுவாசிகா இரு நாயகிகளும் நீங்கள் பார்த்த முகம்தான். இருந்தாலும், நல்ல சினிமாவுக்காக காத்திருந்தார்கள். அவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்திருக்கிறேன். இந்த கதையின் ஓட்டத்துக்கு பிரதான கதாபாத்திரங்கள் ரொம்பவே முக்கியமானவை.

அதில் மட்டும் எனக்கு சமரசம் இல்லை. வேல.ராமமூர்த்தி, சங்கிலிமுருகன், நான் கடவுள் ராஜேந்திரன், எம்.எஸ்.பாஸ்கர், சிங்கமுத்து, மாரிமுத்து என எல்லாரும் அறிந்த முகங்கள்தான். எல்லோருக்கும் இந்தப் படத்தில் தனித்துவமான இடங்கள் உண்டு. வேல. ராமமூர்த்தியின் இடம் ஆச்சரியம் கொள்ள வைக்கும். கவிஞர் சினேகன் - பூனம் கவூர் இருவரும் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள். கேரள எல்லையில் உள்ள ஒரு மலை கிராமத்தில் தங்கி படப்பிடிப்பு நடத்தியிருக்கிறேன். வாய்ப்பு தந்த சினிமா குளோபல் நெட்வொர்க்ஸ் நிறுவனத்துக்கு நன்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com