இளையோர் இதயங்களை நூலகமாக்குவோம்..!

இளைஞர்களின் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சி
இளையோர் இதயங்களை நூலகமாக்குவோம்..!

'வலைதளங்களுக்குள் வசமாகச் சிக்கிக் கொண்ட இளைஞர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திவிட வேண்டும்' என தீராநம்பிக்கையுடன் இயங்கி வருகிறார் சென்னையைச் சேர்ந்த தம்பி.

இயல்பில் கவிஞர் என்றாலும், தற்போது பதிப்பகத் துறைக்குள் தடம் பதித்து மிக, மிகக் குறைந்த விலையில் பேரிலக்கிய நூல்களைப் பதிப்பித்து வருகிறார். ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யப்படும் அந்த நூல்களை சில நூறு ரூபாய்களுக்கு வழங்கி வாசிப்பு இயக்கத்துக்கு வழிதிறந்து வைத்துள்ளார்.

அவரிடம் பேசியபோது:

'முயற்சி மட்டுமே என்னுடையது; அதை திருவினையாக்குவது சமூகத்தின் பொறுப்பு. 'நான் இன்னும் வாசிக்காத நல்ல நூல்களை வாங்கிக் கொண்டு வந்து என்னை சந்திப்பவனே எனது தலைசிறந்த நண்பன்' என்றார் ஆபிரஹாம் லிங்கன். போதிமரத்தால் புத்தரை உருவாக்க முடியும். ஆனால், ஒரு நூல் நூறு போதி மரங்களை உருவாக்கும் வலிமை கொண்டது. விநாடி முள்ளைக் காட்டிலும் வேகமான துரித வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர் இன்றைய இளம்தலை முறையினர்.

உடன்பிறவா உறுப்பாக அவர்களுடன் எப்போதும் ஒட்டிக் கொண்டிருப்பது கைப்பேசி மட்டும்தான். உலகம் அதற்குள்ளேயே அடங்கி இருப்பதாக ஒரு மாயத்துக்குள் சிக்கிக் கொண்ட அவர்கள், புற உலகின் வெளிச்சத்தை பார்ப்பதே இல்லை. இந்த நிலை மாற வேண்டும்.

நூல் விற்பனையாளராகவும், பதிப்பக ஊழியராகவும் பல்லாண்டு காலம் பணியாற்றி இருக்கிறேன். எனது சுய அனுபவத்திலிருந்து சொல்வதானால், தற்போது சமூக அறத்துடன் செயல்படும் பதிப்பகங்கள் மிகக் குறைவாகிவிட்டன. அறிவைப் பெருக்க வேண்டிய பதிப்பகத்தார் பணத்தைப் பெருக்கவே முற்படுகின்றனர்.

நூல்கள் வாசிப்பு மெல்ல, மெல்ல குறைந்து வரும் சூழலில், அதிக விலை கொடுத்து நூல்களை வாங்கப் பலர் முன்வருவதில்லை. இதைக் கருத்தில்கொண்டுதான் திரள் நிதி மூலம் நல்ல நூல்களை மலிவான விலைக்கு கொடுக்க முன்வந்தோம்.

முதலில் 'நன்செய் பிரசுரம்' என்ற பதிப்பகத்தைத் தொடங்கி 'பெண் ஏன் அடிமையானாள்' உள்பட சில சிறு நூல்களை ரூ.10-க்கு வழங்கினோம். அதன் பின்னர், சீர்வாசக வட்டத்தை தொடங்கி, இறவாப் புகழ் பெற்ற இலக்கிய நூல்களை பதிப்பித்து வருகிறோம்.

புதுமைப்பித்தன் கதைகளின் முழுத் தொகுப்பையும் தரமாக அச்சிட்டு கெட்டி அட்டையுடன் ரூ.100-க்கு விற்பனை செய்தோம். அதற்கு கிடைத்த வரவேற்பு அமோகமானது. மிகக் குறைந்த நாள்களில் 30 ஆயிரம் பிரதிகள் விற்று புத்தக உலகில் ஒரு புரட்சி ஏற்படக் காரணமானார் புதுமைப்பித்தன். அந்த உத்வேகம்தான் மாக்ஸிம் கார்க்கியின் 'தாய்' நாவலை ரூ.150-க்கும், கந்தர்வன் கதைகளை ரூ.100-க்கும், 'சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி', 'கடலுக்கு அப்பால்' ஆகிய நாவல்களை ரூ.100-க்கும் விற்பனை செய்ய எங்களை உந்தித் தள்ளியது.

நிகழாண்டு சென்னை புத்தகக் கண்காட்சியின்போது, 'இருபதாம் நூற்றாண்டு சிறுகதைகள் நூறு' என்ற பெரிய நூலை ரூ.300-க்கு விற்பனைக்கு கொண்டு வந்திருந்தோம். தமிழ் இலக்கிய பிதாமகன்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நூறு சிறந்த சிறுகதைகள் அடங்கிய அந்தத் தொகுப்புக்கு வாசகர்கள் வானளாவிய வரவேற்பைத் தந்தனர். ஓரிரு வாரங்களுக்குள் 5,000 பிரதிகள் அவை விற்றுத் தீர்ந்தன.

அம்பேத்கர் எழுதிய 'புத்தரும் அவர் தம்மமும்', பேராசிரியர் நலங்கிள்ளியின் 'ஆங்கில ஆசான்' (ஆங்கில பயிற்சி வழிகாட்டி) ஆகிய நூல்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நாவலர் உரையுடன் கூடிய திருக்குறள் நூல் 50 ஆயிரம் பிரதிகள் விற்றன. இதே நம்பிக்கையுடன் லியோ டால்ஸ்டாயின் உலகப் பேரிலக்கியமான 'போரும் வாழ்வும்' நாவலை மலிவு விலையில் வெளிக் கொண்டு வர முயன்று வருகிறோம்.

இன்னொருபுறம் நகைச் சீட்டு, ஏலச் சீட்டு போன்று, நூல்கள் சேமிப்புத் திட்டத்தை அண்மையில் தொடங்கியுள்ளோம். அதன்கீழ் மாதம் ரூ.500 வீதம் வசூலித்து, ஓராண்டுக்கு பிறகு ரூ.8 ஆயிரத்துக்கும் மேல் விலை கொண்ட புத்தகங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் கலை, இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்குவதற்காக எங்களிடம் பலர் நூல்களை வாங்கிச் செல்கின்றனர்.எங்களுடைய இந்த முயற்சிகள் அனைத்துக்கும் மாணவர்களும், இளையோரும் ஆதரவுக் கரம் கொடுத்து வருகின்றனர்.

எப்படியாவது அவர்களை வலைதளச் சுழலுக்குள் இருந்து மீட்டு வாசிப்பு தளத்துக்குள் அழைத்து வந்துவிட வேண்டும் என்ற எண்ணம்தான் தடைகளை தகர்த்துக் கொண்டு எங்களை பயணிக்க வைக்கிறது'' என்கிறார் கண்களில் நம்பிக்கையுடன் கவிஞர் தம்பி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com