கலைக்கு வயது தடையல்ல..!

கலைக்கு வயது தடையல்ல..!

வயது எண்ணிக்கை மட்டுமே, கலையில் தடையில்லை

"மனதுக்குப் பிடித்தமான கலையை செய்வதற்கு வயது ஒரு தடையல்ல; இதற்கு கடினமான உடல் அசைவுகள், உணர்வை வெளிப்படுத்தும் முகபாவங்கள் கொண்ட பரதக் கலை விதிவிலக்கல்ல'' என்கிறார் காயத்ரி சந்திரசேகர்.

சென்னையில் பிறந்து ஐந்து வயதிலேயே பரதக் கலையைக் கற்று திருமணத்துக்குப் பின்னர் பெங்களூரில் குடியேறியவர் காயத்ரி சந்திரசேகர். 2009-ஆம் ஆண்டு முதல் கோரமங்களாவில் "ந்ருத்யா' கலைப் பள்ளியைத் தொடங்கி, பரதக் கலையை கற்றுத் தரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

பதினைந்து ஆண்டுகளில் 250 மாணவர்களுக்கு பரதநாட்டியத்தைப் பயிற்றுவித்திருக்கிறார். நாற்பத்து எட்டு வயதாகும் அவர், நாற்பது வயதைக் கடந்த ஐந்து பெண்களுக்கு பரதநாட்டியம் கற்றுத் தந்து, அரங்கேற்றத்தையும் நிகழ்த்தியிருக்கிறார்.

அவரிடம் ஓர் சந்திப்பு:

பரதக் கலை குறித்து..?

ஆடல் கலைகளில் தொன்மையானதும், பழம்பெருமை வாய்ந்ததுமான பரதக் கலை, உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. பரத முனிவரின் கண்டுபிடிப்பான பரதக் கலை, பாவம், ராகம், தாளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட அற்புத கலைவடிவமாகும். இசையும் தாளமும் இயைந்தொழுகும்போது, முகமும் உடலும் காட்டும் உணர்ச்சிகள்தான் பரதக்கலையை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. உணர்வில் கலந்து, உயிரில் உறையும் பரதக் கலையை விரும்பாத இளம்பெண்களே இல்லை. உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், பரதம் கற்கும் வழக்கத்தை தமிழ் பெண்கள் விட்டதில்லை.

பரதக் கலை மீது உங்களுக்கு எவ்வாறு ஆர்வம் வந்தது?

சென்னையில் எனது வீட்டுக்கு எதிரில் வசித்து வந்த முதல் பெண் நட்டுவாங்கராக சாதனை படைத்த கே.ஜே.சரசாவிடம் ஐந்து வயது முதல் பரதநாட்டியம் கற்றேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பரதநாட்டியம் கற்றுக் கொடுத்தவர் சரசா. பரதநாட்டியத்தைத் தவிர, கட்டுப்பாடு, ஒழுக்கம், ஆர்வம், அர்ப்பணிப்பு போன்ற குண இயல்புகளை சரசாவிடம் கற்றேன்.

திருமணத்துக்குப் பின்னர் பெங்களூரில் குடியேறியபிறகு பரதக்கலையை பிறருக்கும் கற்றுத் தரும் எண்ணத்தில், 2009-ஆம் ஆண்டு முதல் "ந்ருத்யா' கலைப் பள்ளியைத் தொடங்கி பரதநாட்டியம் கற்றுத்தருகிறேன்.

பரதத்தை கற்க வயது தடையா?

லட்சுமிரமணி என்பவரின் மகள்கள் இருவரும் என்னிடம் பரதநாட்டியம் கற்றனர். ஒருநாள் என்னிடம் பேசிக்கொண்டிருந்த லட்சுமி, "நானும் பரதநாட்டியம் கற்க முடியுமா?' என்று கேட்டார். "ஏன் முடியாது? கண்டிப்பாக கற்கலாம்' என்றேன். நாற்பது வயதாகும் லட்சுமிரமணியை தொடர்ந்து 40 வயதை கடந்த சுமன் வெலகபுடி, மோனிகா லதா, ஸ்வேதா, கீதா ஆகியோர் பரதநாட்டியத்தைக் கற்க ஆர்வம் காட்டினர்.

பரதநாட்டியம் ஆடும் பெண்களின் உடல் எவ்வகையில் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் உண்டு. இருந்தாலும், கற்பதற்கு எந்த வயதும் தடையில்லை. நாற்பத்து எட்டு வயதாகும் நான் இன்றைக்கும் பரதநாட்டியம் ஆடி வருகிறேன். அதனால் ஆடும்போது ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் எனக்கு தெரியும்.

எனது அனுபவத்தின் அடிப்படையில் உடல் அசைவில் சில மாறுதல்களை செய்து பரதநாட்டியம் கற்றுத் தந்தேன். ஆனால், பாவம், முத்திரைகளில் எந்தவிதச் சமரசமும் செய்துகொள்ளவில்லை. அவர்களும் நான்கு ஆண்டுகள் முதல் ஆறு ஆண்டுகள் வரை கடினமாக உழைத்து பரதக்கலையை கற்றுத் தேர்ந்தனர். அதனால், அரங்கேற்றம் செய்யலாமே என்றபோது, அவர்கள் முதலில் தயங்கினர். பெண்களால் சாதிக்க முடியாதது

எதுவுமில்லை. வயது ஒரு எண் தானே தவிர, அதற்கு வேறு முக்கியத்துவம் இல்லை என்பதை எடுத்துக்கூறி தைரியமூட்டினேன்.

அவர்களும் கடினமாக முயன்று, கடந்த நான்கு மாதங்களாக நாள்தோறும் சில மணி நேரங்கள் பயிற்சி எடுத்துகொண்டனர். உறவினர்கள், வேலை என்று பல்வேறு கூறுகளில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொண்டு, ஐந்து பேரும் அரங்கேற்றத்துக்குத் தயாரானார்கள். அதன்படி, மார்ச் 24-இல் ஸ்வேதா, கீதா, ஏப். 7-இல் லட்சுமிரமணி, சுமன் வெலகபுடி, மோனிகா லதா ஆகியோரின் அரங்கேற்றம் நடைபெற்றது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, நாற்பது வயதை கடந்த மேலும் பலரும் பரதநாட்டியம் கற்க ஆர்வம் காட்டுகின்றனர். உள்ளத்தையும், உடலையும் தூய்மையாகவும், நெகிழ்வாகவும் வைக்கக் கூடியது பரதக்கலை. கலையை கற்க வயது தடையில்லை. பெண்கள் உணர்ந்து, பலரும் பரதநாட்டியத்தை கற்க வேண்டும்.

வேற்றுமையில் ஒற்றுமை..!

நாற்பது வயதைக் லட்சுமிரமணி, சுமன் வெலகபுடி, மோனிகா லதா ஆகிய மூவரும் ஒன்றாக அரங்கேற்றத்தை நிகழ்த்திக் காட்டினர். வெவ்வேறு குடும்பப் பின்னணி, கலாசாரப் பின்புலம், மொழியை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பரதநாட்டியத்தை கற்று, அரங்கேற்றம் செய்வதில் இந்தியர்களாகவே மிளிர்ந்துள்ளனர். மூவரும் கைநிறைய சம்பாதிக்கும் பணியை புறந்தள்ளிவிட்டு, மனநிறைவைத் தேடி பரதநாட்டியத்தை கரம்பிடித்துள்ளனர்.

மோனிகா லதா: ராஜஸ்தான் எனது சொந்த ஊர். திருமணத்துக்குப் பின்னர் பதினேழு ஆண்டுகளாக பெங்களூரில் வசித்து வருகிறேன். பட்டயக் கணக்காளர் பணியில் ஈடுபட்டு வந்தேன். குடும்பத்துக்காக வாழ்ந்த நான், எனக்காக வாழ விரும்பினேன். நடனமாடுவது சிறு வயதில் இருந்து பிடிக்கும். அது சாதாரண நடனமே தவிர, பரதநாட்டியம் அல்ல. பரதநாட்டியம் பற்றி கேள்விப்பட்டதும் கிடையாது. பரதநாட்டியம் ஆடுவதை பார்த்ததும் கிடையாது.

எனது கணவர் விவேக் அளித்த ஆலோசனை, ஊக்கத்தின் விளைவாக நாற்பத்து ஆறு வயதில் பரதநாட்டியத்தை கற்க முயற்சித்து, வெற்றிபெற்றுள்ளேன். பட்டயக் கணக்காளர் பணியை துறந்துவிட்டு முழுமூச்சாக பரதநாட்டியம் கற்றேன். இதற்கு என் குடும்பம் உறுதுணையாக இருந்தது. திருமணத்தின்போது பி.காம். படித்திருந்த நான், பட்டயக் கணக்காளர் ஆவதற்கு, அத்தொழில் ஈடுபட்டிருந்த எனது கணவரே காரணம். தற்போது பரதநாட்டியத்தையும் அவரால் கற்று, நல்ல பெயர்

எடுத்துள்ளேன். பெண்கள் சாதிக்க, வயது ஒரு தடையில்லை. பரதம் அருமையான ஆடற்கலை. பரதநாட்டியத்தை ராஜஸ்தானில் பிரபலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளேன்.

லட்சுமி ரமணி: புதுக்கோட்டையைச் சேர்ந்தவள்தான் நான். எனது தந்தை ரமணி உள்ளிட்ட உறவினர்கள் பரதநாட்டியத்தில் ஆர்வம் கொண்டவர்கள்.

ஐம்பது வயதை நெருங்கப் போகிறதே, வாழ்க்கையில் என்ன சாதித்தோம்? என்று எனக்கு ஒருநாள் கேள்வி எழுந்தது. அப்போதுதான் சின்ன வயதில் பரதநாட்டியம் கற்று, அதை தொடர முடியாத என் தாய் கெüரி நினைவுக்கு வந்தார். பரதநாட்டியத்தைத் தொடர முடியாத அவரது மனக் குறையைப் போக்கும் வகையில் பரதநாட்டியம் கற்க முடிவு செய்தேன். அதற்கு என் கணவர் பத்ரிநாராயணன், மகள்கள் அனன்யா, அக்ஷயா ஆகியோர் முழு ஆதரவு அளித்தனர்.

எனவே, விடாமுயற்சியாக ஆறு ஆண்டுகள் பரதநாட்டியம் கற்றேன். பொறியாளரான நான் தனியார் பெருநிறுவனத்தில் உயர்ந்த பதவியில் இருந்தேன். எனினும், பரதநாட்டியத்துக்காக அந்தப் பணியை விட்டுவிட்டு, அரங்கேற்றத்தையும் செய்துமுடித்துள்ளேன். இது எனக்கு மனநிறைவை அளிக்கிறது. இத்துடன் நில்லாமல், தொடர்ந்து பரதநாட்டியம் ஆட முடிவு செய்திருக்கிறேன். எங்களுக்கு நல்ல குருவாக காயத்ரி சந்திரசேகர் கிடைத்தார். அவர் அளித்த ஊக்கம் எங்களை இயக்கியது. சளைக்காமல், சலிக்காமல் கற்றுத்தந்தார். குடும்ப பிரச்னைகளில் சிக்கி தவித்தபோதும், பரதநாட்டியப் பயிற்சியை விடாமல் தொடர உதவினார். அவருக்கு நன்றி சொல்லாமல், எங்கள் சாதனையை பெருமையாக பேச முடியாது.

சுமன் வெலகபுடி: ஆந்திர மாநிலம்தான் எனது பூர்விகம். இருபத்து ஏழு ஆண்டுகளாக கார்ப்பரேட் நிறுவனத்தில் துணைத் தலைவராக பணியாற்றுகிறேன். யோகாவில் பட்டம் பயின்று வருகிறேன். பரதநாட்டியத்தில் ஆறு ஆண்டுகளாக பயிற்சி எடுத்து, அரங்கேற்றம் செய்து முடித்திருக்கிறேன்.

நான், லட்சுமி, மோனிகா ஆகிய மூவரும் இணைந்து 2 மணிநேரம் புஷ்பாஞ்சலி, அலரிப்பூ, ஜதீஸ்வரம், வர்ணம், தில்லானா, மங்கலம் ஆகியவற்றை தனியாகவும், குழுவாகவும் அரங்கேற்றத்தில் ஆடினோம். எனது கணவர் ஸ்ரீகாந்த் வெலகபுடி, பி.டெக் பட்டம் படிக்கும் மகன் ரேவந்த் ஆகியோரின் ஊக்கம், என்னை பரதநாட்டியம் கற்க வைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com