கொல்லிமலை வனத்தை மீட்டெடுக்க...

கொல்லிமலை மீட்புக்கு கைகோர்க்கும் நாமக்கல் தன்னார்வ படை
கொல்லிமலை வனத்தை மீட்டெடுக்க...

மனிதர்களுக்கு நிழல் கொடுத்த மரங்கள் அழிந்து சாலைகளாகின. விலங்கினங்களுக்கு ஆதரவான வனங்கள் அழிந்து ஆலைகளாகின. முன்பெல்லாம் ஆண்டில் ஒரு மாதம் மட்டுமே வெப்பத்தைக் கக்கிய சூரியன், காலமாற்றத்தால் வெப்ப அலையாக உருவெடுத்து நான்கு மாதங்களுக்கு அவதிக்குள்ளாக்கி வருகிறது.

மரங்களைக் காப்பதே இதற்கு ஒரே தீர்வு. அழியும் மரங்களையும், வனங்களையும் மீட்டெடுக்கத் தயாராகி வருகிறது நாமக்கல்லைச் சேர்ந்த தன்னார்வ மீட்புப் படை. இயற்கை சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்த மீட்புப் படையின் ஒருங்கிணைப்பாளர் பசுமை பி.ராஜசேகர் கூறியதாவது:

""வனங்களையும், விலங்கு இனங்களைக் காப்பது மட்டுமே எங்களது முக்கிய நோக்கம். இவை தவிர, தூய்மைப் பணி, மரக்கன்றுகளை நடுதல், மூலிகைச் செடிகள் வளர்ப்பு, பறவைகள், விலங்குகளுக்கு குடிநீர் வசதி, மலைவாழ் மக்களுக்கு விழிப்புணர்வு, வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல் போன்றவற்றையும் மேற்கொண்டு வருகிறோம்.

இயற்கை எழில் கொஞ்சும் மலைகளில் ஒன்று கொல்லிமலை. மூலிகை மரங்களும், அவற்றின் வாசமும், அங்கு அருவியாகக் கொட்டும் நீரும் சுற்றுலாப் பயணிகளை புத்துணர்வைப் பெறச் செய்கிறது. மலைகளில் காணப்படும் அதிகப்படியான மூலிகைகளால் கொல்லிமலையை "மூலிகைகளின் ராணி' என்றும், "வேட்டைக்காரன் மலை' என்றும் அழைப்பது உண்டு.

1,400 மீ. உயரம் கொண்ட இந்த மலைக்கு 73 குறுகிய கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்குச் சவாலாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.

கடந்த இரு மாதங்களில், கொல்லிமலை வனத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ, 1-ஆவது கொண்டை ஊசி வளைவு முதல் 20-ஆவது கொண்டை ஊசி வளைவு வரையில் 200 ஏக்கர் பரப்பிலான மூலிகை மரங்கள், மூங்கில் மரங்கள், மிளகுச் செடிகளைச் சாம்பலாக்கியது.

இதனால் அங்கிருந்த பறவை இனங்கள், குரங்கு இனங்கள் வாழ வழி தேடி அடிவாரப் பகுதியில் வந்து காத்துக் கிடக்கின்றன. காட்டுத் தீ, வெயிலின் தாக்கம் அதிகரிப்பு போன்றவற்றால் குரங்குகள் உணவு, நீர் கிடைக்காமல் சாலைகளில் தவித்து கொண்டிருக்கின்றன.

"கொல்லிமலை வனத்தை மீட்டெடுக்க வேண்டும்; வாழ்விடத்துக்காகத் தவிக்கும் குரங்கு இனங்களுக்கு உதவ வேண்டும்' என்ற கொள்கையுடன் 600 பேரை உறுப்பினர்களாகவும், நாமக்கல்லைத் தலைமையிடமாகவும் கொண்டு, "தன்னார்வ வன மீட்புப் படை' உருவாக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்ட நிர்வாகமும், வனத் துறையும் மீட்புப் படையினருக்குத் தேவையான உதவிகளை அளிக்கின்றனர்.

தீக்கிரையான கொல்லிமலை வனப்பகுதியில் இன்னும் இரண்டு மாதங்களில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விதைப்பந்துகளை தூவி பழைய வனத்தை மீட்டெடுக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான பணிகளையும் தொடங்கியுள்ளோம். உணவு, நீருக்காகத் தவிக்கும் குரங்குகளுக்குத் தேவையானவற்றை தற்போது வழங்கி வருகிறோம்.

ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும். அந்தக் கால கட்டத்தில் தூவினால் விரைவாக விதைப்பந்துகள் முளைக்கத் தொடங்கி விடும்.

மீட்புப் படையில் ஆசிரியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பட்டதாரிகள், வியாபாரிகள், இளைஞர்கள், தொழில் முனைவோர், அரசு அலுவலர்கள், காவல் துறையினர், பழங்குடியின மக்கள் உள்ளிட்ட பலரும் இடம் பெற்றுள்ளனர்.

கொல்லிமலை வனத்தைப் பாதுகாப்பது மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் இயற்கை சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்த தன்னார்வ மீட்புப் படையை, தமிழக அளவில் கொண்டு செல்வதே எங்களுடைய முக்கிய நோக்கம். இயற்கை சார்ந்த தன்னார்வப் பணிகளில் ஆர்வமுடையோர் இந்தப் படையில் அதிகம் இணைந்து வருகின்றனர்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com