ஒரு தமிழ் நாடகத்தால் கேரளத்துக்கு கிடைத்த நூலகம்!

பொதுவாக,  கேரள மக்கள்ல படிச்சவங்க அதிகமுன்னு ஒரு கருத்து உண்டு. அவங்க மாநிலத்தில் ஒரு ஏரியாவில்,  அவங்க தன் அறிவை வளர்க்க ஒரு தமிழ் இயக்குநர் காரணமா இருந்தாரு சொன்னா நம்புவீங்களா?
ஒரு தமிழ் நாடகத்தால் கேரளத்துக்கு கிடைத்த நூலகம்!


பொதுவாக,  கேரள மக்கள்ல படிச்சவங்க அதிகமுன்னு ஒரு கருத்து உண்டு. அவங்க மாநிலத்தில் ஒரு ஏரியாவில்,  அவங்க தன் அறிவை வளர்க்க ஒரு தமிழ் இயக்குநர் காரணமா இருந்தாரு சொன்னா நம்புவீங்களா?

காரைக்குடியிலயிருந்து நாராயணன்னு ஒரு இளைஞர் சினிமாவுல பெரிய ஆளா வரணும்னு ஆசைப்பட்டு வருகிறார். அப்போ சினிமாவைவிட நாடகங்களே அதிகப் புகழ் வாய்ந்ததாகவும், வாய்ப்புகள் தருவதாகவும் இருந்தது. சினிமாவில் நடிக்க வருபவர் முதல் கதாசிரியர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர் என எல்லோருக்கும் முதலில் நாடகம்தான் கை கொடுத்து வரவேற்கும்.

அப்படி நாராயணனுக்கு மேஜர் சுந்தர்ராஜனோடு பழக்கம் ஏற்படுகிறது. அவரிடம் ஓர் ஒன்லைனை நாராயணன் சொல்ல "ரொம்ப நல்லா இருக்கு... இதை விரிவாக்கி எழுதுங்கன்னு ஓர் அறை ஏற்பாடு செய்து தருகிறார் மேஜர். அந்த அறையில் அவர் எழுதிய மேஜை யாருடையது தெரியுமா?... இயக்குநர் கே.பாலசந்தருடையது. நாடகத்தை எழுதி மேஜரிடம் கொடுக்கிறார் நாராயணன்.

மேஜர் உடனே அதை நாடகமாக போடுகிறார். நாடகம் மிகப் பெரிய வெற்றி. பிய்த்துக்கொண்டு போகிறது. நாடகத்தை எல்லோரும் பாராட்டுகிறார்கள். அந்த நாடகம்தான் "அச்சாணி. 

எழுதியவர் காரைக்குடி நாராயணன்.

நாடகத்தின் வெற்றியைப் பார்த்ததும் அதை தமிழ், மலையாளம் என இரு மொழிகளிலும் தயாரிக்க ரவி என்கிற ரவீந்திரன் நாயர் என்பவர் முன் வந்து கேட்கிறார். நாராயணனும் அதை ரவிக்கு விற்கிறார்.

இந்த ரவி சாதாரண ஆளல்ல. அவரது தந்தை கொல்லத்தில் பெரிய முந்திரி வியாபாரி. வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்பவர். இயல்பாகவே பணம் கொட்டும் தொழில். ஆனால், கலையின் மேல் கொண்ட ஆசை காரணமாக, ரவி முந்திரி வியாபாரத்தோடு சினிமா எடுக்கவும் ஆசைப்படுகிறார். அப்படி அச்சாணி நாடகத்தைப் பார்க்க, அவர்களுக்கு பிடித்துப்போகிறது. 

"முந்திரி வியாபாரிக்கு எதற்கு சினிமா? 

என்பது போன்ற கேள்விகள் தொடர்ந்ததால், "இந்தப்படம் வெற்றி பெற்றால் அந்த லாபத்தில் இந்த ஊருக்கு ஏதாவது நல்லது செய்கிறேன் எனச் சொல்லி பிறர் வாயை மூடுகிறார் ரவி.

நாராயணனிடம் வாங்கிய "அச்சாணி கதையை முதலில் மலையாளத்தில் எடுக்கிறார்கள். பிரேம் நஸீர் நாயகனாக நடிக்க, நாயகியாக நந்திதா போஸை அழைத்து வருகிறார்கள். இயக்குநர் ஏ.வின்சென்ட். 12 ஜூலை 1973இல் படம் வெளியாகி சக்கை போடு போடுகிறது.

அச்சாணியின் புகழ் எதிரொலியாக, ரவீந்திரன் நாயர் "அச்சாணி ரவி என அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார். பெரும் லாபம் கிடைத்ததும் சொன்னபடி அவரோடு மூன்று நண்பர்களும் சென்று கலெக்டரை சந்திக்கிறார்கள். கொல்லம் நகரத்தில் ஒரு பெரிய நூலகத்தைத் திறக்க ஆசைப்படுவதாகச் சொல்ல கலெக்டரும் ஊர் முக்கியஸ்தர்களை அழைத்துப்பேசி, ஒரு கமிட்டியை உருவாக்குகிறார்கள். கமிட்டி, அப்போதைய மந்திரி பேபி ஜோன், டி.கே.திவாகரன் இருவரிடமும் செல்ல அவர்கள் ஒரு இடத்தை ஒதுக்குகிறார்கள்.

அங்கு கட்டப்பட்ட நூலகம் 1979இல்  உருவாகி திறக்கப்படுகிறது. திறந்து வைத்தவர் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய். முதல்வர் பி.கே.வாசுதேவன் நாயர், ஆளுநர் ஜோதி வெங்கடாசலம்.

"அச்சாணி என்கிற ஒரு திரைப்படத்தின் கதையால் கொல்லத்தில் ஒரு பெரிய கலை அரங்கத்துடன் கூடிய நூலகம் இன்றும் அறிவைப் புகட்டிக்கொண்டிருக்கிறது.

கலையால் சமூகத்துக்கு நன்மையும் கிடைக்கிறது என்பது எவ்வளவு சுகம்..!

குறிப்பு:

அப்படத்தை தமிழில் அவர்கள் எடுக்காததால் நாராயணனே அவருடைய கதையை அதிகத்தொகை கொடுத்து வாங்கி, அவரே தயாரித்து இயக்கி, கடனாளி ஆனதெல்லாம் தனிக்கதை. அச்சாணி ரவி என்கிற தயாரிப்பாளரால் கேரளத்திரையுலகமும் இந்திய திரையுலகத்தின் முன்பு கெத்து காட்டி நடந்தது வரலாறு. 

காரணம், ரவி அச்சாணிக்குப்பிறகு தயாரித்த படங்கள் தாம்....
காஞ்சனசீதா(ஜி.அரவிந்தன்), தம்பு(ஜி.அரவிந்தன்), கும்மாட்டி
(ஜி.அரவிந்தன்), எஸ்தப்பன்
(ஜி.அரவிந்தன்), போக்குவெயில்
(ஜி.அரவிந்தன்), எலிப்பத்தாயம் 
(அடூர் கோபாலகிருஷ்ணன்),
மஞ்சு(எம்.டி.வாசுதேவன் நாயர்), முகாமுகம் (அடூர் கோபாலகிருஷ்ணன்), அனந்தரம் (அடூர் கோபாலகிருஷ்ணன்), விதேயன் (அடூர் கோபாலகிருஷ்ணன்) உள்ளிட்டவை.
இனி கொல்லத்துக்காரரிடம் சொல்லலாம். காரைக்குடி நாராயணன் என்பவரின் தமிழ் நாடகம் தான் கொல்லத்து மக்களின் பொது அறிவுக்கல்வியின் அச்சாணி..!

ஒரு நல்ல விஷயம் வரணும்னா எப்படியும் வந்திடும்.....

("செல்வன் அன்பு முகநூல் தொகுப்பிலிருந்து...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com