கண்ணைக் கவரும் கண்ணாடி கலைப்பொருள்கள்

தஞ்சாவூர் சோழர் காலம் முதல் கலைகளுக்கு தாயகமாகத் திகழ்கிறது. தலையாட்டி பொம்மை, ஓவியம், கலைத்தட்டு, வீணை, நெட்டி வேலைப்பாடு உள்ளிட்டவற்றின் வரிசையில், அங்கு கண்ணாடி பொருள்களும் அடக்கம்.
கண்ணைக் கவரும் கண்ணாடி கலைப்பொருள்கள்

தஞ்சாவூர் சோழர் காலம் முதல் கலைகளுக்கு தாயகமாகத் திகழ்கிறது. தலையாட்டி பொம்மை, ஓவியம், கலைத்தட்டு, வீணை, நெட்டி வேலைப்பாடு உள்ளிட்டவற்றின் வரிசையில், அங்கு கண்ணாடி பொருள்களும் அடக்கம்.

தஞ்சாவூர் கண்ணாடி பொருள்கள் நாயக்கர்கள் ஆட்சிக்காலத்தில் வந்திருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால், மராட்டிய மன்னரான இரண்டாம் சரபோஜி அளித்த ஆதரவுதான் இந்தக் கலை வளர்ச்சியடைந்தற்குக் காரணமாக அமைந்தது.

மராட்டியர் காலத்தில் தஞ்சாவூர் ஓவியத்துக்கு மெருகூட்டுவதற்காகப் பக்கவாட்டில் கண்ணாடித் துண்டுகள் பொருத்தும் பழக்கம் வழக்கத்துக்கு வந்தது. நாளடைவில் கண்ணாடித் துண்டுகளிலிருந்து கலைப்பொருள்களை உருவாக்கும் விதமாக, இந்தக் கலை பரிணாம வளர்ச்சி பெற்றது.

பல்வேறு அளவுகளைக் கொண்ட கண்ணாடித் துண்டுகளைக் கொண்டு, பல வகையான கலைப்பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.

தொடக்கக் காலத்தில் கோயில், பள்ளியறை மண்டபம், பல்லக்கு போன்ற கோயில் தொடர்பான பொருள்கள் மட்டுமே செய்யப்பட்டன. காலப்போக்கில் திருமண மண்டபத்தில் தூண்கள், வளைவுகள் உள்ளிட்டவற்றுக்கு கண்ணாடி பொருள்களால் அலங்காரம், பல்லக்கு, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் கண்ணாடித் துண்டுகளைப் பதித்து அலங்காரம் செய்யும் நிலைக்கு இந்தக் கலை உயர்ந்தது.

சாதாரண மக்களும் வாங்கும் விதமாக, பூர்ண கும்பம், தட்டு, வீடுகளில் பூஜை மண்டபம், குடம், செம்பு, கூம்பு போன்றவற்றிலும் கண்ணாடி பொருள்களால் அலங்காரம் செய்யப்பட்டன. தாம்பூலத் தட்டு, சந்தனக் கிண்ணம், குங்குமச் சிமிழ், நகைப் பெட்டி, அரசாணிப்பானைகள் (அடுக்கு பானைகள்), சில்வர் உருளி பானைகள் போன்றவற்றிலும் கண்ணாடித் துண்டுகளால் கலைநயத்துடன் பதிக்கப்படுகின்றன.

ரசம் பூசப்பட்ட கண்ணாடிகள், பாரம்பரிய பச்சை, சிவப்பு நிற வண்ணம் பூசப்பட்ட கண்ணாடிகள், தங்கப்பட்டை, சுக்கான் தூள், புளியங்கொட்டைத் தூள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, தேவையான வடிவங்களில் இந்தக் கண்ணாடிப் பொருள்கள் செய்யப்படுகின்றன.

ஆனால், இந்தக் கலைப் பொருள்களை மிகச் சில குடும்பங்கள் மட்டுமே செய்து வருகின்றன. 45 ஆண்டுகளாகச் செய்து வரும் தஞ்சாவூர் தெற்கு வீதியைச் சேர்ந்த அறுபத்து ஆறு வயதான எல். செல்வராஜ் கூறியதாவது:

""நான் சிறு வயதாக இருக்கும்போது, இந்தக் கலையை நாணக்காரச் செட்டித் தெருவில் இருந்த எனது மாமா சண்முகவேலு செய்து வந்தார். அவர் செய்வதைப் பார்த்து அந்தக் கலையில் எனக்கும் ஆர்வம் வந்தது. இந்தப் பணியில் 1980 ஆம் ஆண்டில் ஈடுபடத் தொடங்கினேன். தொடக்கத்தில் சிறு, சிறு பொருள்கள் செய்வதற்குக் கற்றுக் கொண்டேன். படிப்படியாகத் தேர், பல்லக்கு உள்ளிட்ட பெரிய பொருள்களுக்கும் செய்தேன்.

அதிக விலை காரணமாக, தஞ்சாவூர் ஓவியத்தை வாங்க முடியாதவர்கள் கண்ணாடிப் பொருள்களை வாங்கிச் செல்கின்றனர். இக்கலைத் தொழிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு வீதி, கொண்டிராஜபாளையம், சீனிவாசபுரம், நாணயக்காரச் செட்டித் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஏறக்குறைய 15 குடும்பங்கள் ஈடுபட்டு வந்தன.

ஆனால், போதுமான அளவுக்கு வருவாய் கிடைக்காததால், பல கலைஞர்கள் வெவ்வேறு தொழில்களுக்குச் சென்றுவிட்டனர். குறிப்பாக, அடுத்த தலைமுறையினர் படிப்புக்கேற்ற வேலைவாய்ப்பைப் பெற்றதால், இந்தத் தொழில் அருகி வருகிறது.

நானும், எனது மனைவி வனஜாவும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் மாதத்துக்கு ரூ. 15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை வருவாய்கிடைக்கிறது. இந்த வருவாயைக் கொண்டு குடும்பத்தை ஓரளவுக்கு சமாளிக்கிறோம்.

பூம்புகார், சர்வோதய சங்கம், காதி கிராப்ட் உள்ளிட்டவற்றிலிருந்து ஆதரவு கிடக்கிறது. இந்தக் கண்ணாடி கலைப்பொருள்கள் வடிவத்துக்கு ஏற்ப ரூ. 150 முதல் ரூ. 1,000 வரை விற்பனை செய்யப்படுகிறது. தேர், திருமண மண்டபம் உள்ளிட்ட பெரிய வேலைப்பாடுகளைச் செய்யும்போது கூடுதலாக வருவாய் கிடைக்கும்.

என்றாலும், இக்கலையை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வதற்காக ஆர்வத்துடன் முன் வருபவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். இதுவரை 15 பேருக்கு பயிற்சி அளித்துள்ளோம். ஆனால், இத்தொழில் தொடங்குவதற்கு கடனுதவி கிடைக்காததால், இக்கலையைத் தொடருவதற்கு தயங்குகின்றனர்.

இக்கலைக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி செய்து வருகிறோம். ஆனால், புவிசார் குறியீடு பெற ஒரு கலையில் 10 குடும்பங்களாவது செய்ய வேண்டும் எனக் கூறப்படுவதால், அதைப் பெறுவதிலும் சிரமங்கள் நிலவுகின்றன. எனவே, இளையதலைமுறையினர் இந்தக் கலையில் ஆர்வம் செலுத்தும் விதமாக வங்கிக் கடனுதவி, பயிற்சி வழங்க அரசு முன் வந்தால், அருகி வரும் இக்கலையைக் காப்பாற்ற முடியும் என்றார் செல்வராஜ்.

படங்கள் எஸ். தேனாரமுதன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com