நெகிழ வைத்த ஐரோப்பிய பட விழா

ஐரோப்பிய ஒன்றியப் பட விழா சென்னை அலியான்ஸ் ஃப்ரான்சேய்சில் அண்மையில் நடைபெற்றது.
நெகிழ வைத்த ஐரோப்பிய பட விழா

ஐரோப்பிய ஒன்றியப் பட விழா சென்னை அலியான்ஸ் ஃப்ரான்சேய்சில் அண்மையில் நடைபெற்றது.

25 மொழிகளில் வெளிவந்த 28 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. சிறந்த படங்கள் என்று வரிசைப்படுத்தப்பட்ட சில படங்கள் இங்கே:

பல்கேரியா

(அன்னை) "மதர்
இயக்கம் : சோபியா ஜார்னிட்சா

நமக்குக் காணக் கிடைத்த படங்களில் முதலிடம் பெறுவது "மதர் என்ற படம். இது நிஜ வாழ்வில் உண்மையாக நடைபெற்ற சம்பவங்களில் அடிப்படையில் பின்னப்பட்ட படம் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

எலனா தனது முப்பத்து இரண்டாம் வயதில், ஆப்பிரிக்காவுக்கு அநாதைக் குழந்தைகளுக்குச் சேவை செய்ய செல்கிறாள். நடிப்பு, நடனம், கவின் கலைகளை குழந்தைகளுக்குக் கற்றுத் தருகிறார். ஏனோ ஒருவித சலிப்பில் மீண்டும் ஐரோப்பா செல்ல விமான டிக்கெட் வாங்கிவிடுகிறார்.

டாக்ஸி விமான நிலையம் நோக்கிச் சென்றுகொண்டிருக்கும்போது வண்டியை நிறுத்தச் சொல்கிறாள். ""மீண்டும் ஆப்பிரிக்க அநாதை இல்லம் நோக்கியே செல்கிறேன். இந்தக் குழந்தைகளுக்கு சேவை செய்வதே எனது வாழ்வின் லட்சியம் என்கிறார் தன் தோழியிடம். வாழ்க்கை அந்தக் குழந்தைகளின் மத்தியில் கழிகிறது. கணவர் ஆப்பிரிக்கா வந்து எலானாவை ஐரோப்பாவுக்கு அழைக்கிறார். ""இப்போது பல அநாதைக் குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கிறேன் என்று கணவரை சமரசம் செய்து, வர மறுக்கிறாள். உள்ளம் உருக்கும் வாழ்க்கை நாடகம்.

எஸ்டோனியா

வாக்கர் ஆன் வாட்டர்
இயக்கம்: அனு ஆன்

கிறிஸ்டினா எஹின் எனும் எஸ்டோனிய நாட்டு கவிதாயினி பற்றிய ஆவணப் படம். பல வித இயற்கைச் சூழல்களின் பின்னணியில் கவிஞர் தன் கவிதை வரிகளைச் சொல்லிச் செல்கிறார். சர்வதேசப் புகழ் பெற்ற அருமையான ஆவணப் படம்.

போலந்து

தி பர்ஃபெக்ட் நம்பர்
இயக்கம்: க்ரினஜடாஃப் ஜானசி

கோட்டீஸ்வரரான ஜோசிம், முப்பது வயது இளைஞரான டேவிட் என்பவரின் நண்பராகிறார். தந்தை மகன் பாசம் போல் நட்பு வளர்கிறது. சமூக விரோதிகள் ஜோசிமிடம் பணம் பறிக்கச் சதி செய்கின்றனர். டேவிட் கடத்தப்படுகிறார். "முப்பது லட்சம் கொடுத்தால் டேவிட் விடுவிக்கப்படுவார் என்பதை ஜோசிமிடம் தொலைபேசியில் கூறுகிறார்கள். டேவிட் மறுக்கிறார். தன்னால் ஜோசிம் பாதிக்கப்படுவதை டேவிட் விரும்பவில்லை. டேவிட்டின் விரல் ஒன்றை அறுத்து ஜோசிமுக்கு அனுப்ப, அவர் பதறிப் போய் சமூக விரோதிகள் கேட்ட பணத்தை அனுப்பி மீட்டெடுக்கிறார். சாலை விபத்தில் படுத்த படுக்கையான ஜோசிமுக்கு உயிர்த் தோழனாகிறார் டேவிட்.
ஜோசிமின் கடைசி மூச்சு, டேவிட்டின் அருகாமையில் பிரிகிறது. படுத்த படுக்கையாக இருக்கும்போது, "மரணத்தின் பின் மனிதர் நிலை என்ன? என்று ஜோசிமும், டேவிட்டும் தத்துவ விசாரணையில் ஈடுபடுவது நெகிழச் செய்யும்.

டென்மார்க்

தி கொயட் மிக்ரேஷன்
இயக்கம்: மலனே சோயி

கார்ல் என்ற தென் கொரிய இளைஞரை வயதான டென்மார்க் தம்பதி தத்து எடுத்து வளர்க்கின்றனர். தன் தாய் நாட்டுக்குத் திரும்ப வேண்டும் என்ற ஏக்கம் அவன் மனதில் அடிக்கடி தோன்றும். டென்மார்க் தம்பதிக்கு ஒரு சிறிய பால் பண்ணையும் விவசாயம் செய்ய சிறிது நிலமும் உண்டு. பால் பண்ணையிலும் விவசாயத்திலும் கார்ல் நேர்மையாக உழைக்கிறான். டென்மார்க் தந்தைக்கு அறுவைச் சிகிச்சை நடக்கிறது. பூரண ஓய்வு தேவை என்று மருத்துவர் கூறுகிறார். தனது நாட்டுக்குத் திரும்பும் ஆசையை கார்ல் புறக்கணித்து தத்தெடுத்த பெற்றோருடன் ஒன்றி விடுகிறான் கார்ல். ரம்மியமான இயற்கைக் காட்சிகள் நிறைந்த படம். ஒவ்வொரு ஃப்ரேமையும் கவிதை அழகுடன் செதுக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

ஸ்லொவேக்கியா

ஷி ஹீரோ
இயக்கம்- மிரா ஃபார்னே

ரோமி என்ற சிறுமி தன் வீட்டில் இருந்து காணாமல் போய்விட்ட ஒரு கிளியைத் தேடி பயணம் புறப்படும் கதையை நகைச்சுவை மிளிரச் சொல்லி இருக்கிறார் இயக்குநர். குழந்தைகளைக் குதூகலிக்கச் செய்யும் திரை வார்ப்பு.

கார்மென்

மால்டா
இயக்கம்: வாலரி புஹாசியர்

கார்மன் என்ற நாற்பது வயதுப் பெண்மணி, மாதா கோயில் பாதிரியாரான தன் அண்ணன் மரணத்துக்குப் பின்னர் அநாதை ஆகிறார். சர்ச் வளாகம் அவருக்கு அடைக்கலம் தர மறுக்கிறது. சர்ச் காவலாளியின் சாவியைத் திருடி சர்ச்சுக்குள் நுழைந்து விடுகிறார். புதிய பாதிரியார் வரும் வரையில் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும். ஆனால், ஒரு தற்காலப் பாதிரியார் அமர்த்தப்பட்டு இருக்கிறார் என்று போர்டு எழுதி வைத்துவிட்டு ஒப்புதல் மூலம் பாவ மன்னிப்பு அறையில் ஒளிந்து கொள்கிறார். பாவ மன்னிப்பு வேண்டி வருவோர் அற்புதமான, அருமையான அறிவுரைகளைப் பெறுகிறார்கள். காணிக்கை உண்டியலில் போடப்படும் பணம் கார்மனின் பசியைப் போக்க உதவுகிறது. விஷயம் வெளிப்படும்போது, கருணையின் அடிப்படையில் கார்மன் மன்னிக்கப்படுகிறார். மாதா கோயிலில் திருடி வெள்ளிப் பாத்திரங்களையும் தங்க மெழுகுவர்த்தி ஸ்டேன்டுகளையும் கார்மன் திருப்பிக் கொடுத்துவிடுகிறார். பல நகைச்சுவைத் தருணங்களையும் பல கண்ணீர்த் துளிகள் வர உள் உருக்கும் தருணங்களையும் உள்ளடக்கிய உன்னதத் திரை ஓவியம் இது.

ஹங்கேரி

பிரிபரேஷன் டூ பி டுகதர் ஃபார் அன் அன்நோன் பிரியட் டைம்
இயக்கம்: லிலிஹார்வாட்

மார்த்தா நடுத்தர வயதில் இருக்கிறார். ஜோஸ்மன் என்ற மருத்துவரைக் காதலிக்கிறார். ஜோஸ்மன் நிராகரிக்கிறார். மார்த்தாவின் விடாப்படியான அன்பு ஜோஸ்மனை இளகச் செய்கிறது. மார்த்தா காதல் தேர்தலில் வெற்றி அடைகிறார். தன் அமெரிக்க வேலையை உதறிவிட்டு ஹங்கேரியில் புடாஸஸ்டில் ஜோஸ்முடன் குடியேற வருகிறார் மார்த்தா. மார்த்தாவாக நடிப்பவரின் உணர்ச்சித் துடிப்பான நடிப்பு நம்மைச் சிலிர்க்கச் செய்யும். இந்தப் பட விழாவில் பல நல்ல திரைப்படங்கள் இருந்தன. மனதுக்கு இதமாய் இருந்தது. ஐரோப்பிய ஒன்றியம் வாழ்க தழைத்து!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com