அந்தநாள் ஞாபகம் வந்ததே..!

1954ஆம் ஆண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள்.  அவர்கள் ஒவ்வொரு  ஆண்டும் சந்தித்து மகிழ்கின்றனர்;
அந்தநாள் ஞாபகம் வந்ததே..!

1954ஆம் ஆண்டு சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து மகிழ்கின்றனர்; அவர்களின் எழுபதாம் ஆண்டு சந்திப்பு சென்னையில் அண்மையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது சிலர்தான் என்றாலும், அவர்கள் மகிழ்ச்சியோடு, தங்கள் கல்லூரி, வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்.

மருத்துவர் காந்தராஜ்: 1954-ஆம் ஆண்டில் நாங்கள் மொத்தம் 110 மாணவ, மாணவிகள் படித்தோம். நாங்கள் எல்லோரும் பல ஆண்டுகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து வருகிறோம். இந்த ஆண்டு எங்களுடைய எழுபவதாவது சந்திப்பு.

மருத்துவர் ராமமூர்த்தி:

தமிழ்நாட்டில் தற்போது ஆண்டுக்கு சுமார் 35 ஆயிரம் பேர் மருத்துவப் படிப்பில் சேர முடிகிறது. அந்தக் காலத்தில் சென்னை மருத்துவக் கல்லூரியிலும் ஸ்டான்லியிலுமாக மொத்தமே 250 இடங்கள்தான். ஒரே ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியான வேலூர் சி. எம். சி. யில் 40 இடங்கள். இந்தக் கல்லூரிகளில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், ஆந்திரா, கேரளா, காஷ்மீர் மாநிலங்களையும், மலேசியாவையும் சேர்ந்த மாணவர்களுக்கும் இடம் கொடுக்க வேண்டிய நிலைமை இருந்தது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்புகள் குறைவாக இருந்தன. இந்தக் குறையைத் தீர்க்கும் வகையில் மாவட்ட மக்கள் தொகையின் அடிப்படையில் இடங்கள் ஒதுக்க அன்றைய முதல்வர் காமராஜர் உத்தரவிட்டார். அதன் பயனாக திருச்சி, மதுரை மாவட்ட மாணவர்களுக்கு தலா 15 மருத்துவக் கல்லூரி இடங்கள் கிடைத்தன.

மருத்துவர் சுவாமிநாதன்:

கல்லூரியின் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்தேன். ஒரு ஓவரில் நான்கு சிக்சர் அடித்ததால், நான் உடனடியாக பிரபலமடைந்து "சிக்சர் சுவாமிநாதன் என்ற பெயரைப் பெற்றேன். நான் இப்போது தஞ்சாவூரில் எனது அறக்கட்டளை மூலமாக, புற்றுநோய் விழிப்புணர்வு, சிகிச்சை சேவையில் ஈடுபட்டிருக்கிறேன்.

மருத்துவர் அகஸ்டின்:

நாங்கள் பணி நிமித்தம் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று விட்டோம். கரோனா காலம் எங்களுக்கு மிகவும் சோதனையான காலம் என்றால் அது மிகையில்லை. அந்த காலகட்டத்தில் எங்கள் சகாக்கள் 15 பேரை நாங்கள் இழந்துவிட்டது கொடுமையிலும், கொடுமை. இப்போது வாழ்பவர்கள் 22 பேர்தான். இவர்களிலும் பலர் முதுமை காரணமாக கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். பலர், வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலையில் உள்ளனர். இந்த ஆண்டு ஆர்வத்துடன் வந்து கலந்துகொண்டவர்கள் எட்டு பேர்தான்! அவர்களை அக்கறையோடு இந்தச் சந்திப்புக்கு அவர்களது குடும்பத்தினர்கள் அழைத்துவந்தது எங்களுக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

மருத்துவர் ஸ்டான்லி சந்திரன்:

கல்லூரி விடுதி வாழ்க்கை ரொம்பவும் மகிழ்ச்சிகரமாக இருந்தது. சொன்னால் யாரும் நம்பக் கூட மாட்டார்கள். அந்தக் காலத்தில் மாதாந்திர விடுதிச் செலவு வெறும் 70 ரூபாய்தான்! கல்லூரிக் கட்டணம் ஆண்டுக்கு ரூ.1,200. அதையும் இரண்டு தவணைகளில் கட்டலாம்.

எனது சக மாணவர்கள் சிலருடன், கல்லூரிப் படிப்பு முடிந்த பிறகும் நான் தொடர்பில் இருந்தேன். ஒருநாள், நாங்கள் 110 பேரும் சந்தித்தால் என்ன? என்ற எண்ணம் தோன்றியது. நண்பர் தங்கவேல் உதவியுடன் சுமார் ஒரு ஆண்டு பாடுபட்டு, 100 பேரின் முகவரிகளைத் திரட்டினோம். பத்து பேர்களின் விலாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பின்னர், ஆண்டுதோறும் நாங்கள் சந்திக்கத் துவங்கினோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com