எண்பதைக் கடந்தும் ஒயில் கும்மி ஆட்டம்

நாட்டுப்புறக் கலையான ஒயில் கும்மி ஆட்டத்தில் ஆண்கள் மட்டுமே ஆட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உடைத்து பெண்களையும் ஆட வைத்த பெருமை பத்திரப்பனையே சாரும்.
எண்பதைக் கடந்தும் ஒயில் கும்மி ஆட்டம்

அந்தக் காலத்தில் நாட்டுப்புறக் கலையான ஒயில் கும்மி ஆட்டத்தில் ஆண்கள் மட்டுமே ஆட வேண்டும் என்ற கட்டுப்பாட்டை உடைத்து பெண்களையும் ஆட வைத்த பெருமை பத்திரப்பனையே சாரும். "கலைமுதுமணி, "கலைமாமணி பட்டங்களைப் பெற்றிருக்கும் அவருக்கு "பத்ம ஸ்ரீ விருது அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்துக்கு உள்பட்ட மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் கிராமத்தில், திண்ணையுடன் கூடிய ஓடு வேயப்பட்ட வீடு அவருடையது.

எண்பத்து ஏழு வயதிலும் நாட்டுப்புறக் கலைக்குத் தனது பங்களிப்பைச் செலுத்திவரும் அவரிடம் பேசியபோது:

""எனது சொந்த ஊர் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தாசம்பாளையம். எனது அப்பா வன விலங்குகள் வேட்டைக்காரராக இருந்தார். சுதந்திரம் கிடைத்தவுடன், தடை வந்ததால் வேட்டைக்கு நான் போகவில்லை. விவசாயத்தைத் தொழிலாகவும், நாட்டுப்புறக் கலையை உயிராகவும் நேசிக்கத் தொடங்கினேன்.

வள்ளி கும்மி, அரிச்சந்திரா கும்மி போன்றவற்றை கலை வடிவத்தில் அன்றைய காலகட்டத்தில் கலையில் வாத்தியார்களாக இருந்தவர்களிடம் எனது இருபத்து இரண்டாம் வயதில் பயிற்சியைத் தொடங்கினேன்.

பாரதியார் வாழ்க்கை வரலாறு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பாடல்களைப் புனைந்து கும்மி ஒயில் ஆட்டத்தை ஆடி வருகிறேன். பிறருக்கு பயிற்சியையும் அளித்து வருகிறேன். பல கிராமங்களில் எங்கள் குழுவினர் கலைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர்.

தமிழ் மண்ணின் கலைவடிவங்களில் ஒன்றான ஒயில் கும்மி, பலவித செய்திகள் பரப்பும் ஊடகமாகவும் அமைந்தது.

கோவை வானொலியில் 24 ஆண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ச்சியை நடத்தும் வாய்ப்பும் கிடைத்தது. சுமார் 60 ஆண்டுகளாக வள்ளி திருமணக் கதையை பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும், பாரதியார் வாழ்க்கை வரலாற்றை நாட்டுப்பற்றை வெளிப்படுத்தவும் கையாளுகிறேன்.

விழிப்புணர்வுக்காக சுற்றுச்சூழல் குறித்த பாடல்களையும் புனைந்து பாடி ஆடி வருகிறோம். பண்டைய காலத்தில் எவ்வாறு விவசாயப் பணிகள் ஈடுபட்டனர் என்பதைப் பாடல் மூலம் கற்றுக் கொடுக்கிறேன்.

கொங்கு மண்டலத்தில் ஒயில் பிரபலமான ஆட்டமாகும். ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் பாட்டின் இசையிலும், ஆட்டத்தின் அசைவுகளில் மாற்றங்கள் இருக்கும். ஒயில் கும்மி ஆட்டத்தில் இசைக்கருவிகள் இசைக்கு பயன்படுத்தப்படுவதில்லை. காலில் அணிந்திருக்கும் சலங்கை எழுப்பும் ஒலிதான் லயத்தைக் கூட்டும்.

இளம்வயதில் சிறு தானியங்கள் தான் உணவு. எனது அன்றைய சிறுதானிய உணவும், கடுமையான வயல் உழைப்பும், ஒயில் கும்மி ஆட்டமும் என்னை இளமையாக வைத்திருக்கின்றன.

திரைப்படங்கள், தொலைக்காட்சிகள் அறிமுகமானதால், போன்ற பொழுதுபோக்குகளால் கிராமிய கலை மக்களின் ஆதரவை இழந்து நிற்கின்றன.

திருவிழாக்கள், கோயில்களில் வாய்ப்பு கேட்டால் நாட்டுப்புறக் கலைகள் யாரும் விரும்புவதில்லை என்று சொல்கிறார்கள். கிராமியக் கலையை இளம்தலைமுறையிடம் கொண்டுபோய் சேர்க்க முடியவில்லை. அதனால் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் பெண்களிடையே கிராமிய கலைகளைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com