ஒன்று சேர்வோம் - உயர்வடைவோம்

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும்.  கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'  என்ற பாரதி,  "மெல்லத் தமிழினி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஏகும் என்றெந்தப் பேதை சொன்னான்'  என பாடியுள்ளார்.
ஒன்று சேர்வோம் - உயர்வடைவோம்

"சென்றிடுவீர் எட்டுத் திக்கும்.  கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்'  என்ற பாரதி,  "மெல்லத் தமிழினி சாகும் அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஏகும் என்றெந்தப் பேதை சொன்னான்'  என கோபமாகவும் பாடியுள்ளார். 
"தமிழர்கள் திரைகடலோடியும் திரவியம் தேடு'  என முன்னோர்கள் வாக்குக்கேற்ப உலகின் பெரும்பாலான நாடுகளுக்குச் சென்று தமிழர்கள் வாழ்கின்றனர். 
அப்படி வாழும் தமிழர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பெருக்கிக் கொள்வதுடன் திருப்தியடையாமல் உயிரினும் மேலான தங்களது தமிழையும் மேம்படுத்திடபாடுபட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
தாய்ப் பூமியாம் தமிழகத்தில் தமிழ் மேம்பாட்டுக்கான பணிகள் செயல்படுத்துவதைவிட,  வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மொழிக்காகவும், பண்பாடு, கலாசாரம் காக்கவும் அரும்பாடுபட்டுவருகின்றனர் என்பதே உண்மை.
அந்தவகையில்,   "வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை'  சார்பில் 60 தமிழ்ச் சங்கங்கள் ஒருங்கிணைந்து "தமிழ்ச் சங்கப் பேரவை'  ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தச் சங்கத்தின் 37 -ஆவது ஆண்டு விழாவானது வரும் ஜூலையில் அமெரிக்க டெக்சாஸ் மாகாணத்தில் சான் ஆண்டோனியோ எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.
மாநாட்டு இலச்சினையில் புதுவை அரசு சின்னமான ஆயி மண்டபம் முதன்முறையாக இடம்பெற்றுள்ளது. அதன் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக, புதுச்சேரிக்கு வந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவர் பாலா சுவாமிநாதனிடம் பேசியபோது:
""எனக்குச் சொந்த ஊரான மதுரையில் பள்ளிப் படிப்பையும்,  கல்லூரிப் படிப்பையும் திருச்சியிலும் நிறைவு செய்தேன்.  
1990-ஆம் ஆண்டில் நிதி நிறுவனப் பணிக்காக,  அமெரிக்காவுக்குச் சென்றேன். அங்கு மிசெளரி மாகாணத்தில் தங்கியிருந்தபோது,  நண்பர் அரசுவுடன் சேர்ந்து தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கினோம். தமிழர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட தமிழ்ச் சங்கம் மூலம் தமிழர்களது குழந்தைகளுக்கான பள்ளிகளையும் தொடங்கி நடத்தும் தேவை ஏற்பட்டது. அதனடிப்படையிலேயே வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையுடன் இணைந்து பணிபுரியும் வாய்ப்பும் ஏற்பட்டது.
தற்போது அமெரிக்காவில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் உள்ளனர்.  அதில்,  கலிபோர்னியாவில் சுமார் 80 ஆயிரம் பேரும், டெக்ஸாஸில் சுமார் 60 ஆயிரம் பேரும் இருக்கின்றனர்.
"அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் தாய்ச் சங்கம்'  என்ற அந்தஸ்தை நியூயார்க் தமிழ்ச் சங்கம்,  கனக்டிக்கட் தமிழ்ச்சங்கம், ஹாரீஸ் பெர்க் சங்கம், நியூஜெர்ஸியில் உள்ள இலங்கை தமிழ்ச் சங்கம், டெலவரில் உள்ள பெருநிலத் தமிழ்ச்சங்கம் ஆகியன பெற்றுள்ளன. அந்த 5 சங்கங்களது ஆலோசனைப்படியே 60 சங்கங்களது கூட்டமைப்பான "தமிழ்ச் சங்கப் பேரவை' 1988- ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவருகிறது.  பேரவையில் மட்டும் 60 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். பேரவை மூலம் மொழியை பாதுகாத்தல், தமிழ் பண்பாடு, இலக்கியத்தைப் போற்றுதல், சங்கங்களுக்கு இடையிலான இணக்கத்தை மட்டுமல்லாது அமெரிக்கர்களுடனான உறவையும் மேம்படுத்துவது என பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அமெரிக்க வாழ் தமிழர்களுக்காக 1- ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையில் உள்ள 250 பள்ளிகள் அரசு அங்கீகாரத்துடன் உள்ளன.  அதில்,  23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்துவருகின்றனர். அதேபோன்று மேல்நிலைக் கல்வியில் விருப்பப் பாடத்தில் தமிழ் மொழியும் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்கள் தாய்த் தமிழகத்தின் பேரிடர் நீக்கவும் நிதியுதவி அளித்துவருகின்றன.  தாய்த் தமிழகத்திலிருந்து தமிழ் ஆய்வாளர்கள், நலிந்த கலைகளான தோல்பாவைக் கூத்து கலைஞர்கள், பறையிசைக் கலைஞர்கள், கரகாட்டம், பொம்மலாட்டக் கலைஞர்கள் ஆகியோருக்கு உதவும் வகையிலும் செயல்பட்டுவருகிறோம். 
ஆண்டுதோறும் நடைபெறும் மாநாட்டில், நலிந்த கலைஞர்களை அழைத்து பெருமைப்படுத்துகிறோம்.   தமிழ் இலக்கிய, நாவல், சிறுகதை எழுத்தாளர்கள் என உண்மையான தமிழ் மேம்பாட்டாளர்களையும் அழைத்து கெளரவப்படுத்துகிறோம். 
அமெரிக்கத் தமிழ்ச்சங்க விழாக்களில் தமிழ் இசைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மொத்தத்தில் அறிவார்ந்த தமிழறிஞர்கள், கலைஞர்களே அழைக்கப்படுகின்றனர்.
தற்போது "உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு' அதிமுக்கியமாகும். ஆய்வுநோக்கில் தமிழையும்,  கலாசாரப் பண்பாட்டையும் மேம்படுத்திக் காப்பதே முக்கியமாகும். அந்த ஆய்வு நோக்கிலான போக்குதான் காலம்கடந்தும் தமிழையும், தமிழரையும் உலக அளவில் உயர்ந்து நிற்க உதவும்.
எதிர்காலத்தில் தமிழ்ச் சங்கங்கள் எல்லா சமூகத்துடனும் இணக்கமாகச் சென்று மொழியையும், கலாசாரத்தையும் காக்க வேண்டியது அவசியம். ஆகவே, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்க பேரவையைப் போல உலக அளவிலான தமிழ்ச்சங்கங்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்து செயல்படுவதும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
அதனடிப்படையில் துபை போன்ற அரேபிய பகுதி தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைக்கும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.  உலக அளவிலான தமிழ்ச் சங்கப் பேரவைதொடங்கப்பட்டு, 
தமிழர்களது முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்து தீர்வு காணும் காலம் நிச்சயம் கனியும். 
ஏற்கெனவே அமெரிக்கத் தமிழ்ப் பேரவை மாநாட்டில் தமிழர் பிரச்னைக்கு என தனியாக கருத்துரை வழங்கி சம்பந்தப்பட்ட நாடுகளின் தமிழர்களே பேசிவருகின்றனர். 
அந்தப் பிரச்னைக்கு உலக அளவிலான சிந்தனை நோக்கில் தீர்வு காணவும் அந்நிகழ்ச்சி உதவிக்கரமாக உள்ளது. அதுபோன்று,  உலகத் தமிழர்கள் ஒருங்கிணைக்கப்படும்போது அந்தந்த நாட்டு தமிழர்கள் பிரச்னையும் தீர்க்க வழி ஏற்படும்'' என்றார்.
"தமிழன் என்றோர் இனமுண்டு. தரணியில் அவருக்கோர் குணமுண்டு'  என்ற பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப அமெரிக்க தமிழ்ப் பேரவையின் உலகத் தமிழ்ச்சங்க ஒருங்கிணைப்புப் பணிகள் தொய்வின்றி தொடங்கி வெற்றி பெறும் காலம் வெகு தொலைவில் இல்லை.

படம்: கி.ரமேஷ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com