நாயக்கர் கால நெற்களஞ்சியம்

பாரம்பரிய தானிய சேமிப்பு கலை: நாயக்கர் கால நெற்களஞ்சியங்கள்
நாயக்கர் கால நெற்களஞ்சியம்

தொல் பழங்கால மனிதர்கள் நாடோடி வாழ்க்கை நிலையிலிருந்து, ஓரிடத்தில் நிலையாகத் தங்கி உணவு உற்பத்தி செய்யக் கூடிய வேளாண்மைக்கு மாறினர். இந்தப் புதிய கற்காலத்தில் தங்களுக்குத் தேவையான தானியங்களைப் பானைகள், குழிகளில் சேமிக்கத் தொடங்கினர். தொடர்ந்து பெருங்கற்காலத்தில் தானியங்கள் சேமித்ததற்கான அகழாய்வு சான்றுகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பல்வேறு காலகட்டங்களில் தானியங்களைச் சேகரிக்கும் வழக்கம் இருந்து வந்துள்ளது தெரிய வருகிறது. பிற்காலத்தில் உருவான தானியக் கிடங்குகள் "கொட்டாரம்' என அழைக்கப்பட்டன.

காவிரியை ஒட்டிய பகுதிகளில் பல்வேறு கோயில்களில் நெல் தானியங்களைச் சேமிப்பதற்காகவே நெற்களஞ்சியங்கள் உருவாக்கப்பட்டன. ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் மூன்று நெற்களஞ்சியங்கள் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயிலில் அச்சுதப்ப நாயக்கர், அவரது மகன் ரகுநாத நாயக்கரின் காலத்தில் இருந்த ராஜகுரு கோவிந்த தீட்சிதரால் இந்த நெற்களஞ்சியம் கட்டப்பட்டுள்ளது. இது, 3 ஆயிரம் கலம் நெல் சேமிக்கும் அளவு உடையது.

இதேபோல, தஞ்சாவூர் மேல வீதியிலுள்ள கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி மைதானத்திலும் நெற்களஞ்சியம் உள்ளது. செவ்வக வடிவில் உள்ள இந்த நெற்களஞ்சியத்தை முகப்பில் இருந்து பார்க்கும்போது மூன்று அடுக்கு கொண்ட கட்டடக்கலை அமைப்பில் காணப்படுகிறது.

முதல் அடுக்காக உள்ள முகப்பு மண்டபம் போன்ற அமைப்பு. தூண்கள் தாங்கிய தாழ்வார அமைப்பாக இருந்து பின்னாளில் தூண்களும் இடைப்பட்ட பகுதியும் அடைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அடுக்கு என்பது வெளவால் நெத்தி மண்டப அமைப்பின் வெளிப்புற அடுக்காக உள்ளது. இதன் வெளியோரத்தில் நன்கு மூடி திறக்கும் ஜன்னல் வடிவ நான்கு துளைகள் உள்ளன. இதிலிருந்தே தானியங்களைக் ொட்டுவதற்கான அமைப்பு இருந்துள்ளது. இதற்கு சமமாக பின்பகுதியில் தானியங்களைக் கொட்டுவதற்கான அமைப்பு உள்ளது. இந்த இடத்தை அடைய படிக்கட்டுகள் உள்ளன. ஆனால், படிக்கட்டுகளை அடைய தற்போது எந்த அமைப்பும் இல்லை.

உள்பக்கம் 21.45ல10.6 மீட்டர் நீள, அகலத்துடன் செவ்வக வடிவ அறை உள்ளது. இந்த இடமே தானியங்கள் கொட்டப்படும் இடமாக உள்ளது. இதில், 90 ஆயிரம் கிலோ வரை தானியங்களைச் சேமிக்கலாம். இதன் விதானம் வெளவால் நெத்தி அமைப்பில் மண்டபம் உள்ளது. இதன் மையத்தில் வடக்கு, தெற்காக 4 முழு சதுர வடிவ தூண்களும், இரண்டு சுவர் ஒட்டிய தூண்களும் சுமார் 30 அடி உயரம் கொண்டதாக தாங்கி நிற்கிறது.

இந்தக் கூரையின் வெளிப்புறத்தில் 7 கலசங்கள் இருந்த தடயம் தெரிகிறது. வெளிப்புற அமைப்பைப் பார்க்கும் போது மதுரை நாயக்கர் மகால் கட்டடக்கலை அமைப்போடு ஒத்துள்ளது. ஒட்டுமொத்த கட்டடக்கலையும் செங்கல் சுண்ணாம்பு கலந்த கட்டுமான அமைப்பைக் கொண்டுள்ளது. ஒரு சில இடங்களில் வெளிப்பகுதியில் செம்புறாங்கற்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.

எனவே, இது நாயக்கர் கால கட்டடக்கலையைச் சார்ந்தது என்றார் வரலாற்று ஆய்வாளரும், தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலக தமிழ்ப் பண்டிதருமான மணிமாறன். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது:

""இந்த நெற்களஞ்சியம் பற்றிய குறிப்புகள் சரியானபடி கிடைக்கவில்லை. என்றாலும், கல்யாணசுந்தரம் மேல்நிலைப் பள்ளி மைதானம் மன்னர்கள் காலத்தில் குளமாக இருந்திருக்க வேண்டும். குளக்கரையில் இந்த நெற்களஞ்சியம் கட்டப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கட்டுமானத்தைப் பார்க்கும்போது அரண்மனையின் ஒரு பகுதியாக இருந்திருக்கலாம். இக்கட்டடக்கலையில் செங்கற்கட்டுமானம், வளைவுகள் போன்றவை நாயக்கர் காலத்தைச் சார்ந்ததாக உள்ளது.

மன்னர்கள் காலத்தில் மேல வீதியில் அமைச்சர்கள், அரண்மனையில் பணியாற்றிய உயர் அலுவலர்கள் போன்றோரே வாழ்ந்தனர். எனவே, மழை, வெள்ளக் காலம், போர்க்காலத்தில் தங்களுடைய உணவுத் தேவைக்குத் தானியங்களைச் சேமிப்பதற்காக இந்த நெற்களஞ்சியத்தைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.

நீண்டகாலத்துக்கு பயன்படும் விதமாக உணவு தானியங்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் விதமாக இதன் அமைப்பு உள்ளது. அக்காலத்தில் களிமேடு பகுதியிலிருந்து நெல் தானியம் விளைவிக்கப்பட்டு, இங்கு கொண்டு வந்து சேமித்திருக்கலாம்'' என்கிறார்.

வெளியுலகில் விழிப்புணர்வுப் பெறாமல் இருந்த இந்த நெற்களஞ்சியம் மாவட்ட நிர்வாகம், சுற்றுலா வளர்ச்சிக் குழுமத்தின் முயற்சியால் வரலாற்று ஆர்வலர்களைக் கவர்ந்துள்ளது. இதன் மூலம், சில ஆண்டுகளாக பாரம்பரிய நடைப்பயணத்தில் இந்த நெற்களஞ்சியமும் ஓரிடமாக பார்வையிடப்படுகிறது.

வி.என். ராகவன்

படம் - எஸ். தேனாரமுதன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com