தந்தையின் ஆதரவினால்தான் வெற்றி!

தந்தையின் ஆதரவினால்தான் வெற்றி!

அப்பாவின் பயிற்சியும் அன்பும் ஜோஷ்னாவின் வெற்றிக்கு அடித்தளம்!

'தந்தையின் அரவணைப்பு, ஆதரவினால் ஸ்குவாஷ் விளையாட்டில் சிறப்பான இடத்தைப் பெற முடிந்தது'' என்கிறார் பத்மஸ்ரீ ஜோஷ்னா சின்னப்பா.

சென்னையில் 1986-இல் பிறந்த ஜோஷ்னாவின் பெற்றோர் அஞ்சன் சின்னப்பா- சுனிதா. எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்ற ஜோஷ்னா, முன்னாள் ராணுவத் தலைமை தளபதி கே.எம். கரியப்பாவின் நெருங்கிய உறவினர்.

கர்நாடக மாநிலத்துக்கு உள்பட்ட குடகில் காபித் தோட்ட வியாபாரம் செய்து வரும் அஞ்சன் சின்னப்பாவும், தமிழ்நாடு ஸ்குவாஷ் அணியில் இடம்பெற்றவர். அவருடைய மேற்பார்வையில்தான் ஜோஷ்னா சிறந்த வீராங்கனையாக மிளிரத் தொடங்கி, பத்மஸ்ரீ விருதை அண்மையில் பெற்றுள்ளார். அவருடன் ஓர் சந்திப்பு:

ஸ்குவாஷ் குறித்து...?

கிரிக்கெட், கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ், வாலிபால்.. என பல்வேறு விளையாட்டுகள் உலகில் கோலோச்சி வரும் நிலையில், தனித்துவமிக்க விளையாட்டாக ஸ்குவாஷ் திகழ்கிறது.

19-ஆம் நூற்றாண்டில் லண்டன் சிறைகளில் பஞ்சரான பந்து, ராக்கெட்டுகளைக் கொண்டு விளையாடினர். அதன்பின்னர், தனியாக அரங்கம் அமைக்கப்பட்டது. நான்கு புறமும் சூழப்பட்ட கண்ணாடி அரங்கில் இருவர் அல்லது நான்கு பேர் என போட்டிகளில் பங்கேற்று ஆடுகின்றனர்.

எதிராளியால் ஆட முடியாத வகையில் வலுவாக பந்தை அடிக்க வேண்டும் என்பதே இதன் முக்கியத்துவம் ஆகும். அதிக பொருள்

செலவு நிறைந்த இந்த விளையாட்டு தற்போது 185 நாடுகளில் 2 கோடிக்கு மேற்பட்டோரால் ஆடப்படுகிறது. எனினும் இன்னும் ஒலிம்பிக் போட்டிகளில் ஸ்குவாஷ் இடம் பெறவில்லை. இந்தியாவிலும் ஸ்குவாஷ் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது.

உங்களுடைய சாதனை பயணம் எப்படி?

எனது ஏழாம் வயதில் ஸ்குவாஷ் ஆடத் தொடங்கினேன். பயணம் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. அதிகபட்சமாக உலகத் தரவரிசையில் 10-ஆவது இடத்தை பெற்றிருந்தேன். பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் பட்டம், காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளேன். 18 முறை தேசிய சீனியர் பட்டத்தை வென்றேன்.

14 வயதிலேயே ஜூனியர், சீனியர் என இரட்டை தேசிய சாம்பியன் பட்டங்களை வென்றேன். 2003-இல் 16 வயதிலேயே பிரிட்டிஷ் ஓபன் பட்டத்தை கைப்பற்றினேன். 2005-இல் யு19 பட்டத்தை வென்றேன். உலக சாம்பியனாக திகழ்ந்த ரேச்சல் கிரின்ஹாமை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ரிச்மாண்ட் ஓபனில் வென்று பட்டத்தை கைப்பற்றியது மிகச் சிறந்த தருணமாகும்.

2014-இல் கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் இரட்டையர் பிரிவில் தீபிகா பல்லிக்கல்லுடன் இணைந்து தங்கம் வென்றேன். 2022-இல் உலகக் கோப்பையில் பட்டம் வென்று சாதனை படைத்தேன்.மகளிர் பிரிவில் ஸ்குவாஷ் என்றால் ஜோஷ்னா சின்னப்பா பெயரைச் சொல்லுமளவுக்குத் தனித்தன்மையோடு திகழ்கிறேன்.

தந்தையின் பங்கு குறித்து?

எனது தந்தை அஞ்சன் சின்னப்பா தான் இளம்வயது முதலே பயிற்சியாளராக விளங்கினார். சிறுவயதில் என்னுடன் அவர் விளையாடுவார். எனது வளர்ச்சியில் முக்கிய பங்கு அப்பாவுக்கு தான் உள்ளது. எனக்கு ஊட்டச்சத்தான உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை திட்டமிட்டது எனது தாய் சுனிதா.

ஸ்குவாஷ் விளையாட்டில் சிறப்பாக விளங்க சென்னை மாநகரும் காரணம். தமிழக அரசும், எஸ்டிஏடி சிறப்பானஆதரவைத் தந்தனர்.

இந்தியாவில் ஸ்குவாஷின் எதிர்கால வளர்ச்சி எப்படி இருக்கும்?

தற்போது அதிக சிறுவர்கள், சிறுமியர்கள் ஸ்குவாஷ் விளையாட்டில் ஆர்வம் கொண்டு ஆடி வருகின்றனர். எதிர்காலத்தில் இந்தியா பலமான அணியாக திகழும். இதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. இளம் வீரர், வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி நாட்டுக்கு பதக்கங்களைப் பெற்றுத் தருவர்.

பயிற்சி அளிப்பது போன்ற திட்டங்கள் உள்ளதா?

இதுவரை எதிர்காலத்தில் என்ன செய்வது என திட்டமிடவில்லை. ஸ்குவாஷில் இருந்து ஓய்வு பெற்றால் அதுகுறித்து முடிவு செய்வேன். தற்போது தமிழ்நாடு மின்சார வாரியத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்து வருகிறேன். பயிற்சி அளிப்பதிலும் எனக்கு ஈடுபாடு உள்ளது.

விருது பெற்றது குறித்து...?

முப்பது ஆண்டுகள் தொடர்ந்து நிலையான ஆடியதற்கும், விடா முயற்சிக்கும் கிடைத்த சிறப்புதான் இந்த பத்ம விருது. இதற்காக மத்திய, தமிழக அரசுகளுக்கு நன்றி.

விருதுக்குத் தேர்வு செய்யப்படுவேன் என நினைத்துக் கூட பார்க்கவில்லை. இது எதிர்பாராத மகிழ்ச்சியாகும். 2013-இல் அர்ஜுனா விருது பெற்றிருந்தேன். பத்மஸ்ரீ விருது குறித்த அறிவிப்பு எனக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டது. டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணாவுடன் எனது பெயரும் இடம் பெற்றிருந்தது. போபண்ணா 42 வயதிலும் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் அபாரமாக ஆடி உலகின் நம்பர் 1 அந்தஸ்தைப் பெற்றுள்ளார். விடாமுயற்சி, போராடும் குணத்தை அவரிடம் உள்ளது.

எனது வாழ்வில் எதுவும் மிக விரைவாகவோ அல்லது தாமதமாகவோ கிடைத்ததில்லை. பத்மஸ்ரீ விருது மிகவும் சிறப்பானது. இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய ஊக்கம் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com