சோதனை வேதனை சாதனை!

பிரசவ வேதனையைத் தாண்டி நீதிபதியான பெண்
சோதனை வேதனை சாதனை!

பழங்குடியினர் பிரிவில் நீதிபதியாக நியமனம் பெற்றிருக்கும் முதல் பெண் ஸ்ரீபதி, சோதனைகளிலும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட ஜவ்வாது மலையில் புலியூர் கிராமத்தில்பிறந்தவர் ஸ்ரீபதி. ஏலகிரியில் பள்ளிப் படிப்பையும், பின்னர் சட்டப் படிப்பையும் படித்தார்.

கல்லூரியில் படித்தபோதே திருமணம் நடைபெற்றது.

கணவர் வெங்கட்ராமனிடம் ஆலோசித்து, சட்டப் படிப்பை நிறைவு செய்தார் ஸ்ரீபதி.

2023-ஆம் ஆண்டுக்கான டி.என்.பி.எஸ்.சி. நடத்திய நீதித் துறையில் குடியியல் நடுவர் பணிக்கு மனு செய்தார். அந்தச் சமயத்தில் ஸ்ரீபதி கருவுற்றிருந்தார்.

போட்டித் தேர்வு நடக்கும் நாளும், "பிரசவம் நடக்கும்' என்று மருத்துவர் முன்கூட்டியே கணித்த நாளும் ஒரே தேதியாக இருந்தது. இந்தப் பதற்றம் காரணமாகவோ என்னவோ, அதிர்ஷ்டவசமாக போட்டித் தேர்வு நாளுக்கு இரண்டு நாள் முன்னரே பிரசவமும் நடைபெற்றது. சென்னைக்கு எப்படி பயணிப்பது என்று ஸ்ரீபதியும் கணவரும் குழம்பினர்.

பிரசவத்துக்குப் பிறகான ரத்தப் போக்கு கூட ஸ்ரீபதிக்கு நிற்கவில்லை. அவரோ தனது "கனவு, லட்சியம்' என்று சொல்ல, மருத்துவர்கள் அலுங்காமல் குலுங்காமல் காரில் பயணிக்க வழிகாட்டல்களைச் சொன்னார்கள்.

காரின் இருக்கைகளில் பல மாற்றம் செய்ய வேண்டும், ஏறக்குறைய காரை சொகுசு காராக மாற்ற வேண்டும், சீரான வேகத்தில் கார் செல்ல வேண்டும்..போன்ற நிபந்தனைகள் அடங்கும். இவற்றைக் கடைப்பிடிக்க ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்று தெரியவந்தது.

"இவ்வளவு கஷ்டப்பட்டு.... செலவு செய்து சென்னை போக வேண்டுமா?' என்று சிந்திக்காமல் சென்னைக்குச் சென்று தேர்வை எழுதியே தருவது என்று ஸ்ரீபதியும், கணவரும் தீர்மானித்து, எழுதியே முடித்தனர்.

அண்மையில் வெளியான தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் ஸ்ரீபதியின் பெயரும் இருந்தது. தமிழ் வழியில் படித்தவர்

களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படுவதால் குடியியல் நடுவர் தேர்வுக்கான போட்டியில் அந்த முன்னுரிமை உதவியுள்ளது.

தேர்ச்சி பெற்று சொந்த ஊரான ஜவ்வாதுமலைக்கு வருகை தந்த ஸ்ரீபதிக்கு ஊர் மக்களே திரண்டு வரவேற்றனர். அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இருபத்து மூன்று வயதிலேயே தொடக்க நிலை நீதிபதியாகி இருப்பதால், பின்னாளில் உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் வாய்ப்பும் ஸ்ரீபதிக்கு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com