பாரத ரத்னா'க்கள்...!

பாரத ரத்னா'க்கள்...!
Picasa

இந்திய மாமணி என்று அழைக்கப்படும் "பாரத ரத்னா' இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். நாட்டுக்காகச் சேவையாற்றுபவர்களைப் பாராட்டும் விதமாக வழங்கப்படும் இந்த விருதை இதுவரை 53 பேர் பெற்றுள்ளனர்.

கலை, அறிவியல், இலக்கியம், கலாசாரம், விளையாட்டு, பொதுச் சேவை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பான பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் "பாரத ரத்னா' விருது 1954-இல் அறிமுகமானது. வாழ்பவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று தொடங்கப்பட்ட விருதளிப்பு, 1955-இல் மறைந்தவர்களுக்கும் வழங்க வழிவகை செய்யப்பட்டது.

விருது பெறுவோர் தங்களது பெயருக்கு முன்னால் அல்லது பின்னால் போட்டுக் கொள்ள முடியாது. ஆனால், விருதாளர்களுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.

வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகளான அன்னை தெரசாவுக்கு 1980-இல் விருது வழங்கப்பட்டது. ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த கான் அப்துல் கப்பார் கானுக்கு 1987-இலும், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த நெல்சன் மண்டேலாவுக்கு 1990-இலும் வழங்கப்பட்டுள்ளது.

1992-இல் சுபாஷ் சந்திர போஸூக்காக அளிக்கப்பட்ட விருது, அவர் இறந்தது உறுதி செய்யப்படாததால் திரும்பப் பெறப்பட்டது. மகாத்மா காந்திக்கு விருது வழங்கப்படாததுக்குக் காரணம் , காந்திஜியின் பங்களிப்புக்கு "பாரத ரத்னா' விருது சிறிய விருதாக அமையும் என்பதால்தான்.

இந்த விருதை இன்னாருக்கு வழங்கலாம் என்று பிரதமர் மட்டுமே குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க முடியும்.

சாதி, தொழில், பதவி, பாலினம் ஆகிய பாகுபாடின்றி எந்த ஒரு நபரும் தனது பங்களிப்புக்காக, இந்த விருதுக்குத் தகுதியானவராகப் பரிசீலிக்கப்படுவார். ஓர் ஆண்டில் அதிகபட்சமாக 3 பேருக்கு விருது வழங்கப்படலாம் என்றாலும், இந்த ஆண்டு . கற்பூரி தாக்குர், லால் கிருஷ்ண அத்வானி, சரண் சிங், பி.வி.நரசிம்ம ராவ், எம்.எஸ். சுவாமிநாதன் என ஐந்து பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது பெறுவோருக்கு அதற்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்படும். பண முடிப்பு வழங்கப்படாது. சிறப்பு வகுப்பில் கட்டணமின்றி விமான, ரயில் பயணங்களை மேற்கொள்ளலாம். சிறப்பு கவுன்ட்டர் வழியாகச் செல்லலாம்.

குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், பிரதமர், ஆளுநர், குடியரசு முன்னாள் தலைவர், துணைப் பிரதமர், தலைமை நீதிபதி, மக்களவைத் தலைவர், மத்திய அமைச்சர், மாநில முதல்வர்கள், முன்னாள் பிரதமர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கு அடுத்த இடத்தில் விருது பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அரசு மரியாதை அளிக்கப்படும்.

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் , சர் சி.வி, ராமன், சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஆகியோருக்கு 1954-இல் விருதுகள் முதல்முறையாக வழங்கப்பட்டன.

ஆல மரத்தின் இலையின் வடிவில் வெண்கலத்தில் விருது செய்யப்படுகிறது. அதன் மையத்தில் சூரிய ஒளி வீசுவது போல பளபளப்பாக இருக்கும். கீழே "பாரத ரத்னா' என்றும், பின்புறத்தில், அசோகச் சின்னமும் பொறிக்கப்பட்டுள்ளன "சத்யமேவ ஜெயதே' (வாய்மை வெல்லும்) என்று தேவநாகரி எழுத்துகளில் அச்சிடப்பட்டிருக்கும்.

வெள்ளை நிற துணிப் பட்டையில் விருதைக் கோர்த்து விருதாளரின் கழுத்தில் அணிவிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com