மருத்துவம், மகிழ்ச்சி, மனநிறைவு தரும் "மஞ்சள் ஆந்தை'

மனம் கவரும் மருத்துவ மையம் - மஞ்சள் ஆந்தையின் மல்டி சேவைகள்
மருத்துவம், மகிழ்ச்சி,  மனநிறைவு தரும் "மஞ்சள் ஆந்தை'

செவிக்கு இனிமையாக இசையை அளிப்பதோடு, வயிற்றுக்கும், பிணிக்கும் சேர்த்தே மருந்தும், விருந்தும் அளித்து வருகிறது திருச்சியின் "மஞ்சள் ஆந்தை'. இங்கு வந்து நேரத்தைச் செலவிடுவோருக்கு ஆழ்ந்த மன நிம்மதியையும் அளிப்பதே கூடுதல் சிறப்பு.

இத்தனைக்கு இது "மல்டி ஷாப்பிங் காம்பளக்ஸோ, பெரிய மாலோ அல்லது பெரு வணிக வளாகமோ, கார்ப்பரேட் நிறுவனமோ இல்லை. திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ. விசுவநாதம் பள்ளிக்கு அருகே "தி ஹார்மோன் கிளினிக்' என்ற பெயரில் இயங்கி வரும் சிறு மருத்துவமனைதான்.

இதை நடத்தி வரும் மருத்துவர் சக்திவேல் சிவசுப்பிரமணியனிடம் பேசியபோது:

""தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்து, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் எம்.டி. பட்டம் பெற்றேன்.

உள்சுரப்பியல் பிரிவில் முனைவர் பட்டமும் (டி.எம்.) பெற்றுள்ளேன்.

எனது தந்தை டி. சிவசுப்பிரமணியன் பொது மருத்துவர்தான். அவருடைய மருத்துவமனை கீழ்த் தளத்தில் இருக்க, நான் மேல்தளத்தில் மருத்துவமனையை நடத்திவருகிறேன்.

"ஹார்மோன் கிளினிக்' என்பது சர்க்கரை நோய், தைராய்டு குறைபாடுகள், அதிக உடற்பருமன், இனப்பெருக்க ஹார்மோன் குறைபாடுகள், வளர்ச்சிக் குறைபாடுகள், தேவையற்ற ரோம வளர்ச்சி, பருவ வளர்ச்சிக் குறைபாடுகள், ஹார்மோன் குறைபாடுகள் ஆகியவற்றுக்கு சிறப்பு மருத்துவச் சேவை வழங்குகிறது. "மஞ்சள் ஆந்தை' என்ற ஆங்கிலப் பெயரை எனது அடையாளமாகக் கொண்டுள்ளேன்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் சரி, உடன் துணைக்கு வருபவர்களும் வரக் கூடாத இடமாக கருதக் கூடாது என்பதற்காகவே எனது மனதில் எழுந்தத் திட்டம்தான் இது. இங்கு காத்திருக்கும் நேரத்தில் நோயாளிகளும், உடனிருப்போரும் நேரத்தைப் பயனுள்ள முறையில் செலவிட வேண்டும். முக்கியமாக நோய்களை மருத்துவமும் மருந்தும் மட்டுமே குணமாக்கிவிட முடியாது. எப்போதும், நம்மைச் சுற்றி நல்லெண்ணங்கள், நற் சூழல், நல்ல ஆரோக்கியமான சிந்தனைகளும், நகைச்சுவை உணர்வுகளும் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். அதற்கான தேடலின் வடிகால்தான் எனது இந்தச் சிறிய மருத்துவமனை.

"மஞ்சள் ஆந்தையின் சிறப்புகள்':

இங்கு நுழையும் எல்லோருக்கும் டிஜிட்டல் தொழில்நுட்ப மாடர்ன் உலகுக்குள் நுழைந்த அனுபவம் கிடைக்கும். சென்சார் தொழில்நுட்பக் கதவுகள் தானாகக் திறந்து உங்களை வரவேற்கும். உள்ளே சென்று காத்திருப்போர் இருக்கையில் அமருகையில், சிறிது வயிற்றுக்கு பொட்டுக்கடலை எடுத்துகொள்ளலாம். இதற்கென வரவேற்பு அறையிலேயே பெரிய அளவில் இரு குடுவைகள் உள்ளன. அவற்றை திறந்து விரும்பிய அளவு எடுத்துகொண்டு அமரலாம். பொட்டுக்கடலை இல்லையெனில், சோளப் பொரியும், நிலக்கடலையும் நிரப்புவது வழக்கம். இந்தக் குடுவையிலிருந்து வயிற்றுக்கு சிறிது எடுத்துகொண்டவுடன் சிந்தனைக்கு சுவரில் இடம்பெற்றுள்ள நாள்காட்டியில் க்யூ.ஆர். கோடை தங்களது கைப் பேசியில் ஸ்கேன் செய்தால், தமிழ்த் திரை நட்சத்திரங்களின் காட்சியும், பின்னணி இசையும், சிந்தனை வரிகளும் நம் கண் முன்னே காட்சியாக விரியும்.

இதுபோதாதென்று, அறை முழுவதும் ரம்மியமாக இளையராஜா தொடங்கி இமான் வரையில் இன்றைய ரசனையுடன் கூடிய அனைத்து மெல்லிசைப் பாடல்களும், அதன் மெட்டுக்களும், இசையும் பல்வேறு இசைக் கருவிகளின் ஒலியில் நாதமாகக் கேட்கலாம். உடன் வந்த குழந்தைகள் தொந்தரவு செய்யாமலிருக்க அவர்களுக்கான விளையாட்டுப் பொருள்களும் இங்கே உள்ளன.

லூடோ விளையாட்டுகள், இந்திய வரைபடத்தில் உள்ள மாநிலங்களைப் பொருத்துவது, நவீன பரமபத விளையாட்டு.. என பல வண்ணங்களிலான காய்களில் நகர்த்தி விளையாடவும் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன. இளைஞர்கள், பெரியவர்கள் விளையாடுவதற்கு சதுரங்கப் பலகையும் தயாராக உள்ளன.

"விளையாட்டில் விருப்பமில்லையா? வாசிப்பை நேசிப்போருக்கும், குழந்தைகள் கதைகள் படிக்க ஆர்வமுள்ளோருக்கும் தேவையான புத்தகங்கள் அலமாரியில் அடுக்கப்பட்டுள்ளன. மினி நூலகமாக இங்கு பாரதியார், பாரதிதாசன், திருக்குறள் உள்ளிட்ட தமிழ் மணம் பரப்பும் பல்வேறு புத்தகங்களும், ஆங்கிலம் வாசிப்போருக்கான அழகியல் புத்தகங்களும் அடுக்கடுக்காக உள்ளன.

இவை எதிலும் நாட்டமில்லை என்போருக்காகவே காட்சிப்படுத்தப்பட்ட இரண்டு சிறப்பு அம்சங்கள் உள்ளன. ஒளிரும் வண்ண விளக்குகளுடன், வண்ண, வண்ண மீன்கள் துள்ளிக் குதித்து செல்லும் மீன் தொட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தாலே மனஅழுத்தம் மறைந்துவிடும்.

இத்தனையும் கண்டு களிப்பதற்கு சற்றே இடைவேளை விடுவதற்காகவே மஞ்சள் ஆந்தையின் பிரத்யேக கபே அருகிலேயே உள்ளது. வேக வைத்த முட்டை, வேக வைத்த சுண்டல், உளுந்தங்கஞ்சி, ராகி கஞ்சி, காய்கனிகளுடன் கூடிய சூப், சோளம் சூப், காளான் சூப், முருங்கை சூப், தூதுவளை சூப், வல்லாரை சூப், பொன்னாங்கண்ணி சூப், முடக்கத்தான் சூப், முளைகட்டிய பச்சைப் பயறு, ஃப்ரூட் சாலட், வெஜ் சாலட் என பழங்களிலும், காய்கனிகளிலும் உணவுகள் எண்ணற்றவை இங்கு உள்ளன.

சிறுதானிய இட்லி, சிறு தானிய தோசை, கோதுமை தோசை, ராகி தோசை, அடை தோசை, சப்பாத்தி, சிறுதானிய கிச்சடி, சிறுதானியப் பொங்கல், சிறுதானிய தயிர் சாதம், சிறுதானிய சாம்பார் சாதம், சிறுதானிய வெஜ் பிரியாணி, சிறுதானிய புதினா சாதம், பல்வேறு தானிய வகைகள் கலந்து செய்த பிரட் சாண்ட்விச், சீஸ் சாண்ட்விச், வெஜ் சாண்ட்விச், பிரட் ஆம்லெட் என உணவு வகைகள் ஏராளம். இவை அனைத்தையும் கபேயில் அமர்ந்து சாப்பிடலாம்.

இதோடு நிற்கப் போவதில்லை, கம்பு, சானை, தினை, சிவப்பு அரிசி, பனங்கற்கண்டு, நாட்டு சர்க்கரை, செர்ரி, பாதம், பிஸ்தா, பலாப் பழ பவுடர், அன்னாசிப் பழ பவுடர், முந்திரி, சுக்கு, சோயா, கேழ்வரகு, கருப்பட்டி, தேன், காய்கனி விதைகள், பாரம்பரிய அரிசி வகைகள் என 30-க்கும் மேற்பட்ட வகைகள் விற்பனைக்கு உள்ளன'' என்று முடித்தார் சக்திவேல்.

படங்கள்: வி. நாகமணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com