ஒரு குற்றமும் அதன் ஆதாரங்களும்!

பொதுவாக அனைத்துப் பேய்க்கதைகளிலும் தொன்மத்தின் சாயல் படிந்திருக்கும். நாட்டுப்புறக் கதைகளின் சுவாரசியம் ஒளிந்திருக்கும்.
ஒரு குற்றமும் அதன் ஆதாரங்களும்!

பொதுவாக அனைத்துப் பேய்க்கதைகளிலும் தொன்மத்தின் சாயல் படிந்திருக்கும். நாட்டுப்புறக் கதைகளின் சுவாரசியம் ஒளிந்திருக்கும். இவற்றைத் தர்க்க ஒழுங்கில் அணுகக் கூடாது. லாஜிக் பார்க்கக் கூடாது. அவை தரும் திகில் உணர்ச்சிதான் நமக்கு முக்கியம். இந்தத் திகில் உணர்ச்சியே ஒரு கட்டத்தில் காமெடியாகி விடும். "இதற்கா இத்தனை பயந்தோம்?' என்று விடிந்த பிறகும் சிரித்துக் கொண்டேயிருப்போம். லாஜிக்கை சற்று ஒதுக்கி வைத்துப் பார்த்தால் இதிலுள்ள அபாரமான நகைச்சுவையை ரசிக்க முடியும். இடைவிடாமல் பத்து வருடங்களுக்கும் மேலாக நம்மை அடித்துத் துவைத்த பேய் கதையைத்தான் இப்போதும் தொட்டிருக்கிறேன். ஆனால் இது வேறு விதமாக இருக்கும்.'' நம்பிக்கை கரம் கொடுத்து பேசுகிறார் இயக்குநர் அறிவழகன். படத்தின் பெயர் "சப்தம்.'

14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆதியுடன் இணைந்திருக்கிறீர்கள்.... என்ன ஸ்பெஷல்....

எனக்கும் ஆதிக்கும் "ஈரம்' படம்தான் முதல் படி. இருவருக்கும் பெரிய உத்வேகம் கொடுத்த சினிமா அது. அதன் பின்னர் இருவரும் இணைய வேண்டும் என காத்திருந்தோம். அது இத்தனை ஆண்டுகள் கழித்து நடந்திருக்கிறது. காதல் படம், விளையாட்டுப் படம், க்ரைம் த்ரில்லர் என எல்லா வகையிலும் படம் செய்ய வேண்டும் என்கிற எனது ஆவல்தான் அறிமுகப் படத்துக்குப் பிறகு நான் மீண்டும் "ஹாரர்' எடுக்காமல் இருந்ததற்குக் காரணம். மீண்டும் ஹாரர் எடுத்தால், அது "ஈரம்' படத்தை தாண்டும் விதமாக இருக்க வேண்டும் என எண்ணினேன். அதற்கு ஏற்ப. இந்தச் "சப்தம்' படத்துக்கான ஒருவரிக் கதை கிடைத்தது. இதை நானும் ஆதியும் 3 ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்து விவாதித்தோம். அப்போது, சரியான தயாரிப்பாளர் அமைய வேண்டுமே என்று காத்திருந்தோம். எனது "குற்றம் 23' படத்தை வாங்கி வெளியிட்ட 7ஜி பிலிம்ஸ் சிவா என்னை நம்பி வந்தார். நான் ஆல்பா பிரேம்ஸ் புதிய பட நிறுவனத்தைத் தொடங்கி "முதல் பிரதி' அடிப்படையில் படத்தைத் தயாரிக்கிறேன். நல்ல அனுபவம்.

"ஈரம்' படத்தில் தண்ணீர் உருவத்தில் ஆவி வருவதுபோல் திரைக்கதை அமைத்தீர்கள்....இதில் எப்படி...

"ஈரம்' படத்துக்கு இசையமைத்திருந்த தமன்தான் இதற்கும் இசையமைக்கிறார். இந்தப் படத்துக்கு ஒலி வடிவமைப்பாளராக "விக்ரம்' உள்பட பல படங்களுக்குப் பணியாற்றியிருக்கும் சச்சினை அமர்த்திக்கொண்டிருக்கிறேன். விதவிதமான சப்தங்களின் வழியாக எப்படி ஆவி வருகிறது என்பதைக் காட்டவிருக்கிறோம். கதை சொல்லும் விதத்தில் இது புதுமையாக இருக்கும். ஒரு ஆவி எப்படி சப்தங்களின் வழியாக தன்னை வெளிக் கொண்டு வருகிறது என்பதைப் பார்க்க ஆவலாக இருக்கும். ஹீரோ ஆதி, ஒரு "கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டர்' ஆக வருகிறார். ஆவி, பேயை அடிப்படையாகக் கொண்ட வழக்கமான ஹாரர் படங்களில் பேயை அடக்க வருபவர்கள் விதவிதமான கெட் -அப்பு களில் வருவதைப் பார்த்திருப்போம். அவர்கள் அனைவரும் மந்திரம் - தந்திரம் என்று எதையாவது ஒன்றை வேடிக்கையாகச் செய்துகொண்டிருப்பார்கள். ஹாலிவுட் படங்களும் இதற்கு விதிவிலக்கு கிடையாது. ஆனால், "சப்தம்' படத்தில் வரும் "கோஸ்ட்' இன்வெஸ்டிகேட்டர் அப்படியல்ல; அவர் மும்பை "பேரா நார்மல் சொசைட்டி'யில் உறுப்பினராக இருப்பவர். "சயிண்டிபிக்' ஆக ஆவியைப் புலனாய்வு செய்து கண்டுபிடிப்பவர். அவர் எல்லாரையும்போல்தான் இருப்பார். அறிவியல்தான் அவரது ஆயுதம். அவர் ஏன் "கோஸ்ட் இன்வெஸ்டிகேட்டர்' ஆனார் என்பதற்கான காரணம் அழுத்தமாக இருக்கும். அதே போல், குடும்ப உறவுகளால் பின்னிப் பிணைந்த உணர்வுபூர்வமான பின் கதை, திரைக்கதையைத் தாங்கிப் பிடிக்கும்.

நீங்கள் பேசுகிற விதம் சரி.... இப்போதுள்ள ட்ரெண்ட் பிடித்து கதை சொல்லுவதுதான் இங்கே முக்கியம்...

ஒரு குற்றமும், அந்த குற்றத்தை செய்ய தூண்டக் கூடிய அம்சங்களும்தான் இதன் ஆதாரம். இங்கே குற்றம் என்பது நம்பிக்கை துரோகம். அந்த துரோகத்தின் மூலம் எங்கே ஆரம்பிக்கிறது. அதன் விளைவுகள் என்ன என்பதுதான் இதன் பேசு பொருள். எல்லாவற்றையும் தீர்மானிக்கிற சக்தி உள்ள மனிதனால் எவ்வளவு காசு, பணம் கொடுத்தாலும் சூழ்நிலையை மட்டும் தனக்கு ஏற்றவாறு உருவாக்கி விட முடியாது. இப்போதுள்ள வாழ்க்கை அனுதினமும் சவால்தான். அதுவும் ஆண், பெண் உறவுகளுக்குள் உள்ள சிக்கல்கள் ஏராளம். குறிப்பாக காதல். எண்ணங்கள் பொருந்திப் போனால்தான் எந்த விஷயமும் ஈடேறும். இது காதலுக்கு அப்படியே பொருந்தும். ஆனால் நாளடைவில் எல்லாவற்றிலும் சலிப்பு, பிரியமானவர்கள் மீது காட்டுகிற அன்பு அவர்களை சந்தோஷப்படுத்த இல்லை. என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொள்ளத்தான் என்ற நிலை உருவானால் அந்த வாழ்க்கை என்னவாகும். அப்படியோர் பாதையில்தான் இந்த கதை பயணமாகும்.

சிம்ரன், லைலா, லட்சுமிமேனன்... மூவரையும் கொண்டு வந்திருக்கிறீர்கள்...

இது இன்னும் சிறப்பாக இருக்கும். ரெடின் கிங்ஸ்லி எம்.எஸ்.பாஸ்கர். ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலரும் படத்தில் நடித்திருக்கிறார்கள். மகாமுனி படத்தின் ஒளிப்பதிவாளர் அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்கிறார். 56 நாள்களில் படப்பிடிப்பை முடித்துள்ளேன். படத்தின் எடிட்டிங் முடிந்துவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com