புதுமைகளை நோக்கி லட்சத்தீவுகள்!

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றுதான் லட்சத்தீவுகள். மொத்தம் 30 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட 36 குட்டித்தீவுகள் சேர்ந்ததுதான் லட்சத்தீவுகள். இதன் தலைநகரம் "கவரத்தி'.
புதுமைகளை நோக்கி லட்சத்தீவுகள்!

இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்றுதான் லட்சத்தீவுகள். மொத்தம் 30 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட 36 குட்டித்தீவுகள் சேர்ந்ததுதான் லட்சத்தீவுகள். இதன் தலைநகரம் "கவரத்தி'.

கேரளத்திலிருந்து 200 கி.மீ. முதல் 300 கி.மீ. தூரத்தில், அரபிக் கடலில் "மாலையில் இருந்து உதிர்ந்த மணிகள்' என்றவாறு லட்சத்தீவுகள் அமைந்துள்ளன. சட்டம் - ஒழுங்கு விஷயத்தில் கேரள உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்துக்குக் கீழ் வருகிறது. இங்கிருந்து ஒரு மக்களவை உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.

கவரத்தி, மினிக்காய், அமினி போன்றவை பெரிய தீவுகள். சுமார் எழுபதாயிரம் பேர் தீவுகளில் வசிக்கின்றனர். உணவுப் பொருள்கள் கேரளத்திலிருந்தும், மங்களூரிலிருந்தும் வருகின்றன.

லட்சத்தீவுகளைப் பற்றிய பழைமையான குறிப்பு புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற சங்க நூல்களில் இருக்கின்றன.

"லட்சம்' என்ற பெயரில் பல்லவ அரசுக்குள்பட்ட பகுதியாக இந்தத் தீவுகள் இருந்தது என்று சொல்லும் கல்வெட்டும் உண்டு. பிற்காலங்களில் அமினி, கல்பெனி, ஆந்தேராத் , கவரத்தி, அகத்தி தீவுகளில் மக்கள் குடியேற்றங்கள் நடைபெற்றன.

கி.பி. ஐந்தாம், ஆறாம் நூற்றாண்டுகளில் தீவுகளில் புத்த மதம் கடைபிடிக்கப்பட்டது. பதினான்காம் நூற்றாண்டில் தீவு மக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்தைத் தழுவினர். இந்த மத மாற்றத்துக்குக் காரணமாக அமைந்த "உப்பிதாலா' என்ற அரேபியரின் கல்லறை ஆந்தேராத் தீவில் அமைந்துள்ளது.

பதினோராம் நூற்றாண்டில் தீவுகள் சோழ அரசின் ஆட்சியின் கீழ் வந்ததாம். 1787-இல் திப்பு சுல்தானின் ஆட்சியின் கீழ் வந்த இந்தத் தீவுகள், திப்புவின் மறைவுக்குப் பிறகு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் வந்தன. பிறகு, சென்னை மாகாண நிர்வாகத்தின் கீழ் மலபார் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.

நாட்டின் விடுதலைக்குப் பிறகு, 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-இல் மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டபோது, லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசமாக்கப்பட்டது. 1973-ஆம் ஆண்டு நவம்பர் 1-இல் எல்லா தீவுகளையும் ஒன்றிணைத்து "லட்சத்தீவுகள்' என்று பெயர் பெற்றது. மத்திய கிழக்கிலிருந்து இந்தியாவுக்கு வரும் கப்பல்களைப் பாதுகாக்க, இந்திய கடற்படை தளம் ஒன்றும் கவரத்தி தீவில் உருவானது.

லட்சத்தீவில் திவேகி, மலையாள மொழிகளைப் பேசுகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் இஸ்லாமியர்களாக இருந்தாலும், பழங்குடியினர்களாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.

லட்சத்தீவுகள் மாசி மீன்களுக்குப் பெயர் போனது. குட்டை தேங்காய் மரங்கள் காய்த்துத் தள்ளுகின்றன. அகத்தி தீவில் உள்ள சிறிய விமான தளம், கொச்சி, பெங்களூரு மாநகரங்களை வான் வழியாக இணைக்கிறது. கப்பல்கள் கொச்சி, கள்ளிக்கோட்டை துறைமுகங்களுடன் தீவுகளை கடல் வழியாக இணைக்கிறது. இதர மாநிலத்தவர்கள் இந்தத் தீவுகளில் நிரந்தரமாக குடியேறி வசிக்க அனுமதி இல்லை.

இயற்கை அழகு, அமைதியான சூழல், தூய்மை, வெள்ளி மணல் பரப்பு, நீலமும் பச்சை கலந்த தெளிவான கடல் நீர், கடலுக்குள் பவளப் பாறைகள் வசிக்கும் பல வண்ண அலங்கார மீன்கள், எங்கு பார்த்தாலும் தென்னை மரங்கள் என்று சுற்றுலா விஷயத்தில் லட்சத்தீவுகளை மாலத்தீவுகளுடன் ஒப்பிட முடியாது.

போதுமான உள்கட்டமைப்பு குறைவாக இருப்பதும், சிறிய விமானம் மட்டுமே போகக் கூடிய வசதியுடன் இருக்கும் லட்சத்தீவுகளுக்குச் சென்று வர ஆகும் குறைந்தபட்ச செலவில் தாய்லாந்து, பாலி தீவுகளுக்குச் சென்று வந்துவிடலாம்.
தாய்லாந்து, பாலியில் சுற்றுலாவைத் தாண்டி மக்களைக் கவர்ந்து இழுக்கக் கூடிய பல்வேறு கவர்ச்சி சார்ந்த விஷயங்கள் இருக்கின்றன. மாலத்தீவுகளில் ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவுக்குச் சென்று வர விரைவுப் படகுகள் உள்ளன. கடலில் அமைக்கப்பட்டிருக்கும் குடில்கள், ஐந்து நட்சத்திர ஆடம்பர வசதிகள் உள்ளன.

பங்கராம் தீவைத் தவிர, ஏனைய தீவுகளில் மதுபானம் அருந்த தடை செய்யப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் லட்சத்தீவுகளைத் தவிர்க்க இதுவும் ஒரு காரணம்.

உலகத் தரமான சுற்றுலா தரத்தை லட்சத்தீவுகளில் கொண்டுவர பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும். கட்டுமானப் பணி தொடங்கப்பட்டால், தீவுகளின் சுற்றுப்புறச் சூழல் பாதிப்படையும். இதனால் சுற்றுலா நடவடிக்கைகள், தங்கும் விடுதிகள் பெருகாமல் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகின்றன. பவளப்பாறைகள் இருந்தால், பல மாடிக் கட்டடங்கள் லட்சத்தீவுகளில் கட்ட முடியாத நிலை இருக்கிறது. இதனால், சில தீவுகளை சுற்றுலாவுக்குத் தேர்ந்தெடுத்து தனியார் முதலீடு லட்சத்தீவுகளில் இனி அனுமதிக்கப்படலாம்.

லட்சத்தீவுகளுக்கு கேரளத்தில் இருந்து சென்று வர கப்பல் வசதி உள்ளது.

அண்மையில் ஏற்பட்ட பிரச்னை: பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து செய்யப்பட்டாலும் கிடைக்காத "பளிச்' விளம்பரம் லட்சத்தீவுகளுக்கு அண்மையில் கிடைத்துள்ளது.

ஆட்சிமாற்றம் அண்மையில் ஏற்பட்டதும், "இந்தியாவின் நட்பு நாடு' என்றிருந்த "மாலத்தீவுகள்' சீன நாட்டுக்கு ஆதரவாக மாறியது. "மாலத்தீவில் இருக்கும் இந்திய படை இந்தியா திரும்ப வேண்டும்' என்று மாலத்தீவின் புதிய அதிபர் முகம்மத் மொய்ஸý தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி லட்சத் தீவுகளுக்கு அண்மையில் சென்று வந்ததை தரம் குறைந்த வார்த்தைகளால் மாலத்தீவின் சில அமைச்சர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். "இயற்கை அழகில் மாலத்தீவுக்கு மட்டுமல்ல; மொரிஷியஸ், சீஷெல்ஸ் தீவுகளுக்கும் சவால் விடும் லட்சத்தீவுகளுக்கு செல்வோம்' என்று இந்தியர்கள் பதில் அளித்தனர். மாலத்தீவுகள் செல்ல பயணச் சீட்டுகளை முன்பதிவு செய்திருந்த பலரும் ரத்து செய்துள்ளனர்.

கடந்த 2023-இல் இரு லட்சம் இந்தியர்கள் மாலத்தீவுகளுக்குச் சென்று வந்தனர். இனி குறையும் நிலை ஏற்படலாம்.

இந்திய- மாலத்தீவுகள் இடையே நட்பு தொடர வேண்டும் என்ற கோரிக்கையும் இரு நாடுகளுக்கான நட்பு அமைப்பும் வலியுறுத்தியுள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை சமாளிக்க, மாலத்தீவுகள் சுற்றுலாவுக்கான கட்டண குறைப்பை வெளியிடவும் வாய்ப்பு இருக்கிறது. சுற்றுலா குறைந்தால் மாலத்தீவு மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். தவறை உணர்ந்த மாலத்தீவுகள் அரசு, மோடியை விமர்சித்த மூன்று அமைச்சர்களை தற்காலிகப் பணிநீக்கம் செய்தது. அந்தமான் தீவுகளுக்கு அடிக்காத யோகம் இப்போது லட்சத்தீவுகளுக்கு முதல் முறையாகக் கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com