பரதத்தில் தமிழ் இலக்கியம்

சென்னையில் டிசம்பர் மாத இசைவிழாவின்போது நடைபெற்ற இசைக் கச்சேரிகள்,  பரத நாட்டிய  நிகழ்ச்சிகளில்  மிகவும் வித்தியாசமான ஓர் நடன நிகழ்ச்சி "தமிழ் இலக்கியமும், பரதமும்' .  
பரதத்தில் தமிழ் இலக்கியம்

சென்னையில் டிசம்பர் மாத இசைவிழாவின்போது நடைபெற்ற இசைக் கச்சேரிகள், பரத நாட்டிய நிகழ்ச்சிகளில் மிகவும் வித்தியாசமான ஓர் நடன நிகழ்ச்சி "தமிழ் இலக்கியமும், பரதமும்' . மியூசிக் அகாதெமி வளாகத்தில் கஸ்தூரி ஸ்ரீனிவாசன் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை வழங்கியவர் மஹிதா சுரேஷ். இவர், பிரபல பரதநாட்டியக் கலைஞர் வித்யா பவானி சுரேஷின் மகள்.

ஆடிட்டிங் நிறுவனத்தில் சார்டர்டு அக்கவுன்டென்ட்டான மஹிதா ஆங்கில எழுத்தாளர், பதினோறு வயதில் இரண்டாம் நிலை கருப்பு பெல்ட் வாங்கியவர் உள்ளிட்ட பன்முகத் தன்மைகளைப் பெற்றவர். புதுமை நிகழ்ச்சியை உருவாக்கி, அவருக்கு உரிய பயிற்சியை அளித்து முக்கிய பங்களித்தவர் அவரது தாயும், பரதநாட்டிய குருவுமான வித்யா பவானி சுரேஷ். அவருடன் ஓர் சந்திப்பு:

இலக்கியமும், பரத நாட்டியமும் எங்கே ஒருங்கிணைகின்றன?

பரதநாட்டியக் கலையை காட்சி இலக்கியமாகவே நான் பார்க்கிறேன். சற்றே பின்னோக்கிப் போனாலும் கூட நாம் காண்பது பதவர்ணங்கள், ஜாவளி, பதம் இவைதான் பிரதான அம்சங்களாக இருந்தன. நாட்டியத்தில் கையாளப்பட்டவை எவை என்று கவனித்தால், அது நாயகனின் கவனத்தை ஈர்க்க நாயகியின் பிரயத்தனங்கள்தான். இதுதான் பலராலும் ஆண்டாண்டுகாலமாக மேடையில் நாட்டியத்தின் மூலமாக காட்சிப்படுத்தப்படுகிறது.

பரதநாட்டியத்தின் மீதும், கலைஞர்கள் மீது எனக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் உண்டு. ஆனாலும் அரைத்த மாவையே அரைத்துகொண்டிருக்காமல், மாறுபட்டு ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அப்போதுதான் பார்வையாளர்களுக்கு ஏராளமான விஷயங்களைச் சொல்ல முடியும். அப்படி சிந்தித்ததன் பலன்தான் இந்த "தமிழ் இலக்கியமும், பரதநாட்டியமும்' என்ற தளம். அங்கேதான் ஒரு நடனக் கலைஞரின் கற்பனை வளம் கைகொடுக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் உங்கள் நடனத்துக்குத் தேவையானதை எப்படி தேடினீர்கள்?

இந்த விஷயத்தில் எனது முழுமையான வழிகாட்டி, என் அம்மா விஜயலட்சுமி மூர்த்தி. அகில இந்திய வானொலியில் இயக்குநராக இருந்த அவர் முருக பக்தை. எனக்குத் திருப்புகழை அறிமுகப்படுத்தி, கற்று கொள்ளச் செய்தவர். அவருடைய ஆலோசனையின்படி, முதன்முதலாக திருப்புகழில் இருந்து பரத நாட்டிய நிகழ்ச்சியை வழங்கினேன். திருப்புகழின் சந்தச் சுவையும், பொருள்சுவையும் நாட்டியத்தின் வெற்றிக்கு மிகவும் கைகொடுத்தன.

1993-இல் மியூசிக் அகாதெமியில் திருப்புகழ் தாளமும், பொருளும், நடனமும் விளக்கமும், குறித்து நான் வழங்கிய செயல்முறை விளக்கத்துக்கு முதல் பரிசு கிடைத்தது. இதையே நான் தமிழிசை சங்கத்தில் வழங்கியபோதும் பலரது பாராட்டுகளைப் பெற்றது. அதன் பிறகு, மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், பரிபாடல், திருமுருகாற்றுப் படை, நளவெண்பா... என ஒவ்வொன்றாக பரதநாட்டியத்தில் வழங்கத் தொடங்கினேன். இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.

நீங்கள் சந்தித்த சவால்கள்?

தமிழ் இலக்கியங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு நோக்கங்களுக்காகப் படைக்கப்பட்டவை. ஒவ்வொருவரது படைப்புப் பாணியும் மாறுபட்டது. அவற்றில் இருந்து, பரத நாட்டியத்துக்கு உகந்தவை எவை என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அதன்பின்னர், செய்யுள் வடிவத்தில் அல்லது இசை வடிவத்தில் இருக்கும் அந்த இலக்கியங்களுக்கு நாட்டிய வடிவம் கொடுக்க வேண்டும்.

அப்படி நாட்டிய வடிவம் பெறும்போது அதில் சொல்லப்பட்ட கருத்து, பார்வையாளர்களை எளிமையாகச் சென்றடையும் வகையில், பரதநாட்டியத்தின் மூலமாகச் சொல்ல முடியுமா ? என்பதே பெரிய சவால்தான்.
நான் இசை, நடனம் குறித்த ஆராய்ச்சிகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவள். நான் ஆழ்ந்த ஆய்வுகளின் அடிப்படையில் கலை, கலாசாரம் குறித்து ஏராளமான நூல்களை எழுதி இருக்கிறேன். அதற்கும் மேலாக எனது அம்மாவின் வழிகாட்டுதலும், ஒத்துழைப்பும்தான் என்னை இந்த முயற்சியில் இயங்கவைத்தன.

வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு இலக்கியங்களை பரதநாட்டியத்தில் கையாண்டதற்கும், இந்த ஆண்டு நாட்டியத்துக்கும் என்ன வித்தியாசம்?

நான் இத்தனை ஆண்டுகளில் தனித்தனியாகச் செய்தவற்றிலிருந்து மிக முக்கியமானவைகளைத் தேர்ந்தெடுத்து, எனது பயிற்சி, வழிகாட்டுதலில் என் மகள் மஹிதா சுரேஷ் நிகழ்ச்சியை மேற்கொண்டார். இதில் திருப்புகழ், ராமாயணம், திருவேங்கைக் கலம்பகம், பரிபாடல், திருமுருகாற்றுப் படை, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் ஆகியன இடம்பெற்றன. மொத்தத்தில் பரத நாட்டிய மேடையில் யாரும் தொடாத விஷயங்கள் இவை.

சவால்தான்..!

நிகழ்ச்சியை மேடையில் வழங்கிய மஹிதா சுரேஷ் கூறியதாவது:

""நிகழ்ச்சி ரொம்பவும் வித்தியாசமாகத்தான் இருந்தது. ஒவ்வொரு இலக்கியத்தில் இருந்தும் நடனத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் வழக்கமான பரதநாட்டியத் தளத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. புரட்சிகரமானவை.

உதாரணத்துக்கு முதல் நடனமான பெண் என்பதை எடுத்துகொள்ளலாம். திருவேங்கைக் கலம்பகத்தில் இருந்து எடுக்கப்பட்ட பகுதி அது. ஒரு வேடனின் மகள் மீது காதலுற்று, அவளை மணக்க விரும்பி வேடனிடம் பெண்கேட்டு தூது அனுப்புகிறான் மன்னன். தன்னுடைய மகளை மன்னன் மணக்க விரும்புகிறான் என்று மகிழ்ச்சி அடையாமல், அந்த வேடன் பெண் கேட்டு வந்த தூதனிடம், ராஜா அரிச்சந்திரன், தன் மனைவியை விற்றுவிட்டான்.

ராஜா நளன் தன்னுடைய மனைவி தமயந்தியை மறந்தே போகிறான். தர்மன் தன் மனைவி திரெளபதியை பந்தயம் வைத்து சூதாடி, ராஜ சபையில் பெண்ணினத்தையே இழிவுபடுத்தினான். அப்படி இருக்கும்போது, எந்தற்காக ஒரு ராஜாவுக்கு என் மகளைக் கல்யாணம் செய்து தரவேண்டும்? என கேள்வி எழுப்புகிறான் வேடன். ராஜாவிடம் தன் கேள்விகளை அப்படியே சொல்லும்படி அறிவுறுத்துகிறான். இதேபோலத்தான் ஒவ்வொரு இலக்கியப் பகுதியும் வித்தியாசமானது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பரிபாடலில் ஓசை பற்றிய ஒரு பாடல் வருகிறது. திருப்பரங்குன்றம் மலை மீதேறும்போது ஒரு பக்கம் வீணை இசையும், மறுபக்கம் தேனீக்களின் ரீங்காரமும் கேட்பதை பதிவிடுகிறர். அதில் புல்லாங்குழல், முழவு ஆகியவற்றின் இசையுடன், அருவி நீரின் பாய்ச்சல் ஒலியையும், மயிலின் குரலையும் கூட சிலாகிக்கிறார். இவற்றை எல்லாம் நடனத்திலும், முகபாவத்திலும் கொண்டுவருவது பெரும் சவால் அல்லவா?'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com