புத்துயிர் பெறும் 'தி எலக்ட்ரிக் தியேட்டர்'

'சினிமா'  என்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் உலகில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது.  
புத்துயிர் பெறும் 'தி எலக்ட்ரிக் தியேட்டர்'

'சினிமா' என்பது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் உலகில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. காலத்தால் போற்றப்படும் பல அரசியல் ஆளுமைகளை தமிழகத்தில் உருவாக்கியது சினிமாதான். சினிமா என்பது உயிர் என்றால் அது உறையும் உடலாக இருப்பது திரையரங்குகள். அந்த வகையில் சென்னையில் ஆரம்ப கால திரையரங்குகளாகப் புகழ்பெற்று விளங்கிய கெய்ட்டி, சித்ரா, குளோப், சபையர், ப்ளூ டைமண்ட், எமரால்டு, ஓடியன், முருகன் டாக்கீஸ், அலங்கார், சரஸ்வதி, ஸ்ரீகிருஷ்ணா, வெலிங்டன், பத்மநாபா, பிரபாத், ராக்ஸி, பைலட், கிரவுன், மேகலா, ஸ்டார் டாக்கீஸ் பாரகன் போன்றவை ரசிகர்களுக்கு திரை விருந்து அளித்து, மனதில் நீங்கா நினைவுகளாக நின்றன. இவற்றில் பல இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாக மாற்றப்பட்டன.
இதில் விதிவிலக்காக, திரைப்படங்கள் திரையிடப்படாவிட்டாலும் நூற்றாண்டை கடந்து, 'தென் இந்தியாவின் முதல் திரையரங்கம்' என்ற பெருமையைத் தாங்கி இன்றளவும் கம்பீரமாய் நிற்கிறது சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சல அலுவலக வளாகத்தில் 'தி எலக்ட்ரிக் தியேட்டர்' கட்டடம்.
1897-ஆம் ஆண்டு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள விக்டோரியா அரங்கில் ஒரு ஐரோப்பியரின் முயற்சியால் முதன்முதலில் சென்னைவாசிகள் திரையில் படங்களைக் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர். அதைத் தொடர்ந்து, சென்னையில் மக்கள் கூடும் இடங்களில் மௌனப் படங்கள் திரையிடப்பட்டன. பெரும்பாலும் இவற்றை இரவு நேரமே திரையிட முடியும் . இதனால் ஏற்படும் அசெளகரியங்களைத் தவிர்க்க எண்ணிய வார்விக் மேஜர், ரெஜினால்ட் ஐர் என்ற இரு ஆங்கிலேயர்கள் பல வசதிகளுடன் கூடிய திரையரங்கைக் கட்ட தீர்மானித்தனர்.
அதன்படி 1900 -இல் அண்ணா சாலையில் 2,635 சதுர அடியில் கட்டப்பட்டதுதான் 'தி எலக்ட்ரிக் தியேட்டர்'. ஆனால், 1913-ஆம் ஆண்டுதான் காட்சிகள் திரையிடப்பட்டன. அதற்கு முன்பே கிளக் என்ற பெண் பிராட்வேயில் ஒரு கட்டடத்தை திரையரங்கமாக மாற்றி, ' தி பயாஸ்கோப்' என்ற திரையரங்கை ஆறு மாதங்கள் நடத்தி வந்திருக்கிறார் என்கின்றனர். இதனால், சென்னையின் முதல் திரையரங்கம் பற்றிய குழப்பம் தொடர்கிறது.
எப்படிப் பார்த்தாலும் சென்னையில் திரையரங்கத்துக்கான பிரத்யேகமாக கட்டப்பட்ட முதல் அரங்கம் என்ற பெருமையை 'தி எலக்ட்ரிக் தியேட்டர்' பெறுகிறது. அப்போதைய மதராஸ் மாகாணத்தில் கட்டப்பட்ட முதல் திரையரங்கம் என்பதால், இது 'தென் இந்தியாவில் கட்டப்பட முதல் திரையரங்கம்' என்ற பெருமையையும் பெறுகிறது.
இந்தத் திரையரங்கம் மாநகரத்தில் மேலும் பல திரையரங்குகள் உருவாக வழிவகுக்கவே போட்டியாளர்கள் உருவாகினர். இதுபோன்ற காரணங்களால் இந்தத் திரையரங்கம் இயங்க ஆரம்பித்து முழுமையாக 2 ஆண்டுகள் முடியும் முன்பே வார்விக் மேஜர் இதனை ஆங்கிலேய அரசிடம் விற்று விட்டார். 21 மாதங்களே இயங்கிய இந்த வரலாற்று சகாப்தம் தனது சுருக்கமான சினிமா வரலாற்றை முடித்தது. இருந்தபோதும் இது இன்னும் உயிர்வாழ்கிறது.
1951- ஆம் ஆண்டு தபால்- தந்தி துறையானது அண்ணா சாலை தபால் நிலைய செயல்பாடுகளுக்காக இந்த இடத்தை வாங்கியது. பின்னர் 1998-ஆம் ஆண்டு முதல் தபால் தலை பணியகம், தபால் தலை கண்காட்சிக் கூடமாக இன்றளவும் செயல்பட்டு வருகிறது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடத்தை புனரமைக்க தபால் துறை சார்பில் 'இந்திய தேசிய கலை, கலாசார பாரம்பரிய அறக்கட்டளை' என்ற அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தமானது தமிழ்நாடு வட்ட தபால், வணிக விரிவுத் துறை அலுவலர் பி.பி.ஸ்ரீதேவி, சென்னை மண்டல தபால் துறை அலுவலர் ஜி.நடராஜன், அண்ணா சாலை தலைமை தபால் அலுவலர் என்.பிரகாஷ் உள்ளிட்டோர் முன்னிலையில் கையொப்பமானது.

இதுகுறித்து சென்னை அண்ணா சாலை தபால் தலை பணியகத்தின் மேற்பார்வையாளர் ஏஞ்சலா சொர்ண பாய் கூறியதாவது:

''தகவல்களின் புதிய பரிணாமத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், ஒருவரின் அறிவுத்திறனைப் பெருக்குவதுக்கும் சிறந்த வழியாக, தபால் தலை சேகரிப்பு உள்ளது. இதற்கு துணை நிற்கும் வகையில் இயங்கிவரும் இந்த நூற்றாண்டு கட்டடம் இதன் தொடக்க காலத்தில் மக்களின் மனதை ஈர்த்தது போல் இன்றும் தபால்தலை சேகரிப்பாளர்களின் மனதில் தவிர்க்க இயலாத இடத்தை தக்கவைத்துள்ளது.

தில்லியை தலைûமையிடமாகக் கொண்ட 'இன்டேச்' நிறுவனத்துடன் இந்த சிறப்பு வாய்ந்த கட்டடத்தை பழமை மாறாமல் புனரமைப்பதுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் இதுதொடர்பான அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு தபால் தலை அருங்காட்சியமாக இது மாற்றம் பெறும். தபால் துறையின் வளர்ச்சிக்கும் இது பயனாக அமையும்'' என்றார்.

இதுகுறித்து சென்னை பல்கலை. இதழியல், தொடர்பியல் துறையின் உதவிப் பேராசிரியர் ஜெய்சக்திவேல் கூறியதாவது:

தபால் துறை வசம் வந்ததால்தான் இந்தக் கட்டடம் இன்றளவும் பாதுகாக்கப்பட்டுள்ளது'' என்றார்.

இதுகுறித்து தென் இந்திய தபால் தலை சேகரிப்பாளர்கள் சங்கத்தின் செயலாளர் மகேஷ் கூறியதாவது:

''பொழுதுபோக்குகளின் அரசன் என்று அழைக்கப்படும் தபால் தலை சேகரிப்பானது அறிவுப் பெட்டகமும் கூட! தபால் தலைகளின் வாயிலாக, அந்த நாட்டின் அரசியல் வரலாறு, கலாசாரம், பாரம்பரியம், பண்பாட்டு சிறப்பு, மொழி, இயற்கை வளம், அதன் தனிச்சிறப்புமிக்க தலைவர்கள்,என ஒட்டுமொத்த தகவலையும் அறியலாம். இதனை புனரமைத்து அருங்காட்சியமாக மாற்றும்பட்சத்தில், பலரும் இதனை காணவருவார்கள். இதன்மூலம் சென்னையின் புராதன சின்னம் பாதுகாக்கப்படுவதோடு தபால் துறையின் வளர்ச்சிக்கும் தூண்டுகோலாய் அமையும்'' என்றார்.

படங்கள்; ஏ.எஸ்.கணேஷ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com