கிரிக்கெட்டில் அசத்தல்...

இரண்டு கைகளும் இல்லாத நிலையில், கிரிக்கெட் விளையாடி அசத்துகிறார் காஷ்மீரின் அனந்நாக் பகுதியைச் சேர்ந்த ஆமிர் ஹுசைன் லோன்.
கிரிக்கெட்டில் அசத்தல்...

இரண்டு கைகளும் இல்லாத நிலையில், கிரிக்கெட் விளையாடி அசத்துகிறார் காஷ்மீரின் அனந்நாக் பகுதியைச் சேர்ந்த ஆமிர் ஹுசைன் லோன்.

சிறு வயதிலேயே இரு கைகளையும் இழந்த அவர், தனது முழு முயற்சியால், கிரிக்கெட் விளையாட கற்று, காஷ்மீர் மாநில மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக உயர்ந்திருக்கிறார். முப்பத்து நான்கு வயதான இவருக்கு திருமணமாகி, மனைவி, மூன்று வயதில் மகன் உண்டு.

சாதனைகள் படைத்துவரும் ஆமிர் ஹுசேன் லோனிடம் பேசியபோது:

'எனது தந்தைக்கு கிரிக்கெட் பேட் தயாரிக்கும் தொழில். 1997-ஆம் ஆண்டில் சிறுவயதில் தொழிலகத்துக்குச் சென்றிருந்தேன். அப்பாவும், அண்ணனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, மில்லில் இருக்கும் மின்சார ஸ்விட்ச்சுகளில், நான் விளையாட மெஷினையும் மோட்டாரையும் இணைக்கும் பெல்ட் சுற்றத் தொடங்கினேன்.

என் கைகள் இரண்டும் மாட்டிக் கொள்ள, கண் இமைக்கும் நேரத்தில் பேட் உருவாக்கும் இயந்திரத்தில் கைகள் சிக்கின.

ரத்த வெள்ளத்தில் மிதந்த என்னை இந்திய ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனே அனுமதித்தும், முழங்கைக்குக் கீழ் கைகளை ஒட்ட வைக்க முடியவில்லை. மூன்று ஆண்டுகள் மருத்துவமனையில் இருந்தேன். மரம் அறுக்கும் மில்லை விற்று, நிலங்களையும் விற்று எனக்கு அப்பா மருத்துவம் பார்த்தும், பயனும் கிடைக்கவில்லை. வேறு வழியின்றி, தோள்பட்டையிலிருந்து இரண்டு அறுந்த கைகளையும் மருத்துவர்கள் துண்டித்தனர். இந்த சம்பவம் எனது ஏழாவது வயதில் நடந்தது.

"இவன் எதற்கும் உதவ மாட்டான்' என்று பலர் சொல்லியும், குறை தெரியாமல் என் தந்தை வளர்த்தார்.

வீட்டிலிருந்து பள்ளிக்கு மூன்று கி. மீ. தூரம் நடந்துதான் போக வேண்டும். ஒருநாள் பள்ளிக்குச் சென்றபோது, கால்சட்டையின் பொத்தான் தையல் கழன்று கீழே விழுந்தது.

கால் சட்டை பொத்தான் போடலைன்னா, கால்சட்டை இடுப்பில் நிற்காது. நண்பர்களிடம் பொத்தானை சரி செய்யும்படி கூறியும் யாரும் உதவிக்கு வரவில்லை.

நிர்வாணக் கோலம்தான். நண்பர்கள் கேலி செய்தபடி பள்ளிக்குப் பயணத்தைத் தொடர, பள்ளிக்கு அருகே இருந்த வயலில் வெயிலில் அமர்ந்தேன். பொழுது சாய்ந்ததும், கால்சட்டையை வாயில் கவ்விக் கொண்டு குனிந்தபடியே வீடு வந்து சேர்ந்தேன். இந்த நிகழ்வுக்குப் பிறகு, எனக்கு நானே உதவி செய்து கொள்ள வேண்டும் என்பது மனதில் பதிந்தது.

நாள்கள் செல்ல, செல்ல யாருடைய உதவியும் இன்றி, நானே குளிக்க, உண்ண, உடைகள் மாற்றிக் கொள்ளக் கற்றுக் கொண்டேன். கால் விரல்களால் தேக்கரண்டியைப் பிடித்தபடி சாப்பிடுவேன். கால் விரல்களால் பேனா பிடித்து எழுதுவேன். ரேசர் பிடித்து சவரம் செய்து கொள்வேன். நீந்தவும் கற்றேன்.

என் உடைகளை நானே துவைக்கவும் செய்வேன்.

அக்கம் பக்கத்து வீடுகளில் போய் டிவியில் கிரிக்கெட் பார்ப்பேன். சிலர் என்னைப் பார்த்தால், டி.வி.யை அணைத்துவிட்டு கதவைச் சாத்தி விடுவார்கள். நான் போனதும் டி.வி.யை ஆன் செய்வார்கள். டி.வி. சத்தம் கேட்டதும், அரவம் இல்லாமல் திரும்பி வந்து, மூடியிருக்கும் கதவின் சாவித் துவாரம் வழியாகக் கஷ்டப்பட்டு கிரிக்கெட் பார்ப்பேன்.

சச்சின் ஆடுகிறார் என்றால், தவறாமல் பார்த்துவிடுவேன். அந்த ஆர்வம் தான் என்னை கிரிக்கெட் ஆடவும் தூண்டியது. கிரிக்கெட் பேட்டை கழுத்துக்கும் தோளுக்கும் இடையில் வைத்து தாடையால் அமர்த்திப் பிடித்துக் கொள்வேன். பந்து எப்படி வருகிறதோ அதற்கேற்ற மாதிரி வளைந்து பந்தை பேட்டால் அடிப்பேன். வலது கால் விரல்களினால் பந்தை கவ்வி பௌலிங் செய்வேன்.

கல்லூரியில், பொது கிரிக்கெட் அணியில் விளையாடியபோது எனது திறமையைப் பார்த்து, காஷ்மீர் மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் அணியில் சேர்த்து விட்டனர். இதுவரை கிரிக்கெட்டை ஸ்ரீநகர், தில்லி, லக்ளென, கொச்சி, மும்பை நகரங்களில் விளையாடியிருக்கிறேன்.

சர்வதேச மாற்றுத் திறனாளிகளின் கிரிக்கெட் போட்டியில், இந்திய மாற்றுத் திறனாளிகளுக்கான கிரிக்கெட் அணியில் சேர்ந்து துபை, நேபாளம், ஷார்ஜா, டாக்காவில் ஆடியுள்ளேன். ஓய்வு நேரங்களில் ஓவியங்களும் வரைவதுண்டு.

என்னை சச்சின் டெண்டுல்கரும் பாராட்டியிருக்கிறார். "வாழ்க்கையில் முடிவு என்பது இல்லை. வாழ்க்கையில் துவக்கம் மட்டுமே உள்ளது' என்று விராட் கோலி யும் பாராட்டினார். அவர்கள் இருவரையும் நேரில் சந்திக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com