காமராஜரிடம் யுத்த நிதி அளித்தேன்

எண்பது வயதான கல்யாணசுந்தரம், சுறுசுறுப்பாக இயங்கி  சமூகச் சேவையை இப்போதும் செய்து வருகிறார்.
காமராஜரிடம் யுத்த நிதி அளித்தேன்

எண்பது வயதான கல்யாணசுந்தரம், சுறுசுறுப்பாக இயங்கி சமூகச் சேவையை இப்போதும் செய்து வருகிறார். கல்லூரியில் நூலகராகப் பணியாற்றியபோது, தனது சம்பளம் முழுவதையும் பல்வேறு சமூகப் பணிகளுக்காக நன்கொடையாகக் கொடுத்துவிட்டு, எளிய வாழ்க்கைக்குத் தேவையான பணத்தை பகுதி நேர வேலை பார்த்து சம்பாதித்தவர்.
"அன்புப் பாலம்' என்ற அமைப்பை நடத்தி வருவதால், "பாலம் கல்யாணசுந்தரம்' என அறிமுகமானவர்.
"இந்த நூற்றாண்டில் மட்டுமில்லாமல், இனி வரும் நூற்றாண்டுகளிலும் அனைவருக்கும் "ரோல் மாடல்'பாலம் கல்யாணசுந்தரம்தான்' என்று அப்துல் கலாம் குறிப்பிடப்பட்ட பெருமைக்குரியவர் பாலம் கல்யாணசுந்தரம்.
பேராசிரியர் அ. சிவபெருமான் எழுத்தாக்கத்தில், பாலம் கல்யாணசுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக அண்மையில் வெளியானது.

கல்யாணசுந்தரத்திடம் பேசியபோது:

""எனது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரிக்கு அருகில் உள்ள மேலக்கருவேலங்குளம். நான் பிறந்த பத்து மாதங்களில் என் தந்தை பால் வண்ணநாதன் மறைந்தார். அவர் ஏழைகளின் சுப, துக்க நிகழ்ச்சிகளுக்கு நிதியுதவி செய்தவர்.
எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் கிடையாது. எனவே, தொடக்கப் பள்ளியில் படிக்கவே தினம் 15 கி.மீ. தூரம் நான் நடந்து சென்றேன். பள்ளிக்குச் செல்லும்போது, அம்மா அளிக்கும் தின்பண்டங்களை சக மாணவர்
களுக்குப் பகிர்ந்து கொடுப்பேன். யாருக்கும் கொடுக்காமல் எல்லாவற்றையும் நானே சாப்பிட்ட சில நாள்களில் என் அம்மா என்னை இரண்டு கன்னங்களிலும் அறைந்திருக்கிறார். ஆக, என் கொடை உள்ளத்துக்கு பலமாக அடித்தளமிட்டவர் என் அம்மாதான்.
"எதற்காகவும் பேராசைப்படாதே!' , " எது கிடைத்தாலும் பத்தில் ஒரு பங்கை தானம் செய்', "நாள்தோறும் ஒரு உயிருக்கு நல்லது செய்!' என மூன்று அறிவுரைகளை எனது தாய் தாயம்மாள் கூறினார். நான் தொடக்கப் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே கடைபிடித்தேன்.
மதுரையில் தமிழ் இளங்கலைப் படிப்பை முடித்துவிட்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் நூலகவியல் படிப்பில் சேர்ந்தேன். அப்போது 1963}ஆம் ஆண்டில் இந்தியா} சீனா போர் நிகழ்ந்தது. பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, யுத்த நிதி அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். அவருடைய உரை வானொலியில் ஒலிபரப்பான அன்று இரவு ஏழு மணி அளவில் எம்.ஜி.ஆர். முதன் முதலாக 75 ஆயிரம் ரூபாய் யுத்த நிதியை அளித்தார்.
மறுநாள், காலை எழுந்தவுடன் சென்னை தி.நகர் திருமலைப்பிள்ளை சாலையில் இருந்த காமராஜர் இல்லத்துக்குச் சென்றேன். முதல்வர் வீட்டுக் காவலர், "என்ன விஷயம்?' என்று கேட்க, நான் "யுத்த நிதிக்கு நன்கொடை தர வந்திருக்கிறேன்' என்று சொன்னேன். அவர் ஒரு துண்டுச் சீட்டை என்னிடம் கொடுத்து. சந்திக்க விரும்புவதன் காரணத்தை எழுதிக் கொடுக்கும்படிக் கூறினார். அதன்படியே செய்தேன்.
சிறிது நேரத்தில் காமராஜரை சந்தித்தேன். அவரிடம் என் கழுத்தில் அணிந்திருந்த செயினைக் கழற்றி கொடுத்தபோது, மிகவும் வியப்படைந்தார். ஆனாலும், உடனே என்னிடமிருந்து தங்கச் செயினை அவர் வாங்கிக்கொள்ளவில்லை.
"கடற்கரையில் நடக்கவிருக்கும் நிதியளிப்பு விழாவில் வந்து உன் நன்கொடையைக் கொடு!' என்று சொல்லி, அனுப்பிவிட்டார்
குறிப்பிட்ட நாளன்று கடற்கரையில் ஏற்பாடாகி இருந்த யுத்தநிதி அளிப்பு விழாவுக்குச் சென்றேன். விழா ஆரம்பிப்பதற்கு முன்பாகவே மேடை அருகில் செல்ல முயற்சி செய்தபோது, போலீஸார் அனுமதிக்கவில்லை. மணலில் உட்கார்ந்துகொண்டேன்.
சிறிது நேரத்தில், முதல்வர் காமராஜர், உள் துறை அமைச்சர் கக்கன் உள்ளிட்டோர் அங்கு வந்தனர். வரும்போதே மணலில் உட்கார்ந்துகொண்டிருந்த என்னைப் பார்த்துவிட்ட காமராஜர், என்னை அழைத்து, என் கையைப் பிடித்தபடி மேடையை நோக்கி நடக்கலானார்.
மேடையில் ஏறியதும், கக்கனை பின் வரிசை நாற்காலியில் உட்காரச் சொல்லிவிட்டு, என்னைத் தன்னுடைய பக்கத்து நாற்காலியில் உட்காரச் சொன்னார்.
நிகழ்ச்சி துவங்கியதும், முதன்முதலாக என்னிடமிருந்து தங்கச் செயினை பெற்றுக் கொண்டு, "யுத்த நிதிக்காக நன்கொடை வழங்கிய முதல் மாணவர் இவர்தான். தங்கம் நன்கொடை தந்த முதல் மாணவரும் இவர்தான்' என்று பாராட்டினார்.
காமராஜரை வீட்டில் சந்தித்து தங்கச் செயினை நன்கொடையளிக்கும் விருப்பத்தைக் கூறியதும், இந்த நன்கொடையில் எனது குடும்பத்தினருக்கும் சம்மதமா? என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்குத் தகவல் தெரிவித்து, குடும்பத்தினரிடம் விசாரித்திருக்கிறார்.
"எனது தாயும் நல்ல காரியத்துக்காக அவன் தன்னுடைய சங்கிலியை தாராளமாக தானம் கொடுக்கட்டும்'' என்று சொல்லி
யிருந்தார்.
இதையடுத்து, அவர் மீது மதிப்பும், மரியாதையும் பல மடங்கு பெருகியது'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com