பிரிவை மீட்டெடுக்கும் மனிதன்!

வாலை ஆட்டும் ஒரு நாய்க்குள், பெயர் சிணுங்கும் கிளிக்குள் கூட உறங்கும் முயலுக்குள்...
பிரிவை மீட்டெடுக்கும் மனிதன்!

வாலை ஆட்டும் ஒரு நாய்க்குள், பெயர் சிணுங்கும் கிளிக்குள் கூட உறங்கும் முயலுக்குள்... ஒரு காதலை, பிரிவை மீட்டெடுக்கிறான் மனிதன். காலம் முழுக்க ஜல்லிக்கட்டு காளைகளைத் தயார் செய்வதிலேயே வாழ்க்கையைத் தொலைத்தவர்கள், பறவைகளுக்கான ஆராய்ச்சிக்காவே தன்னை அர்பணித்தவர்கள், பாம்புகளின் புதிர்களைத் தெரிந்துக் கொள்வதையே பயணமாக்கி கொண்டவர்கள்...

இப்படி ஏக மனிதர்கள் ஒரு அதிசயம் போல் நம்மைக் கடந்து கொண்டே இருக்கிறார்கள். எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான் மனிதர்களின் பெரும் பிரச்னை. நம்பிக்கை, அன்பு எல்லாம் பொய்யாகும் போதுதான், எல்லாம் கசந்து போகிறது. உயிர் இல்லாத பொருள்களின் மீது வைக்கிற அன்பில் அப்பழுக்கு இல்லை. இந்த மன நிலையை பலரிடம் நான் பார்த்திருக்கிறேன். நம்பிக்கை இன்மை நிறைந்த மனித உறவுகளை மனதளவில் துரத்தியவர்கள், பொருள்களின் பேசா அன்பை நிழலாக்கி கொள்கிறார்கள். இங்கே நிகழ்வதும் அப்படித்தான்.

இந்தப் பூமியோடும், மனித வாழ்க்கையோடும் பிற உயிர்களுக்கு இருக்கும் தொடர்பு என்பது மிக முக்கியமானது. நமக்கு தெரிந்ததெல்லாம் நேரடியாக, அதுவும் உயிரினங்களை அழித்து அடையும் நன்மைகள்தான். ஆனால் மறைமுகமாக நாம் உயிர் வாழவே இந்த பொருள்கள் மிகவும் அவசியமாக இருப்பதை நாம் அறிந்திருக்கிறோமா? எறும்பிலிருந்து யானை வரை நாம் வாழும் இந்த பூமியின் சுற்றுச்சூழலுக்கும், நம் உயிருக்கும் பல வகையில் அதன் வழக்கமான நடவடிக்கைகள் மூலம் உதவுகின்றன. இங்கேயும் அப்படித்தான். எல்லாம் கதையின் சூழல்கள்.'' அருமையாக பேசுகிறார் இயக்குநர் ஜான் கிளாடி. குறும்பட உலகத்தில் இருந்து வந்திருப்பவர். கன்னியாக்குமரியை பின்னணியாக கொண்டு "பைரி' படத்தை இயக்கி வருகிறார்.

'பைரி' என்பது "ஃபால்கன்' என்ற பருந்தின் பெயர். கதைக்களத்திற்கு அந்தப் பெயர் பொருத்தமாக இருந்ததால் அதைத் தேர்வு செய்ததாகச் சொல்கிறார் ஜான். தொடர்ந்து அவர் பேசுகையில்.... 'வட சென்னை பகுதியில் இன்றளவும் புறா பந்தயங்கள் நடைபெற்று வருகின்றன. அதைப் பின்னணியாகக் கொண்டு சில படங்கள் உருவாகி உள்ளன. தனுஷ் நடித்த "மாரி' படமும் புறா பந்தயப் பின்னணியில் உருவான படம்தான். ஒருவர் 30 புறாக்களை வளர்த்தால் மூன்று புறாக்கள் மட்டுமே பந்தயங்களில் போட்டியிடத் தேறும். அவ்வாறு வளர்க்கப்படும் புறாக்களை "பைரி' பருந்து கொத்திச் சென்றுவிடும். அதேபோல் மனிதர்கள் வாழ்க்கையிலும் உயரத்தில் இருப்பவர்களைக் கடந்து சில பேரால் மட்டுமே சாதிக்கமுடிகிறது. இதை மையமாக வைத்துத் தான் கதை சொல்லியிருக்கிறேன்''

"சேவல் சண்டை, ஜல்லிக்கட்டு போன்றவை பாரம்பர்ய போட்டிகளாக, கலைகளாகப் பார்க்கப்படுகின்றன. அதே போல் புறா பந்தயமும் பாரம்பரியமாக மன்னர்கள் காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. தொலை தூரம் பறந்து செல்லக்கூடிய சக்தி கொண்ட பறவையான புறாவை மன்னர்கள் தூது அனுப்புவதற்கும் பயன்படுத்தியுள்ளனர். போதுமான பயிற்சி கொடுத்தால் எவ்வளவு தூரத்தையும் புறா எளிதில் கடந்து விடும்'' என ஆர்வமாகப் பேசத் தொடங்கினார்.

'வளையம் ஒன்றில் சீக்ரெட் நம்பர் இருக்கும். அந்த நம்பரை புறாவின் காலில் ஒட்டி விடுவோம். அம்பயர் எனச் சொல்லப்படுகிற கன்வேயரிடமும் சீக்ரெட் நம்பர் இருக்கும் அவர் போட்டிகளைக் கண்காணிப்பதுடன் சங்கத்துக்கு வந்து போட்டிகளில் கலந்துகொள்ளக்கூடிய புறாக்களை பேனரிங் பாக்ஸில் அடைத்து பந்தயம் நடக்கும் இடத்துக்கு எடுத்துச் செல்வார்கள். ஒவ்வொரு போட்டியையும் இரண்டு கன்வேயர்கள் நடத்துவார்கள்.

எந்த ஊரில் போட்டி நடக்கிறதோ அந்த ஊருக்குச் சென்று குறிப்பிட்ட நேரத்தை நிர்ணயம் செய்து கொண்டு அந்த நேரத்தில் யங், ஓல்டு என எந்த புறா பந்தயம் நடைபெறுகிறதோ அந்த புறாக்களைத் திறந்து விடுவார்.அங்கிருந்து புறாக்கள் வளர்க்கப்படும் இடத்துக்குச் சென்று விடும். எந்தப் புறா முதலில் வருகிறதோ அந்தப் புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.

புறா வளர்ப்பவர்கள் வீட்டிலேயே இருப்பார்கள். தங்கள் புறா வந்தடைந்ததும் வளையத்தில் ஒட்டப்பட்டிருக்கும் சீக்ரெட் நம்பரைப் பார்த்து அதை அந்த அப்ளிகேஷனில் பதிவு செய்து விடுவார்.

இதில் எந்தப் புறா முதலில் சென்றது என்பதை அறிந்து கன்வேயர் வெற்றிப் புறாவை அறிவிப்பார். வெற்றி பெற்ற புறாவுக்கு விழா நடத்தி கோப்பை, சான்றிதழ் கொடுப்படும். கார், பைக் போன்றவை பரிசாக அறிவிக்கப்படும் பந்தயங்களும் நடைபெற்றுள்ளன. பந்தயத்தில் கலந்துகொள்ளும் புறாவை போட்டியில் பங்கேற்க வைப்பதற்காக இரண்டு மாதத்திற்கு முன்னரே தயார் செய்ய தொடங்கி விடுவார்கள். பல நூறு கிலோ மீட்டரில் திறந்து விடப்படும் புறா கழுகு உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளைக் கடந்து வளர்த்தவரை தேடி, வளர்க்கும் இடத்துக்கு பறந்து வந்து சேரும். இதில் பரிசு, பாராட்டெல்லாம் இரண்டாம் பட்சம்தான்; வளர்த்தவரை தேடி அந்தப் புறா வரும் அந்தப் பாசம்தான் புறா வளர்ப்பதிலும், பந்தயத்தில் பங்கெடுக்க வைப்பதற்காக ஆர்வத்தைப் பெருக்கி வருகிறது.

புறாவுக்கு பாசம் உண்டு எங்கள் மேல் புறாவும், அதன் மேல் அவர்கள் வைத்திருக்கும் பாசத்தையே இந்தப் பந்தயங்கள் உணர்த்துகின்றன. ஒரு குழந்தையை எப்படி பராமரிப்போமோ அதே போல்தான் புறாக்களைக் கவனிக்கிறார்கள். நான் கன்னியாக்குமரி சுற்றிய பகுதிகளில் வளர்ந்தவன். அங்கு புறா வளர்த்து பராமரிப்பவர்களை சிறு வயதில் இருந்தே கண்காணித்து வருகிறேன். அதை மையமாக வைத்துதான் இந்த கதையை எழுதினேன். சையத் மஜீத், மேக்னா, சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட சினிமா முகங்களுடன், நாகர்கோவிலில் புறா பந்தயங்களில் ஈடுபடும் 50-க்கும் மேற்பட்டோரை இதில் நடிக்க வைத்துள்ளேன். ஒரு நல்ல சினிமா காத்திருக்கிறது'' நம்பிக்கையாக முடிக்கிறார் இயக்குநர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com