கேரளத்தில் திருவள்ளுவர் கோயில்கள்!

திருவள்ளுவருக்கு தனிக் கோயில் சென்னை மயிலாப்பூரில் உள்ளது.  ஆனால், கேரளத்தின் மூன்று மாவட்டங்களில் பல கோயில்கள் இருப்பதும், ஆயிரக்கணக்கானோர் குலதெய்வமாக வழிபடுவதும் வியப்பில் ஆழ்த்துகிறது.
கேரளத்தில் திருவள்ளுவர் கோயில்கள்!

திருவள்ளுவருக்கு தனிக் கோயில் சென்னை மயிலாப்பூரில் உள்ளது. ஆனால், கேரளத்தின் மூன்று மாவட்டங்களில் பல கோயில்கள் இருப்பதும், ஆயிரக்கணக்கானோர் குலதெய்வமாக வழிபடுவதும் வியப்பில் ஆழ்த்துகிறது.
"பகவான் ஆதி திருவள்ளுவர் ஞானமடம்" என்ற அமைப்பின் தலைமையிடம் இடுக்கி மாவட்டத்துக்கு உள்பட்ட சேனாபதி எனும் மலைக் கிராமத்தில் உள்ளது. இங்குள்ள கருவறைக்குள் திருவள்ளுவர் படம். இங்கு வந்து வழிபடுபவர்கள் அடித்தட்டு மக்கள்.

இந்த ஞான மடத்தின் தலைவர் சிவனிடம்பேசியபோது:

""1974-ஆம் ஆண்டு வார்ப்பட்டி ஊரைச் சேர்ந்த சிவானந்தம், பூப்பாறை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். அங்கு தமிழர் நடத்தி வந்த ஒரு தேநீர்க் கடையில் புத்தர், இயேசு, திருவள்ளுவர் படங்கள் கடையில் மாட்டப்பட்டிருந்ததையும், அவர்கள் படங்களின் கீழ் "உலகைக் காத்தவர்கள்' என எழுதப்பட்டிருந்ததையும் கண்டார். தேநீர்க் கடைக்காரரிடம் திருவள்ளுவர் குறித்து சிவானந்தம் கேட்டறிந்தார்.

சிவானந்தம் தனது நண்பர் ஐயப்பனுடன் தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகளில் பயணிக்கும்போது, பேருந்துகளில் திருவள்ளுவர் படமும் அதன் கீழே திருக்குறள் எழுதியிருந்ததையும் பார்த்தார்.
இதனால் திருவள்ளுவர் மீது சிவானந்தத்துக்கு இனம்புரியாத ஈடுபாடு ஏற்பட்டது. "வெண்ணிக்குளம் கோபால குரூப்' எனும் அமைப்பானது மலையாளத்தில் மொழிபெயர்த்த திருக்குறளைப் படித்து, விவரங்களை அறிந்தார். சமூகப் புரட்சியாளர் ஸ்ரீநாரயணகுருவும் மலையாளத்தில் எழுதிய திருக்குறளின் ஒரு பகுதி கிடைத்தது.
அதன்பிறகு திருவள்ளுவரை ஞானகுருவாகவே சிவானந்தர் ஏற்று குறள் வழி நடந்தார். ஐயப்பன் உள்பட மற்ற நண்பர்களுடனும் அதன்படியே நடந்தனர்.
"ஞானமடம்' என்ற பெயரில் திருவள்ளுவருக்கு தனி கோயில் அமைக்கவும் முடிவு செய்தனர். அதற்கு ஐயப்பனும் தயக்கமின்றி தனது 27 சென்ட் நிலத்தை தானமாகத் தந்தார். பின்னர், கோயில் உருவானது.
1975-ஆம் ஆண்டில் சேனாபதி கிராமத்தில் திருவள்ளுவர் படத்தைக் கருவறையில் மூலவராக வைத்து, திருக்குறளை மலையாள மொழியில் எழுதி வைத்து, திருமந்திரமாகப் பாடத் தொடங்கினர். அதன்பயனால் அவர்களின் குடும்பத்தில் பல நன்மைகள் நடக்கத் தொடங்கின. இதனால் இந்த அமைப்பை விரிவுபடுத்த முடிவு எடுக்கப்பட்டது.
கோட்டயம், எர்ணாகுளத்தில் பல்வேறு இடங்களிலும் ஞானமடங்களைத் தோற்றுவித்தார் சிவானந்தம்.
இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம் என மூன்று மாவட்டங்களில் முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஞான
பீடங்கள் அமைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படுகின்றன. இந்தப் பீடங்களை வழிநடத்தி வந்த சிவானந்தம் 2021- ஆம் ஆண்டில் மறைந்தார். அவரது மறைவுக்குப் பின்னர், பல கோயில்களில் இன்றும் சிறப்பாக பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மலையாள மாதத்தின் முதல் நாள் மட்டுமே வழிபாடு நடத்தப்படும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் பக்தர்கள் மாலை அணிந்து நாற்பது நாள்கள் விரதம் இருந்து 41-ஆவது நாளில் இங்குவந்து மாலையை கழற்றி வைத்து விரதம் முடிப்பார்கள். மற்ற ஞானமடங்களில் அங்கே மாலை அணிந்து விரதம் தொடங்கி, 41-ஆவது நாளில் தலைமை மடம் வந்து நிறைவு செய்வார்கள். முடியாதவர்கள் அவர்களின் ஞானமடத்திலேயே நிறைவு செய்கின்றனர்.
விழாவில் தாலப்பொலி,, அன்னதானம் , திருவள்ளுவர் சொற்பொழிவுகள் ,இசைக் கச்சேரிகள் நடைபெறுகின்றன.
கேரளத்தில் இருந்து சேனாதிபதி செல்ல, கொச்சியில் இருந்து மூணாறு செல்லும் வழித்தடத்தில் அடிமாலி என்ற இடத்தில் இருந்து, ராஜாகாடு வழியாக சேனாபதி கிராமத்துக்கு வரலாம். அடிமாலியில் இருந்து ஆனச்சால் வந்து ராஜாகாடு சென்று சேனாபதி வரலாம்.
தமிழ்நாட்டில் இருந்து செல்ல விரும்புவோர் தேனி, போடிநாயக்கனூர், போடிமெட்டு, பூப்பாறை, சாந்தம்பாறை வந்து வலதுபுறம் 3 கி.மீ. தொலைவில் சேனாபதி வரலாம். பூப்பாறையில் இருந்து பேருந்து வசதியுள்ளது'' என்றார்.
இதர கோயில்கள் குறித்து, மடத்தில் அங்கம் வகிக்கும் பிரகாஷிடம் கேட்டபோது:
""எர்ணாகுளம் அருகேயுள்ள கூருமலையில் உள்ள கோயில் கருவறையில் திருவள்ளுவர் படமும், கருவறை வெளியில் சிலைகளும் உள்ளன.
அதன் அருகில் உயரமான கூருமலையும் அதில் சிலுவை சின்னங்களும் நிறைந்திருந்துள்ளன. இந்த மலையின் உச்சியில் இயற்கை அழகை ரசிக்கும் விதமாக காட்சிக்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மலைகளையும் பள்ளத்தாக்கையும் காண்பது கண் கொள்ளாக்காட்சியாக உள்ளது. அத்துடன் மூன்று நகரங்களையும் காண முடிவது குறிப்பிடத்தக்கதாகும். எர்ணாகுளம் நகரில் 40 கி.மீ.தொலைவு இலஞ்சி வந்து கூருமலைக்கு வரவேண்டும்.
கோட்டயம் நகரின் அருகேயுள்ள ஏட்டுமானூர் மகாதேவர் கோயிலில் இருந்து சுமார் இரண்டு கி.மீ. தொலைவில் திருவள்ளுவர் கோயில் உள்ள ஞானமடம் அமைந்துள்ளது.
எட்டுமானூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஆட்டோவில் வர விரும்வோர் "திருவள்ளுவர் ஞானமடம்' என்று சொன்னாலே அழைத்து வந்துவிடுவர். இங்கு தினமும் இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றி வழிபாடு நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் திருக்குறள் வகுப்புகள், திருவள்ளுவரை மலையாளத்தில் துதித்து வழிபாடு நடக்கிறது. மலையாள மாதத்தின் முதல் நாளில் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
மலையாள மொழியில் குறளை ஒலி மாறாமல் எழுதி வைத்து, திருமந்திரமாக திருவள்ளுவரை திருக்குறளால் அர்ச்சனை செய்து வழிபடுகிறோம். ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒன்று கூடிப் பிரம்மோத்ஸவ பெருவிழாக் கொண்டாட்டமும் நடத்துகிறோம்.
ஒவ்வொரு ஞான மடத்துக்கும் ஒரு மடாதிபதி உள்ளார். சேனாபதி மடாதிபதி தலைமை வகிக்கிறார். முறையான வழிபாட்டு பயிற்சி பெற்றவர்களே மடாதிபதியாக முடியும்'' என்றார்.
எட்டுமானூரில் உள்ள பகவான் ஆதி திருவள்ளுவர் ஞானமடத்தின் மடாதிபதி விருதாதசாரியரிடம் பேசியபோது:
""சுமார் நாற்பது ஆண்டுகளாக, திருவள்ளுவர் கோயில்கள் நல்ல முறையில் நடைபெறுகின்றன. இவ்வூரில் உள்ள நாற்பது குடும்பங்கள் இந்த ஞானமடத்தின் பக்தர்களாக உள்ளனர். திருவள்ளுவர் சொற்பொழிவுகள், இசைக்கச்சேரிகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து ஆதரவு கிடைத்தால் அதை மனமுவந்து ஏற்போம். திருக்குறளை தமிழ் ஒலி மாறாமல் மலையாளத்தில் எழுதிவைத்து பாடி வருகிறோம். எங்கள் குலதெய்வமாக விளங்குபவர் திருவள்ளுவர். அவரின் திருக்குறளே எங்களுக்கு திருமந்திரம்'' என்றார்.

தகவல் உதவி: நயினார், புஷ்பராஜ் , சதீஷ்குமார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com