உளி ஓவியங்கள்

'கேலோ இந்தியா'  விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கிவைக்க, பிரதமர் நரேந்திர மோடி  சென்னைக்கு வருகை தந்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசாக 'உளி ஓவியங்கள்' என்ற நூலை வழங்கினார்.
உளி ஓவியங்கள்


'கேலோ இந்தியா' விளையாட்டுப் போட்டிகளைத் தொடக்கிவைக்க, பிரதமர் நரேந்திர மோடி ஜன. 19-இல் சென்னைக்கு வருகை தந்தபோது, அவரை வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவுப் பரிசாக 'உளி ஓவியங்கள்' என்ற நூலை வழங்கினார். அந்த நூலின் சிறப்பு என்ன? மதுரை மாநகரின் கலைநயமிக்கச் சிற்பங்களின் கோட்டோவியங்களின் தொகுப்புதான் அது.
மதுரையைச் சேர்ந்த கோட்டோவியரான நூலாசிரியர் ரத்தின பாஸ்கர் பேசியபோது:

''எனது மானசீக குரு சில்பி. மதுரையில் பல ஓவிய ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்று எனது திறமையை வளர்த்துகொண்டேன்.
ஆரம்பத்தில் காகிதத்தில் வரைந்தேன். கணினி அறிவு இல்லாத எனக்கு நண்பர்கள் கணினியில் படம் வரையக் கற்றுக் கொடுத்தனர்.
மதுரை மீனாட்சி கோயிலுக்கு அருகேயுள்ள புது மண்டபத்தில் மனதைக் கவரும் சிற்பங்கள் அதிக அளவில் உள்ளன. பல ஆண்டுகளாக புது மண்டபத்தில் இயங்கிவந்த கடைகளால் சிலைகள் மறைத்துவிட்டன. அதனால் சிற்பங்களின் அழகை ரசிக்க, சிலைகளை கருங்கல்லில் உயிர் கொடுத்த சிற்பிகளைச் சிலாகிக்க இயலாமல் போனது.
ராஜேந்திரன் என்ற எண்பது வயது வணிகர் புது மண்டபத்தையும் அங்கு உள்ள சிற்பங்களையும் புனரமைக்க, இரண்டு கோடி ரூபாய் செலவில் திருப்பணிகளைச் செய்துவருகிறார். இதனால் மண்டபத்தில் செயல்பட்டு வந்த கடைகள் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளன. புனரமைப்பு நிறைவு பெற்றதும் புது மண்டபம் இனி அருங்காட்சியமாக மாற்றப்படும்.
புதுமண்டபக் கலைப் புதையலை உலகம் முழுவதும் கொண்டு செல்ல முக்கிய சிற்பங்களை கோட்டோவியங்களாக வரைந்து தொகுப்பாக வெளியிட வேண்டும் என்ற எனது எட்டு ஆண்டு கனவு இப்போது நிறைவேறியுள்ளது. தமிழ், ஆங்கிலம் எனஇரண்டு மொழிகளிலும் அச்சிட்டேன்.
நூல் தயாரானவுடன் சென்னையில் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் ஜனவரி 10-இல் காட்டினேன். 'உளி ஓவியங்கள்' அவர்களைக் கவர்ந்து விடவே தமிழ், ஆங்கில விளக்கம் உள்ள பிரதிகளை தலா மூன்று வீதம் விலை கொடுத்து வாங்கினர். அவர்கள் இந்த நூலை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்க, நூலை பிரதமருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.
பத்து நாள்கள் இடைவெளியில் எனது படைப்பானது முதல்வர் வாயிலாக, பிரதமருக்கு சென்றடைந்து எனக்கு கிடைத்த அங்கீகாரம்.
நூலில் 60 சிற்பங்களை நேராக, வலது, இடது பக்கமாகப் பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை 180 கோட்டோவியங்களாக வரைந்துள்ளேன். வசந்த மண்டபமாக மதுரை மன்னர் திருமலை நாயக்கர் உருவாக்கினாலும் பின்னாளில் அது புது மண்டபம் என்று பெயர் மாறியது. கலைக் கருவூலமான புதுமண்டபத்தின் நீளம் 332 அடி. அகலம் 92 அடி. இங்கு ஒற்றை கல் சிற்பங்கள் 60, புடைப்புச் சிற்பங்கள் 744 செதுக்கப்பட்டுள்ளன.
ஒரு கல்லில் செதுக்கப்பட்ட சிற்பத்தின் முப்பரிமாணத்தை கண்களால் பார்க்கலாம். புடைப்பு சிற்பம் என்பது தலை முதல் கால்கள் வரை முன்பக்கம் மட்டுமே பார்க்க முடியும். சிலையின் பின்புறம் செதுக்கப்படாமல் கருங்கல் பாறையாகவே இருக்கும்.
பெருமாளையும், சிவனையும் திருமலை நாயக்கர் வழிபட்டு வந்ததால் வைணவ, சைவ பிரிவினருக்கு இடையே பகை, காழ்ப்புணர்ச்சியை விலக்கி மனித நேயம் மலர, வசந்த மண்டபத்தில் சைவ, வைணவத் தாக்கம் உள்ள சிலைகளைச் செதுக்கச் செய்தார்.
'உளி ஓவியங்கள்' முதல் தொகுப்பில் ஒற்றைக்கல் சிற்பங்களை கோட்டு ஓவியங்களாக வரைந்துள்ளேன். இரண்டாம் தொகுப்பில் புடைப்பு சிற்பங்களின் ஓவியங்கள் இடம் பெறும். மூன்றாவது தொகுப்பில் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களின் கோட்டு ஓவியங்கள் இடம் பெறும்.
கோட்டோவியங்களை ஆதிமனிதன் பொழுதுபோக்குக்காகக் கையாண்டான். குகைக் சுவர்களில், மலை, குன்றுகளில் அன்றைய கோட்டு சித்திரங்கள் வரையப்பட்டன. சங்க இலக்கியங்களான சிறுபாணாற்றுப்படை, நெடுநெல்வாடை, பட்டினப்பாலையில் கோட்டோவியம் பற்றிய குறிப்புகள் உள்ளன. கோட்டோவியம் தொடர்ந்து கையாளப்பட வேண்டும் என்பதற்காகவும் 'உளி ஓவியங்கள்' தொகுப்பை வெளியிட்டுள்ளேன்.
வாழ்வாதாரத்துக்கு விளம்பரப் படங்கள் வரைவது, நகரம் பேரூரின் வரைபடங்கள் வரைவதைத் தொழிலாகக் கொண்டிருக்கிறேன்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com