தேங்காய் நீரில் அரிய வகை மருந்து

நீரழிவு (சர்க்கரை) நோயாளிகள் ஆறாத காயங்களுக்காக கால்களையோ, விரல்களையோ வெட்டி எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.
தேங்காய் நீரில் அரிய வகை மருந்து


நீரழிவு (சர்க்கரை) நோயாளிகள் ஆறாத காயங்களுக்காக கால்களையோ, விரல்களையோ வெட்டி எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை. இதற்காக, தேங்காய் நீரில் ஒரு அரிய வகை மருந்தைக் கண்டுபிடித்துள்ளார் பொள்ளாச்சியைச் சேர்ந்த கா.விவேகானந்தன்.

மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படிப்பை கோவையில் படித்த இவர், அமெரிக்காவில் இன்டஸ்டிரியல் என்ஜினீயரிங் பட்ட மேற்படிப்பை முடித்தார். இவர் தேங்காய் நீரிலிருந்து நோயாளிகளின் ஆறாத காயங்களை அறுவைச் சிகிச்சையின்றி குணப்படுத்தும் வகையில் அற்புதமான மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

இந்தச் சாதனையை நிகழ்த்திய அவரிடம் ஒரு சந்திப்பு:

அமெரிக்காவில் அறிவியல் ஆராய்ச்சித் துறையில் பணியாற்றிய நீங்கள் இந்தியா வரக் காரணம் என்ன?

அமெரிக்காவில் அறிவியல் துறையின் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றும்போது, திடீரென ஒருநாள் நான் படித்த படிப்பும், சேவையும் நம் தேசத்துக்குப் பயன்பட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. இரண்டாவதாக வீட்டிலிருக்கும் முதியோர்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அதிகமான உறுத்தலுமே காரணமாக இருந்தது. இவையிரண்டுமே இந்தியா வரக் காரணங்கள்.

இந்தியா வந்ததும் என்ன செய்தீர்கள்?

என் சொந்த ஊரான கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், 70 ஆண்டுகளாக எனது குடும்பத்தினர் தேங்காயை பயன்படுத்தி மதிப்புக் கூட்டுப் பொருளாக்கி எண்ணெய், சர்க்கரை உள்பட பலவற்றை உற்பத்தி செய்து பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

தேங்காய்களை உடைக்கும்போது, அதிலிருந்து வீணாகும் தேங்காய் நீரிலிருந்து ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசித்துப் பார்த்தேன். தேங்காய் கொப்பரை உற்பத்திக் காலங்களில் எண்ணெய் தயாரிக்க அவற்றை காயப் போடும்போது தேங்காயை உடைப்பார்கள். அவ்வாறு உடைக்கப்படும் தேங்காயிலிருந்து நீர் வீணாகிறதே என்ற எண்ணம் ஏற்பட்டது.

ஏனெனில் தேங்காயில் ஏராளமான மருத்துவக் குணங்கள் இருப்பதும் எனக்குத் தெரியும். இதைப் பயன்படுத்தவே, 2016-ஆம் ஆண்டில் 'ஆர்தர் பயோமெட் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற நிறுவனத்தை தொடங்கினேன்.

தேங்காய் நீரில் என்னென்ன மருத்துவக் குணங்கள் இருக்கின்றன.

வைட்டமின் சத்துகள் அதிகம், தினமும் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து வந்தாலே நமது உடலில் நீர்ச்சத்து அதிகரித்து உடலை வறட்சி அடைய விடாமல் பாதுகாக்கும். செரிமானக் கோளாறுகளோ அல்லது வாயுத் தொல்லைகளோ வராது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டையும் அதிகரிக்கும். நீரழிவு நோயாளிகளும் தேங்காய் நீரை பருகி பயனடையலாம். தேங்காய் எண்ணெய் தோலில் ஏற்படும் அரிப்புகள், தோல் தொற்றுகளிலிருந்தும் சருமத்தைப் பாதுக்காக்கும்.

தேங்காய் நீரின் மூலம் நீரழிவு நோய்க்கான மருந்தை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?

தேங்காய் நீரை மூலப் பொருளாக பயன்படுத்துவதோடு தேங்காய் எண்ணெயிலிருக்கும் லாரிக் அமிலம் மூலமாக ஒரு ஜெல் தயாரிக்கிறோம். இது மென்மையாக ஒரு சிலிக்கான் சீட்டு மாதிரி இருக்கும். இந்த ஜெல் சீட்டை நீரழிவு நோயாளிகளுக்கு உள்ள ஆறாத காயங்களின் மீது வைத்தாலே குணமாகி விடும். காலையோ, கால் விரல்களையோ வெட்டி எடுக்க வேண்டிய அவசியமே இருக்காது.

இந்த மருந்தைக் கண்டுபிடிக்க, கோயம்புத்தூரில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியின் பரிசோதனைக் கூடத்தை ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள நிர்வாகத்தினர் அனுமதித்தனர். அவர்களின் ஒத்துழைப்பாலும், எங்களது முயற்சியாலும் இந்த அரியவகை மருந்தை கண்டுபிடித்திருக்கிறோம். இந்த மருந்துப் பொருளை இந்தியாவிலேயே நாங்கள் தான் முதல் முதலாக தயாரித்திருக்கிறோம் என்பதையும் பெருமையாக சொல்ல முடியும்.

முதலில் ஒரு எலிக்கு நீரழிவு நோய் வரவழைத்து, அதன் உடலில் காயத்தை ஏற்படுத்தி ஆராய்ச்சி செய்து பார்த்தோம். மொத்தம் 92 எலிகளை ஆராய்ச்சிக்கு பயன்படுத்தியிருக்கிறோம். எலிக்கு நாங்கள் ஏற்படுத்தும் காயங்கள் எவ்வளவு ஆழம், அகலம், நீளம் ஆகியனவற்றை கணக்கெடுத்து அதன் மீது தேங்காய் நீரால் செய்யப்பட்ட ஜெல் சீட்டை வைத்து ஆராய்ச்சி செய்தோம். ஆராய்ச்சிக்கு முன்பு எலிக்கு மயக்கமருந்து கொடுத்து விடுவோம். இப்படியாக தொடர்ந்து இரண்டு ஆண்டுகளில் முப்பதுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளை செய்த பின்பே நீரழிவு நோயாளிகளையும் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.இப்போது பல நோயாளிகள் குணமடைந்து கொண்டிருக்கிறார்கள்.

உங்களது கண்டுபிடிப்பை அரசுக்கு தெரிவித்தீர்களா?

அரசுக்கு தெரிவித்து காப்புரிமையும் பெற்று விட்டோம். மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறை ரூ.70 லட்சம் வரை கொடுத்து நிதியுதவி செய்திருக்கிறது. பொருள் உற்பத்திக்கான உரிமம் பெற்று விட்டோம். தொழிற்சாலை நடத்துவதற்கான உரிமத்துக்கு விண்ணப்பித்து இருக்கிறோம். அதுவும் விரைவில் வந்து விடும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதமே எங்கள் பொருள் சந்தைக்கு வந்து விடும். எந்த நேரத்தில் எவ்வளவு பேருக்கு கேட்டாலும் தயாரித்து கொடுக்க தயாராக இருக்கிறோம்.

இப்போதே துபை, இலங்கை, மலேசியா உள்பட பல வெளிநாடுகளிலிருந்து தினசரி இருபதுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள், இ.மெயில்கள் வந்து கொண்டிருக்கின்றன. குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் எங்களுக்கு விருது வழங்கி கெளரவித்தது எங்களை தேசத்துக்கு அடையாளம் காட்டியிருக்கிறது.

உங்கள் ஆராய்ச்சியில் வேறு ஏதேனும் கண்டுபிடிப்புகள் உள்ளதா?

விபத்துகளால் மனிதர்களுக்கு தலையில் உள்ள மண்டை ஓடு உடைந்து விட்டால் சம்பந்தப்பட்ட நோயாளிகளுக்கு ஏற்றவாறு அளவு எடுத்து பொருத்தும் வகையில் ஓடு தயாரித்துக் கொடுக்கிறோம். இது வெளிநாடுகளிலிருந்து மட்டுமே பல மடங்கு அதிகமான விலையில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. நாங்கள் குறைந்த விலைக்கு தயாரித்து கொடுக்கிறோம். மண்டை ஓடுகள், தாடை எலும்புகள் ஆகியன மட்டும் இதுவரை மொத்தம் முந்நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு தயாரித்து கொடுத்துள்ளோம்.

போரில் காயமடையும் நம் நாட்டு ராணுவ வீரர்களுக்கு அதிக அளவில் இந்த ஓடுகள் தயாரித்து கொடுத்திருக்கிறோம். புனேயில் உள்ள ராணுவ மருத்துவமனை, ராணுவ வீரர்களுக்கு மருந்துப் பொருள்களை விநியோகிக்கும் 'அம்பாலா டெண்டல் கார்ப்ஸ்' எனும் நிறுவனம் உட்பட பலரும் எங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். எங்கள் தொழிற்சாலையில் தேசப்பற்று மிக்க ஆறு இளம் விஞ்ஞானிகள், 150 பணியாளர்கள் பணியாற்றுவதும் எங்கள் நிறுவனத்தின் தனிச்சிறப்பம்சம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com