உண்ணும் உறைகள்..!

உயிரி-நெகிழியின் நவீன வடிவமாக மக்கக் கூடிய, உண்ணத் தகுந்த நெகிழிகள் ஆய்வகங்களில் உருவாக்கப்படுகின்றன.
உண்ணும் உறைகள்..!

உயிரி-நெகிழியின் நவீன வடிவமாக மக்கக் கூடிய, உண்ணத் தகுந்த நெகிழிகள் ஆய்வகங்களில் உருவாக்கப்படுகின்றன. உதாரணமாக, உண்ணத் தகுந்த நெகிழிகளால் உறையிடப்பட்ட கடலைமிட்டாயை வாங்கும் ஒருவர் அதை உறையுடனேயே உண்ண முடியும். இந்தப் புதுவகையான உண்ணும் உறைகளை தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்தப் பல்கலைக்கழகத்தின்  மீன்வளப் பொறியியல் கல்லூரியின் உதவிப் பேராசிரியரும் அடிப்படை அறிவியல் துறைத் தலைவருமான தே.கேசவனிடம் பேசியபோது:
''நாட்டில் உணவு, உணவுப் பொருள்களுக்கான நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால், பலதரப்பட்ட மக்களுக்கு ஏற்றவாறு சமைக்கத் தயாராக உள்ள அல்லது உண்ணத் தயாராக உள்ள பல தரப்பட்ட உணவுப் பொட்டலங்கள் கடைகளில் கிடைக்கின்றன. அந்த வகையில்,  உறையிடப்பட்ட தேயிலைத் தூள் கடைகளில் மட்டுமின்றி வீடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. வெதுவெதுப்பாக உள்ள பால் அல்லது நீரில், இந்த தேயிலை பொட்டலத்தை பயன்படுத்தும்போது, தேநீர் உருவாகின்றது. இவற்றை சமைப்பதற்குத் தயாராக உள்ள உணவுகள் என அழைக்கிறோம்.
இந்தப் பொட்டலங்கள் பாலி புரொப்பலீன், பாலிதீன் போன்ற மறுசுழற்சி செய்ய முடியாத, மக்காத நெகிழிகளால் உருவாக்கப்படுகின்றன. நெகிழிப் பொட்டலமானது சுமார் 1,160 கோடி நுண் நெகிழிகளை ஒரு கோப்பை தேநீரில் வெளியிடுவதாகவும், இது உடல்நலத்துக்கு மிகவும் கேடானது எனவும் அண்மையில் வெளியான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. 
ஒருமுறை மட்டும் பயன்படுத்தி வீசப்படும் நெகிழிகளுக்கு அரசு தடை விதித்த பிறகு பெருவாரியான கடைகளில், இயற்கையாகவே எளிதாக மக்கக்கூடிய பொருள்களைப் பயன்படுத்தும் நோக்கில்  பல்வேறு உயிரி-நெகிழிகள் (பயோ பிளாஸ்டிக்) சந்தைகளுக்கு வரத்தொடங்கியுள்ளன. உயிரி-நெகிழிகள் பெரும்பாலும் குறிப்பிட்ட ஆய்வகச் சூழலில் மட்டுமே மக்கும் தன்மையுடைவையாக உள்ளன.
இன்றைய சூழலில் உயிரி-நெகிழிகள் உணவுப் பொருள்களைப் பாதுகாப்பதற்குப் பயன்படுத்துவது கிடையாது. உதாரணமாக பேக்கரிகளில்  தயாரிக்கப்படும் ரொட்டி, கடலை மிட்டாய், இனிப்பு வகைகள், மளிகைப் பொருள்கள் போன்றவற்றுக்கு பாலிதீன் போன்ற மக்காத நெகிழிகளே பயன்படுத்தப்படுகின்றன.
மக்காத , மறுசுழற்சி செய்ய முடியாத நெகிழிகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புக்கான தீர்வு கைக்கெட்டும் தூரத்தில் இல்லை. இதற்கு முக்கியமான அறிவியல் பூர்வமான காரணம் பாலிதீன் போன்ற மக்காத நெகிழிகள் கொண்டிருக்கும் பண்புகளான ஸ்திரத்தன்மை, நீள்தன்மை, எடை தாங்கும் தன்மை, வெப்பத்தால் எளிமையாக உறையிடும் தன்மை, உறையினுள் உள்ள பொருள்களை வெளிப்படையாக கண்ணால் காணும் தன்மை ஆகியவற்றை பெரும்பாலான உயிரி-நெகிழிகள் கொண்டிருப்பதில்லை.
இதற்கு மாற்றாக மேற்கூறிய பண்புகளுடன் உயிரி-நெகிழியின் நவீன வடிவமாக மக்கக்கூடிய மற்றும் உண்ணத்தகுந்த நெகிழிகள் ஆய்வகங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக, உண்ணத்தகுந்த நெகிழிகளால் உறையிடப்பட்ட கடலைமிட்டாயை வாங்கும் ஒருவர் அந்த கடலை மிட்டாயை உறையுடனேயே உண்ண முடியும். 
 உறையை கீழே வீசினாலும் சுற்றுச்சூழலுக்கு எந்த மாசுபாடும் ஏற்படாது. உண்ணத்தகுந்த உறைகளைப் பயன்படுத்தி உணவுப்பொருள்களை விற்பனை செய்யும் போது இனி வரும் காலங்களில் சுற்றுச்சூழல் மேலும் மாசுபடாமல் காக்க முடியும்.
மீனின் ஊட்டச்சத்துகளை அதிகப்படியான மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையிலும் கிராமப்புற தொழில்,  வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் ஒரு முன்னோடி ஆராய்ச்சித் திட்டமாக, தேயிலைப் பொட்டலங்களைப் போன்று சமைக்கத் தயார் நிலையில் உள்ள மீன் சூப் தூள் பொட்டலங்கள்  மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.
மீன் சூப் தூள் பொட்டலங்களை சுடுநீரில் கலந்தவுடன் உறையும் கரைந்து மீன் சூப்பானது சுவைக்க தயாராகின்றது. இந்த ஆராய்ச்சிக்கு மத்திய அரசின் மேம்பட்ட இந்திய பிரசார் (உன்னத் பாரத் அபியான்) நிதியுதவி செய்துள்ளது. 
உண்ணும் உறை அல்லது பொட்டலம் உருளைக்கிழங்கு மாவை கொண்டு செய்யப்படுகிறது. இந்த உறைகளை உண்ணவும், சமைக்கவும் முடியும். இதே தொழில் நுட்பத்தைப் பின்பற்றி ரொட்டி, சாக்லேட், கடலை மிட்டாய், பிற உணவு பொருள்களுக்கும், தேயிலை தூளுக்கும் கூட உண்ணும் உறைகள் தயாரிக்க முடியும்.
தொழில்நுட்பத்தை விரிவாக்கம் செய்யும் நோக்கில் நாகை மாவட்டத்தில் மஞ்சக்கொல்லை மற்றும் வடக்குடி கிராமங்களில் முதல் கட்டமாக 100 மகளிருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களை உண்ணும் உறைகளை தயாரிக்கும் தொழில்முனைவோராக உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உண்ணும் உறைகள் வெள்ளை நிறம் மட்டுமின்றி, பீட்ரூட், கேரட், மஞ்சள் உள்ளிட்ட பயிர்களின் மூலம் பல வண்ணங்களிலும் தயாரிக்க முடியும். குறிப்பாக,  மீன் சார்ந்த உணவுப் பொருள்கள் ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருப்பதால், அவை எளிதில் கெட்டுவிடும் தன்மையுடையது. உண்ணும் உறைகளில் உள்ள மீன் பொருள்கள் கெட்டுப்போகும்போது, உறைகளின் நிறம் மாறிவிடும். நல்ல பொருள்களை வாங்குவதற்கு உண்ணும் உறைகள் உதவியாக இருக்கும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com