பாலமந்திர் என்றொரு தாய்மடி

அன்பும் அறிவும் வளர்ப்பும்: பாலமந்திர் அறக்கட்டளையின் 75 ஆண்டுகால சேவை
பாலமந்திர் என்றொரு தாய்மடி

சென்னையின் அதிக நெருக்கடியும் சந்தடியும் கொண்ட இடங்களில் ஒன்றான ஜி. என். செட்டி சாலையில் அமைதியும் அழகும் எளிமையும் கொண்டு அமைந்திருக்கிறது "பாலமந்திர் காமராஜர் அறக்கட்டளை, இடம் மட்டுமல்ல; அதன் சேவையும்கூட அமைதிதான். ஆனால், விளிம்புநிலை மக்களின் வாழ்வில் ஏற்றமும் தரக் கூடியதாக அமைந்திருக்கிறது.

மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, முன்னாள் முதல்வர் காமராஜரின் ஊக்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்புதான் பாலமந்திர். அவரைப் பின்பற்றிய எளிமையும் ஆரவாரமற்றச் செயல்பாடும் இன்றைக்கும் இந்த அமைப்பின் கொள்கைகளாக இருப்பதுதான் சிறப்பு. பாலமந்திர் தனது 75-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கிறது.

1949-ஆம் ஆண்டில் முன்னாள் முதல்வர் காமராஜர், அன்னை எஸ். மஞ்சுபாஷினி ஆகியோர் விளிம்புநிலை மக்களுக்கு உதவிக்கரம் கொடுக்க , "பால மந்திர்' என்ற அமைப்பைத் தொடங்கினர். பின்னர், 1975-இல் "பாலமந்திர் காமராஜர் அறக்கட்டளை' என்று பெயர் மாற்றம் பெற்றாலும், அதன் செயல்பாடுகளிலும் நோக்கத்திலும் மாற்றமில்லை.

அன்று முதல் இன்று வரை முதன்மையான சமூக நல அமைப்பாகவும், கடினமான சூழ்நிலையில் உள்ள குழந்தைகளுக்கும், சமூக-பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குழந்தைகளுக்கும் அடைக்கலம் அளித்து வருகிறது.

ஆதரவற்றோர் இல்லத்தில் பெற்றோர் இல்லாத, கைவிடப்பட்ட, ஆதரவற்ற குழந்தைகளுக்கு பாதுகாப்பான உறைவிடத்தை வழங்கி அவர்கள் நிம்மதியாக வளர வழிவகை செய்கின்றனர். கடந்த 75 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் இன்று வளர்ந்து, நல்லதொரு நிலையில் இருக்கின்றனர்.

இதுகுறித்து அறக்கட்டளையின் கௌரவப் பொதுச் செயலாளர் மாயாவிடம் பேசியபோது:

""பிறந்த குழந்தைகள் முதல் ஆறு வயதான குழந்தைகள் வரை அரசு எங்களிடம் ஒப்படைக்கும் குழந்தைகளை அரவணைத்துக் காப்பது எங்கள் கடமை.

இந்த அமைப்பை அன்னை மஞ்சுபாஷினி நடத்தி வந்தது வரை வாசலில் ஒரு தொட்டில் இருக்கும். அதிலே கொண்டு வந்து விடப்படும் எந்தக் குழந்தையும் பாலமந்திர் குடும்பத்தில் புதிய வரவாகக் கொண்டாடப்படும். இப்போது அந்த நடைமுறை இல்லை. அரசு எங்களிடம் பராமரிப்பதற்காகக் கொடுக்கும் குழந்தைகளை கவனித்துக் கொள்கிறோம். அடைக்கலமாக வந்த குழந்தைகளுக்கு உணவு, உறைவிடத்தோடு கல்வியும் தந்து அவர்களின் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

இதற்கென, வித்யாலயா ஆரம்பப் பள்ளி, சத்தியமூர்த்தி உயர்நிலைப் பள்ளி என இரண்டு பள்ளிகள் இதே வளாகத்தில் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் தற்போது ஏறத்தாழ 420 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். இல்லக் குழந்தைகள் மட்டுமல்லாது, வெளியிலிருந்தும் ஏழ்மை நிலையில் உள்ள குழந்தைகள் இங்கே படிக்கின்றனர்.

குழந்தைகள் தரமான கல்வியைப் பெறுவதை உறுதிசெய்ய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நம்முடைய இல்லத்தில்அடைக்கலமாக இருக்கும் குழந்தைகளைத் தாண்டி பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் அவர்களோடு சேர்ந்து படிப்பதால்இருவரும் ஒருவருக்கொருவர் அன்பைப் பரிமாறிக்கொள்வதும் இங்கே அன்றாடம் நாங்கள் காணும் அற்புதம்.

அறக்கட்டளையின் சென்னையில் உள்ள இல்லத்தில் 180 குழந்தைகளும், நாகர்கோவிலில் உள்ள இல்லத்தில் 50 குழந்தைகளும் தற்போது வசிக்கின்றனர்.

குழந்தைகள், தங்கள் எதிர்காலத்தை வளமாக அமைத்துக் கொள்ள நடைமுறைத் திறன்களுடன் அவர்களைத் தயார் செய்வதற்காகக் கல்வித் தகுதியோடு தொழில் பயிற்சியும் அளிக்கிறோம். இதனால் இன்றைக்கும் நூற்றுக்கணக்கானோர் வெளியுலகத்தில் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்'' என்கிறார் மாயா.

இதுகுறித்து அறக்கட்டளையின் கௌரவ அறங்காவலரும் பொருளாளருமான நடராஜிடம் பேசியபோது:

""இல்லக் குழந்தைகளின் உடல், மன நலனில் முழுமையாகக் கவனம் செலுத்துகிறோம். வழக்கமான சுகாதாரப் பரிசோதனைகள், மருத்துவப் பராமரிப்பு, மனநல ஆலோசனைகள் வரை சேவைகள் வழங்குகிறோம். குழந்தைகள், அவர்களைப் பராமரிப்பவர்கள் ஊழியர்கள் என அனைவருக்கும் ஒரே விதமான சரிவிகித உணவு வழங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

குழந்தைகள் குறைபாடோடு பிறந்து விட்டால், இந்த உலகில் எப்படியும் வாழ வைத்துவிட வேண்டும் என்ற ஆதங்கம் பெற்றோருக்கு இருப்பதைப் புரிந்து கொள்ள முடியும். அப்படி குறைபாடோடு பிறந்த குழந்தைகளுக்கு அவர்களுக்கான பயிற்சி வகுப்புகளும் "மதுரம் நாராயணன் மையம்' பாலமந்திரில் செயல்பட்டு வருகிறது . உடல், மனம், அறிவுத்திறன் என மிக நுட்பமான தனித்த கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்குப் பயிற்சி வழங்குகிறோம். இதில் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளோடு பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு அவர்களை வழிநடத்துவதற்கான பயிற்சியும் பெறுகிறார்கள். இந்த மையத்தில் மட்டும் தற்போது 150 குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர்.

எல்லாவற்றுக்கும் அரசை எதிர்பார்த்துகொண்டிருத்தல் கூடாது என்று அறக்கட்டளை நம்புகிறது. பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்கு நல்ல உள்ளங்களின் ஆதரவும் உழைப்பும் கிடைப்பதால் தொய்வின்றி இத்தனை ஆண்டு காலமாகத் தொடர்ந்து நடத்த முடிந்திருக்கிறது. இன்னும் எங்கள் சேவை விரிவடையும்.

கரோனா தீநுண்மி காலத்தில், "கின்ஷிப்' என்ற சேவையைத் தொடங்கினோம். அதாவது, தொற்றால் பெற்றோர் இருவரையுமோ அல்லது எவரேனும் ஒருவரையோ இழந்த குழந்தைகளின் உதவிக்கு நாங்கள் தோள் கொடுத்தோம். அவர்களின் கல்வி, மனவளம் இவற்றில் அக்கறை செலுத்துகிறோம்.

இந்தக் குழந்தைகள் அவரவர் வீட்டில் அல்லது உறவினர்களிடம் வாழ்கிறார்கள். அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்குக் கல்விக்குப் பொருளாதார உதவி செய்கிறோம். அதைத் தாண்டி, அவர்களுக்கு கணிதம், ஆங்கிலம் என இணைய வகுப்புகளை வழங்குகிறோம். மனநல ஆலோசனையும் தகுந்த நிபுணர்களைக் கொண்டு வழங்குகிறோம். தொழிற்பயிற்சி வகுப்புகளும் வழங்கி வருகிறோம்.

"கின்ஷிப்' சேவை கரோனோவால் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவ ஆரம்பிக்கப்பட்டது என்றாலும், பல காரணங்களால் பெற்றோரை இழந்த குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்டு சேவையை விரிவுபடுத்தி வருகிறோம். சமூகத்தில் அதிர்ச்சி, துஷ்ப்ரயோகம், சுரண்டல் என கொடுமைகளைச் சந்தித்த குழந்தைகளின் வாழ்வில் நேர்மறை மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதே நோக்கம்.

சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி என ஒன்பது மாவட்டங்களில் வசிக்கும் 800-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சென்னையில் இருந்து இணைய வழியில் வகுப்புகள், ஆலோசனைகளை வழங்கி வருகிறோம்.

கோவையிலும் இந்தச் சேவையை அண்மையில் தொடங்கி, 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயனடைய வழி செய்கிறோம். இதனால் 14 மாவட்டங்களில் சேவை விரிவுபடுத்தியுள்ளோம்.

தேசத்தின் எதிர்காலம் என்பது இன்றைய குழந்தைகள்தான். அவர்களுக்கான சிறந்த நேர்மறை உலகை நாம் ஏற்படுத்திக் கொடுத்துவிட்டால், தேசத்தின் எதிர்காலம் சிறப்பாக அமைந்து விடும். அதனால் எங்கள் சேவைகள் அனைத்தும் குழந்தைகளை மையமாக வைத்தே இருக்கின்றன.

காமராஜரின் விருப்பமும் அன்னை மஞ்சுபாஷினியின் அயராத உழைப்பும் எங்களுக்குக் கற்றுக்கொடுத்திருப்பது இதுதான்.

எங்களுக்கு எதிர்காலத் திட்டம் என்றில்லை. நாங்கள் திட்டங்களை அறிவிப்பதில்லை. மாறாக, செயல்படுத்திய சேவைகளை மட்டுமே பேசுகிறோம். சேவைக்கான அவசியமும் களமும் மிக விஸ்தாரமாக இருக்கின்றன'' என்கிறார்.

இன்னும் பலஆயிரம் குழந்தைகளின் வாழ்வில், புன்னகை மலர்வதற்கான நம்பிக்கை அவரது வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

படங்கள்: ப.ராதாகிருஷ்ணன், எஸ். ஆனந்த்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com