கண்களைக் கவரும் வரலாற்றுப் பொக்கிஷம்

பாரம்பரியத்தின் சாரம் சேர்ந்த சென்னையின் அழகு
கண்களைக் கவரும் வரலாற்றுப் பொக்கிஷம்

சுற்றுலாப் பயணிகளுக்குத் தங்கள் குடும்பத்தினரை மகிழ்விக்கவும், குழந்தைகளுக்கு அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும் ஏதுவாக சென்னையில் பல இடங்கள் உள்ளன. குறிப்பாக, பிர்லா கோளரங்கம், வள்ளுவர் கோட்டம், காந்தி மண்டபம், வண்டலூர் பூங்கா, மெரினா கடற்கரை உள்ளிட்டவற்றோடு, பல தீம் பார்க்குகளும் உள்ளன.

இருந்தபோதிலும் அனைவரையும் கவரக் கூடிய வகையில் கலைப் பொக்கிஷங்களின் தாயகமாக விளங்குகிறது நூற்றாண்டைக் கடந்த எழும்பூர் அரசு அருங்காட்சியகம்.

1851-இல் அப்போதைய சென்னை மாகாண ஆளுநர் ஹென்றி பாட்டிங்கரின் முயற்சியால் நிறுவப்பட்ட இந்த அருங்காட்சியகத்தின் "வெளிப்புறச் சுற்றுச்சுவர்' முதல் உள்ளே அமைந்துள்ள "வெண்கலச் சிற்பக்கூடம்' வரை அனைத்துமே தனிக்கவனம் செலுத்தி பாதுகாக்கப்பட வேண்டிய வரலாற்றுப் பொக்கிஷங்கள். சவாலான கலைப்படைப்புகளான இங்குள்ள பொருள்களைப் போன்றே, பழமை மாறாமல் பராமரிப்பதும் கடும் சவால் நிறைந்து.

புதுப்பொலிவு பெற்ற தேசியக் கலைக் கூடம்:

இந்த அருங்காட்சிய வளாகத்தில் குறிப்பிட்ட கால இடைவெளியில் பல ஆகச் சிறந்த கட்டுமானப் பணிகளை ஆங்கிலேயர்கள் மேற்கொண்டுள்ளனர். இதில் இந்து, முகலாய, பாரசீக, ரோமானிய கட்டடக் கலையின் கலவையான "இண்டோசராசனிக்' பாணியில் கட்டப்பட்ட அருங்காட்சியகக் கலையரங்கமும், விக்டோரியா மகாராணியின் பொன்விழாவை முன்னிட்டு கட்டப்பட்ட நினைவு அரங்கமும் குறிப்பிடத்தகுந்தன.

1909-ஆம் ஆண்டு கட்டப்பட்ட விக்டோரியா அரங்கமானது, 1951-ஆம் ஆண்டில் தேசியக் கலைக்கூடமாக மாற்றப்பட்டு, இந்திய ஓவியக் கலையின் கருவூலமாகத் திகழ்ந்தது. அதேபோல், 1900-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட அருங்காட்சியக் கலையரங்கக் கட்டடத்தில் பரதநாட்டியம் உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

"வயோதிகம் மனிதனுக்கு மட்டுமல்ல; கட்டுமானங்களுக்கும்தான்' என்பதற்கேற்ப மழைநீர்க் கசிவால் பழுதுபட்ட இந்த இரு கட்டடங்களும் சில ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுவந்தன.

அருங்காட்சியகத்தின் ஆச்சரியத்தைக் காண ஒருநாள் போதாத நிலையில், பார்வையாளர்கள் மதிய உணவருந்த அருங்காட்சியகத்தின் வளாகத்தின் வெளியே பாந்தியன் சாலையில் உள்ள உணவகங்களையே நாடும் சூழல் இருந்தது. இந்தக் குறையைப் பூர்த்தி செய்யும் வகையில் மங்களூர் கூரை ஓடுகள் வேயப்பட்ட பழமையான கட்டடத்தை பாரம்பரிய உணவகமாக மாற்றும் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்றது.

அனைத்துப் பணிகளும் கடந்த ஜனவரியில் முழுவதுமாக நிறைவு பெற்ற நிலையில், இதன் திறப்பு விழா ஏற்பாடுகளை அருங்காட்சியகங்கள் துறை கோலாகலமாக ஏற்பாடு செய்தது.

கலை ஆர்வலர்களின் பல ஆண்டு கால ஏக்கத்தையும் , கூடவே சேர்த்து பார்வையாளர்களின் பசியையும் போக்கும் வகையில், தேசியக் கலைக்கூடம், அருங்காட்சியகக் கலையரங்கத்தோடு சேர்த்து பாரம்பரிய உணவகத்தையும் தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கடந்த பிப். 6-இல் திறந்து வைத்தார்.

குளுகுளு வென குளிர்சாதன வசதியோடு, புதுப்பொலிவுடன் ரம்மியமான சூழ்நிலை கொண்டிருந்த தேசியக் கலைக்கூடத்தில் மரவேலைப்பாடுகள் உள்பட அனைத்துப் பணிகளுக்கும் அதிக சிரத்தை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு கிஞ்சித்தும் குறையாமல் அதே அனுபவத்தைத் தந்து கண்களைக் கவர்ந்தன அருங்காட்சியகக் கலையரங்கமும், பாரம்பரிய உணவகக்கூடமும்!

தேசியக் கலைக்கூடத்தில் சோழ, பல்லவ, மராட்டிய, ராஜபுத்திர, முகலாய மன்னர்கள் காலத்து வண்ணமயமான ஓவியங்களும், திருவிதாங்கூர் மகாராஜாவின் தந்தத்தாலான பேழையும், சந்தனப் பேழைகளும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றன.

இதுகுறித்து சிலரிடம் பேசினோம்:

தமிழக அருங்காட்சியகங்கள் துறையின் உதவி இயக்குநர் சுந்தரராஜன்:

ஐரோப்பிய கலைநுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து, ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்திய ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் வெளிநாட்டினரை அதிகம் ஈர்க்கின்றன. ராஜராஜ சோழன் காலத்து நாணயங்கள் முதல் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் வரை இங்கே அனைத்தும் தனிச்சிறப்பு மிக்கவை. புனரமைப்புப் பணிகளுக்காக, மூடப்பட்டிருந்த தேசியக் கலைக்கூடம் திறக்கப்பட்ட பின்னர் பார்வையாளர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது.

அருங்காட்சியகக் கலையரங்கத்தில் மீண்டும் பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற தொடங்கியுள்ளன. இதனோடு சேர்த்து திறக்கப்பட்டுள்ள பாரம்பரிய உணவுக்கூடம் மார்ச் மாத இறுதிக்குள் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வரும்.

1906-ஆம் ஆண்டில் தேசியக் கலைக்கூடம் கட்ட பயன்படுத்தப்பட்ட பிரத்யேக இளஞ்சிவப்புக் கற்கள் ஆந்திர மாநிலத்தில் உள்ள சத்தியவேடு என்ற இடத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. தற்போது அந்தக் கற்கள் சற்றே கருமை நிறத்துடன் மட்டுமே கிடைக்கின்றன. அவ்வகையில் பார்த்தால், இக்கலைக்கூடம் கட்ட பயன்படுத்தப்பட்ட கற்கள் தற்போது எங்கேயும் கிடைப்பதில்லை.

முற்றிலுமாக அழிந்துவிட்ட சிவப்புத் தலை வாத்து, 1987-ஆம் ஆண்டு வாக்கில் தென்பட்ட மலபார் சிவெட்டின்(மலபார் புனுகுப்பூனை) பாடம் செய்யப்பட்ட உடல்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இனி வரும் தலைமுறை இந்த உயிரினங்களை உலகில் இங்கு மட்டுமே காண முடியும்.

ராஜாரவிவர்மாவின் ஓவியங்கள், சிந்துசமவெளி, ஆதிச்சநல்லூர் அகழாய்வுப் பொருள்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்திய நாகரீகத் தொன்மை குறித்து ஆச்சரியப்பட வைக்கிறது.

இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு குறித்து வெளிப்படுத்தி பார்வையாளர்களைக் கவர சுற்றுலாத் துறையுடன் இணைந்து விரைவில் லேசர் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம்.

தமிழ்நாடு ஓவியர் சங்க மாநில இணைச் செயலர் எல்.சி.நாராயணன்:

ஓவியங்கள், பழம்பொருள்களின் மதிப்புணர்ந்து வெளிநாட்டினர் இதனைக்காண வருவது பெருமைப்படும் வகையில் இருந்தாலும், தமிழர்களும் இவற்றின் பெருமைகளை முழுமையாக உணர்ந்து கலைஆர்வத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இங்குள்ள ஓவியங்கள் பல மிகச்சிக்கலானவை. அதனை புரிந்து கொள்ள மிகவும் பொறுமை அவசியம். சில ஓவியங்கள் குறித்து திரைகளில் காட்சிப்படுத்தப்படுகின்றன. இருந்தாலும், ஊழியர்கள் எவரேனும் ஓவியங்களின் முன் நின்று பார்வையாளர்களுக்கு விளக்கிக்கூறினால் ஓவியக்கலையின் சிறப்பை அனைவரும் அறிந்துகொள்ள ஏதுவாக அமையும்.

கிண்டியைச் சேர்ந்த நீலகண்டன்:

கன்னிமாரா நூலகம் உள்பட இங்குள்ள அனைத்துமே பழம்பெருமை வாய்ந்தவை தான். இது வெறும் அருங்காட்சியம் மட்டுமல்ல; இந்திய கலாசாரம், பண்பாட்டின் வரலாற்றுப் பிரதிபலிப்பு. நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாக இருந்த உணவகக்கூடம் திறக்கப்பட்டுள்ளது. விரைவில் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், சுற்றுலாப் பயணிகளுக்கு மிகச்சிறந்த இடமாக எழும்பூர் அருங்காட்சியகம் அமையும்.

ம.பெரியமருது

படங்கள்: சு.ஆனந்த்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com