சக மனிதர்கள் மேல் அன்பு கூடும்!

வாழ்க்கையின் விதியை மாற்றும் அன்பின் சக்தி!
சக மனிதர்கள் மேல் அன்பு கூடும்!

"வாழ்க்கையில் சில பாடங்கள் உண்டு. அதை எல்லோரும் உணரும் கட்டம் வரும். சிலருக்கு வந்து போகும். பலருக்கு ஆறாத ரணங்கள் தரும். இங்கேயும் ஒரு சாதாரணமான மனிதனை சூழல் மாற்றி மாற்றி வைக்கிறது. நாம் ஒன்று நினைத்தால் வாழ்க்கை விளையாட்டில் போய்ச் சேருகிற இடம் வேறு ஒன்றாக இருக்கிறது. எவ்வளவோ கஷ்டங்கள் அனுபவிக்கிறோம், சிக்கல்களிலிருந்து விடுபட தவிக்கிறோம். இத்தனைக்கும் நடுவில் தாமரை இலைத் தண்ணீர் போல இங்கேயுள்ள வாழ்க்கையில் ஒரு நம்பிக்கை இருக்கிறதே... அது எனக்கு ரொம்ப ஆச்சரியம். சிரிக்க மட்டும் வைக்காமல், இப்படி சிந்திக்க வைக்கவும் முடிகிற கதைதான் இது.'' } நம்பிக்கை கரம் நீட்டுகிறார் இயக்குநர் பாலாஜி மாதவன். இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர். "இடி மின்னல் காதல்' படத்தின் மூலம் கோடம்பாக்கத்துக்கு அறிமுகமாகிறார்.

"இடி மின்னல் காதல்' தலைப்புக்கு பொருள் தருகிற விதம் எப்படி...

நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படி ஒருவனை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது. இந்த தலைப்பு எத்தனை பொருத்தம் என்பது படம் பார்க்கும் போது தெரியும். மனிதன் யாரோ ஒருவரிடத்தில் ஒரு காதலை மீட்டெடுத்துக் கொண்டுதான் இருக்கிறான். அது அன்பாக, நேசமாக இடத்துக்கு, மனிதனுக்கு தகுந்தது போல் மாறி விடுகிறது.

அப்படி இந்த கதையில் வருகிற ஆறு கதாபாத்திரங்களுக்குள் ஒவ்வொரு விதமான காதல், அன்பு எல்லாம். அப்போது நிகழும் ஒரு விபத்து, எத்தனை பேருடைய ஆசைகளை, கனவுகளை கலைத்துப் போடுகிறது என்பதுதான் ஒன்லைன். நமக்கெல்லாம் நன்கு தெரிந்த, நமக்கு மிகவும் சலிப்பைத் தரக்கூடிய செய்தியான "அதிவேகம் ஆபத்து' என்ற செய்திதான்... ஒரு விபத்தில் பலியாவது உயிர்கள் மட்டுமல்ல, பல கனவுகளும் ஆசைகளும்தான். ஓர் உயிரின் இழப்பு பல உயிர்களின் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிடுகிறது. ஒருசில நிமிட அவசரத்தால் ஏற்படும் விபத்து சிலரின் உயிரை குடித்து பலரை வாழ்நாள் முழுதும் பாதிக்கிறது என்பதை இயல்பான அம்சஙகளுடன் சொல்ல வருகிறேன். ஒரு நிமிட சம்பவத்தின் புனைவு, சினிமாவின் வியாபாரத்துக்கான சமரசங்கள் எல்லாமும் இந்த கதை. வாழ்க்கை நம்மை புரட்டிப் போட்டால் எல்லாமே மாறும். அப்போது மனிதர்களைத் தெரிந்துக் கொள்கிற விந்தையும் நடக்கும். அப்போது நிகழ்கிற அற்புதங்களும் அபத்தங்களும்தான் இந்தக் கதை என்று ஒரு வரையறைக்குள் நாம் எல்லோரும் வரலாம்.

கதையின் பேசு பொருள்.... இன்னும் தெளிவாக...

இந்த கதையில் வரும் கதாபாத்திரங்களுக்குள் நிரம்பி கிடப்பது எல்லாமே அன்பு, நேசம். அப்போது திடீரென்று ஒரு விபத்து.

சுதந்திரத்துக்கும் கனவுக்கும் இடையில் சிக்கிக் கொண்டு திண்டாடும் எளியவர்களின் போராட்டம், எத்தனிப்பு இப்படித்தான் கதை இருக்கும். ஒரு கட்டத்தில் நிராகரிப்புகளும், புறக்கணிப்புகளும் மலிந்து விட்ட இந்தச் சமூகத்தின் மேல் எளியவர்களுக்கு கோபம் வருவது இயல்புதான். மற்ற பிரச்னைகள் எல்லாவற்றையும் விட, கல்வியால், ஜாதியால் எழுகிற பாகுபாடுகள் இங்கே பெரிய பிரச்னை. ஒரு சினிமா இரண்டு மணி நேரம்தான். ஆனால், ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் இங்கே 24 மணி நேரம். இங்கே சந்திக்கும் முகங்கள், சம்பவங்கள், தத்துவம், துயரம், சந்தோஷம் இப்படி எத்தனையோ இருக்கின்றன. வாழ்க்கைதான் நாம் யோசிக்கவே முடியாத சினிமா. கற்பிக்கப்பட்ட கல்வி, அதன் நியாய, தர்மங்கள் எல்லாமும்தான் இந்த வாழ்க்கை. ஏதேதோ யோசனைகளில் இருக்கும் போது, திடீரென்று ஒரு உணர்வு எழும். அதை மனசும் ஆமோதிக்கும். சில நேரங்களில் அந்த உணர்வு எந்த எல்லைக்கும் எடுத்து செல்லும். அப்படியான உணர்வுதான் இந்த சினிமா.

முதல் படம் ஆஸிட் டெஸ்ட் மாதிரி... அதுவும் தயாரிப்பாளராக இருப்பது பெரிய அழுத்தம் இல்லையா...

எங்கே போகிறோம், எப்படி போகிறோம், எங்கே தங்குகிறோம், என்னென்ன பார்க்க போகிறோம் என இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஏற்கெனவே தீர்மானித்துக் கொண்டுதான் வந்திருக்கிறேன். சம்பாதிப்பதை நல்லப் படியாக சேர்த்து வைத்துக் கொள்ளாமல் நீயே சினிமா தயாரிப்பதெல்லாம் தேவையா என்று கேட்காதவர்கள் இல்லை. அப்போதெல்லாம் மனசுக்கு பிடித்ததைத்தானே செய்கிறோம் என உள்ளுக்குள் ஒரு அலை அடிக்கும். அருவா, ஆபாசம் என நாடு போற்றும் வெள்ளி விழா படங்களை எடுத்தால், சமூகத்தை கெடுக்கிறீங்களே என்று கேட்காலம். சமூகத்தின் தற்போதைய தேவை உணர்ந்து நான் எடுத்து வைக்கிற ஒரு கதை இது. இதை நானே தயாரிக்கலாம் என தோன்றியதால் தயாரிக்கிறேன். அவ்வளவுதான். என்னைப் போல் இதில் அறிமுகமாகிற ஒளிப்பதிவாளர் ஜெயசந்தர்... இந்தப் படத்தின் இன்னொரு தயாரிப்பாளர். எங்கள் இருவருக்கும் இந்தக் கதையின் மேல் இருந்த நம்பிக்கைதான் இந்தப் படம். இங்கே யாரும் சுயம்பு கிடையாது என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். அனுபவங்கள் மூலமாகவே நான் எதையும் புரிந்துக் கொள்ள விரும்புகிறேன். உணர்வுகள், உறவுகள், கனவுகள், இன்பங்கள், துன்பங்கள் எல்லாவற்றையும் அனுபவிக்கவும் ரசிக்கவும்தானே வாழ்க்கை. என் வாழ்க்கையை நானே வாழ்ந்து பார்க்கும் தருணம் இது.

பிக்பாஸ் புகழ் சிபி ஹீரோவாக நடிக்கும் முதல் படம்...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் காட்டிய ஒரு உணர்வு... இந்தக் கதையின் அடிநாதம். அப்போதே இவர்தான் இந்தப் படத்துக்கு ஹீரோ என முடிவு செய்து விட்டேன். . சினிமாவுக்குப் பழக்கமான முகமாக இருந்தாலும் எனக்கு சரியாகப்பட வேண்டும் அந்த முகம். அந்த முறையில் சிபி சூப்பர். ஆனால் சினிமா வேட்கை உள்ள இளைஞன். அந்த அற்புத காதலி பவயா. இன்னொரு இடத்தில் ஆரண்ய காண்டம் யாஷ்மின். ஏற்கெனவே நடிப்பில் அவர் ஜீனியஸ்... ஒரு முக்கிய இடத்தில் ராதாரவி. நண்டு ஜெகன் என அனுபவம் உள்ளவர்கள். எனக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். அவ்வளவுதான். எல்லோரும் இயல்பான நடிப்பில் ஈர்ப்பார்கள். கதையின் உண்மைத்தன்மைக்கு பக்கத்தில் இருப்பவர்களை மட்டுமே இந்தப் படத்தில் பயன்படுத்திக் கொள்ள விரும்பினேன். இந்த நேரத்தில் நமக்குக் கிடைக்கிற நண்பர்கள், நாம் தேடிக்கிற சந்தோஷம், நம்ம உலகம் எல்லாமே அழகாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com