மலையடிப்பட்டி குடைவரை!

பாறைக்குடையில் பல்லவ கால சிற்பக் கோயில்கள்
மலையடிப்பட்டி குடைவரை!

புதுக்கோட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட மலையடிப்பட்டி இயற்கை எழில் நிறைந்ததொரு கிராமம். இங்குள்ள பெரிய பாறையில், சிவன், அனந்தபத்மநாப சுவாமி என இரண்டு கோயில்கள் ஒன்றாக இணைந்து இரு குடைவரைக் கோயிலாக அமைந்திருக்கின்றன.

திருச்சியிலிருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கோயில், நந்திவர்மன் எனும் பல்லவ மன்னரால் உருவாக்கப்பட்டிருக்கலாம் என தல வரலாறு கூறுகிறது.

கி.பி. 730-இல் அவர் இங்குள்ள மலையை குடைந்து வாகீஸ்வரர் என்றழைக்கப்படும் கோயில் எழுப்பினார் என்றும் விஷ்ணு கோயிலானது காலத்தால் பிந்தியது என்றும் தெரிகிறது. இங்கு நரசிம்மமூர்த்தி, திருமால், அனந்த சயனமூர்த்தி, ஆதிசேஷன் ஆகியோரின் சிற்பங்கள் மலையில் செதுக்கப்பட்டுள்ளன.

தெளிவாகச் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் சுவற்றிலும் தூண்களிலும் நிறைந்திருக்கின்றன. 15 அடி உயரத்தில் மூலவர் சிலை செதுக்கப்பட்டிருக்கிறது, மூலவர் சிலையைச் சுற்றிலும் தேவக் கணங்களும் தெய்வ வடிவங்களும் என்ற வகையில் ஒரு கலைப்பொக்கிஷமாக இந்தச் சுவர் காட்சியளிக்கிறது.

கோயிலில் ஆங்காங்கே கல்வெட்டுக்கள் உள்ளன. கிபி.960-ஆம் ஆண்டில் ராஜ கேசரி சுந்தரச் சோழன் கால கல்வெட்டுகளும் உள்ளன.

இந்தக் குடைவரை கோயிலின் அருகில் இருக்கும் பிரம்மாண்ட வடிவ பாறைகளின் மேல் சமணப் படுகைகள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருக்கின்றன.

7-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் இந்தப் பகுதியில் சமணம் செழித்து இருந்திருக்க வேண்டும் என்பதை இந்த சமணப் படுகைகள் உணர்த்துகின்றன. தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்பை உணர்த்தும் கலைக்கோயில்கள் பட்டியலில் ஒன்றாக இந்தக் கோயில் இடம்பெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com